சென்னையில் இன்று டிசம்பர் 4-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது; ஆனால் இந்த தீர்ப்பை மறைத்துவிட்டு தனிநீதிபதியிடம் பொய்யான தகவலை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் (தர்கா அருகே) தீபம் ஏற்ற அனுமதி பெற்றுள்ளனர்; தமிழ்நாடு அரசு 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்ததோ அதன் அடிப்படையில்தான் செயல்படுகிறது; இப்போது தமிழக அரசை விமர்சிப்பவர்கள்தான் நீதிமன்றத்தின் 2014-ம் ஆண்டு தீர்ப்புக்கு எதிராக செயல்படுகின்றனர்; அவர்கள் மீது தமிழ்நாடு அரசு எந்தப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடர முடியும் என கூறியிருந்தார்.
திருப்பரங்குன்றம் கோவில் தீப விவகாரத்தின் பின்னணி தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன், சமூக செயற்பாட்டாளர் மீ.த. பாண்டியன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய அறிக்கையின் முழு விவரத்தை நமது மின்னம்பலத்தில் இன்று (டிசம்பர் 4-ந் தேதி) காலை பதிவிட்டிருந்தோம். அதில் திருப்பரங்குன்றம் தீபம் குறித்த வழக்குகளின் விவரங்கள், தீர்ப்புகள் விரிவாக பதிவிடப்பட்டுள்ளன. அதில் உள்ள விவரங்கள்:
1996-ம் ஆண்டு வழக்கு
1996 ஆம் ஆண்டு இந்து முன்னணியின் முன்னாள் நிர்வாகி தியாகராஜன் என்பவர் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு:
- உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில், தீபம் ஏற்றும் இடம்தான் பாரம்பரியமானது.
- வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமென யாரேனும் கோரிக்கை வைத்தால், கோயில் நிர்வாகம்தான் இடத்தை முடிவு செய்ய வேண்டும்.
- அப்படி கோவில் நிர்வாகம் முடிவெடுக்கும் போது தர்கா அருகில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
- தர்கா எல்லையில் இருந்து குறைந்தது 15 மீட்டர் தாண்டி ஒட்டுமொத்த மலைப்பகுதியில் கோயில் நிர்வாகம் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது.
1996-ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புக்குப் பின், உச்சி பிள்ளையார் கோயில் தீபத் தூண்தான் பாரம்பரியமாக தீபம் ஏற்றும் புனிதமான இடம் என முடிவு செய்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றி வருகிறது.
2014-ம் ஆண்டு வழக்கும் தீர்ப்பும்
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு சுப்ரமணியன் என்பவர்,
- திருப்பரங்குன்றம் மலையில் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றக்கூடாது; தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்; அதுதான் ஆகமப்படி சரியானது எனக் கோரிக்கை வைத்து, மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
- அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால், உச்சி பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ஆகமத்துக்கு புறம்பானது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யக் கோரினார்.
- ஆனால் உரிய ஆதார, ஆவணங்களை சுப்பிரமணியன் தாக்கல் செய்யாததால் W.P(MD)No.19422 of 2014 வழக்கு 04.12.2014 அன்று தள்ளுபடி ஆனது.
- அதன்பின் சுப்பிரமணியன், தாக்கல் செய்த WA(MD)No.1524 of 2014 மேல்முறையீட்டு மனு மதுரை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது;
அப்போது,
- கோயில் நிர்வாகமும், தர்கா நிர்வாகமும், முடிவெடுத்து பல பத்தாண்டுகளாக அமைதியான முறையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள்.
- தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகம ஆதாரம் எதுவும் இல்லை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கத் தேவையில்லை.
- எனவே வழக்கமாக ஏற்றப்படும், உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றலாம் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மிகத் தீர்க்கமாக 07.12.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
