திருப்பரங்குன்றம்- சர்வே கல்லில் தீபம் ஏற்றுவதா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ’பரபர’ வாதம்- என்ன நடந்தது?

By Mathi

|

Published on 17 Nov 2026, 7:18 PM

Thiruparankundram Deepam Case- Supreme Court

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 17) வாதிட்டது. 100 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். அந்தத் தூண் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நில அளவைக் கல் என்றும், அங்கு தீபம் ஏற்றும் பாரம்பரிய வழக்கம் இல்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது. ஆனால், தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றுவதால் தர்காவின் உரிமைகள் பாதிக்கப்படாது என்றும், பக்தர்களின் உரிமைகளைத் தடுக்க முடியாது என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

இந்த உத்தரவை 2026 ஜனவரி 6-ந் தேதி சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. தூண் என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்து நில அளவைக் கல் என்ற தமிழக அரசின் வாதத்தையும் நிராகரித்தது.

ADVERTISEMENT

தமிழக அரசு மேல்முறையீடு

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வரும் நவம்பர் 24-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அவசரமாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (நவம்பர் 17) விசாரித்தது.

ADVERTISEMENT

தமிழக அரசு முன்வைத்த வாதங்கள்

இன்றைய விசாரணையில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா முன்வைத்த வாதம்: வரும் நவம்பர் 24-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப்படாவிட்டால், அன்றைய தினம் சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அவசரமாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்ததில்லை. இந்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது.

ஆகம விதிகளின்படி, உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றலாம் என்று கோயில் அர்ச்சகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். கோயில் நிர்வாகமே இதுதான் நடைமுறை என்று கூறும்போது, பொதுவாக நீதிமன்றங்கள் அதில் தலையிடுவதில்லை.

தமிழ்நாட்டில் பொதுவாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதாக உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்ததற்கான ஆதாரம் அல்ல.

உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படுவதாக கோயில் ஸ்தானிகர்கள் தெரிவித்துள்ளதுதான் பாரம்பரிய நடைமுறைக்கான ஆதாரம்.

தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்ததற்கான ஆதாரங்களை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை. சட்டப்பூர்வ உரிமை நிரூபிக்கப்படாத நிலையில், அங்கு தீபம் ஏற்றுமாறு கட்டாய உத்தரவு பிறப்பிக்க முடியாது.

100 ஆண்டுகால நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும்?

தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாபடே முன்வைத்த வாதம்: 100 ஆண்டுகளாக ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்றால், அதை ஏன் மாற்ற வேண்டும்?

மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்து தவறானது. மலையின் உச்சியில் தர்கா அமைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக்கூடாது. தற்போதைய நிலையே தொடர அனுமதிக்க வேண்டும்.

ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட கோரிக்கை

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திர சென் முன்வைத்த வாதம்: தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது. ஏற்கெனவே நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் விசாரிக்கக் கூடாது என்ற Res Judicata சட்டக் கோட்பாட்டுக்கு இந்தக் கோரிக்கை எதிரானது.

மாவட்ட ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனும் தமிழக அரசின் வாதங்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை முன்வைத்தார்.

தர்கா தரப்பு வாதம் என்ன?

இன்றைய விசாரணையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசேஃபா அகமதி முன்வைத்த வாதம்: தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்ததன் மூலம் உயர் நீதிமன்றம் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை தமிழக அரசு நிர்வாகம் செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றுவதற்கான உத்தரவுகளையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்தார். இந்த உத்தரவுகளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.

கடந்த ஜனவரி 6-ந் தேதி, தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என்றும், பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இவ்வாறு தர்கா தரப்பில் வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு என்ன?

தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நாளை (நவம்பர் 18) பிற்பகல் 2 மணிக்குத் தொடர நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் உத்தரவிட்டனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel