திருப்பரங்குன்றம்.. ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிர்ப்பு ஏன்? தீபத் தூண் எது? வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விரிவான விளக்கம்

Published On:

| By Mathi

Thirupparankundram Deepam Row New

திருப்பரங்குன்றம் (Thirupparankundram) மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கூடிய வரலாற்று ரீதியான தீபத் தூண் எது? நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடம் தீபத் தூணா? எல்லைக் கல்லா? என்பது தொடர்பாக
மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக வழக்கறிஞர் வாஞ்சி நாதன்மற்றும் சமூக செயற்பாட்டாளர் மீ த பாண்டியன் ஆகியோர் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் மீ.த.பாண்டியன் அனுப்பிய மனு விவரம்:

ADVERTISEMENT

1.டிசம்பர்.1 மாலை சுமார் 5- 5.30 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்கா அருகே உள்ள Geological Survey of India – வின் எல்லைத் தூணை-தீபத்தூண் எனத் தீர்மானித்து, டிசம்பர்.3 அன்று காத்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். மிகுந்த அவசரமாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பு, சட்ட நெருக்கயைடியும், சமூகப் பதற்றத்தையும் மதுரையில் ஏற்படுத்தி உள்ளது.

2.திருப்பரங்குன்றம் மலையில் பல நூற்றாண்டுகளாக, கோயில் கருவறைக்கு நேர் மேலே உள்ள உச்சி பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதே நூற்றாண்டு காலப் பழக்கம்.திருப்பரங்குன்றம் மலையில் ஒரே ஒரு தீபத்தூண்தான் உள்ளது. திருமலை நாயக்கர் காலத்துக் கல்வெட்டு இதற்குச் சான்றாக உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா பட்டர்,அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்தும் இதுதான்.

2017-ம் ஆண்டு தீர்ப்பு என்ன?

ADVERTISEMENT

3.கடந்த 2014 ஆம் ஆண்டு சுப்ரமணியன் என்பவர், உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றக்கூடாது, தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் அதுதான் ஆகமப்படி சரியானது எனக் கோரிக்கை வைத்து, மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால், உச்சி பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ஆகமத்துக்கு புறம்பானது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யக் கோரினார். உரிய ஆதார, ஆவணங்களை சுப்பிரமணியன் தாக்கல் செய்யாததால் W.P(MD)No.19422 of 2014 வழக்கு 04.12.2014 அன்று தள்ளுபடி ஆனது. அதன்பின் சுப்பிரமணியன், தாக்கல் செய்த WA(MD)No.1524 of 2014 மேல்முறையீட்டு மனு மதுரை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது;

அதில்,கோயில் நிர்வாகமும், தர்கா நிர்வாகமும், முடிவெடுத்து பல பத்தாண்டுகளாக அமைதியான முறையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகம ஆதாரம் எதுவும் இல்லை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கத் தேவையில்லை எனவே வழக்கமாக ஏற்றப்படும், உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றலாம் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மிகத் தீர்க்கமாக 07.12.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

4.கடந்த 1996 ஆம் ஆண்டு இந்து முன்னணியின் முன்னாள் நிர்வாகி தியாகராஜன் என்பவர் இந்து முன்னணி ராமகோபாலனுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில், தீபம் ஏற்றும் இடம்தான் பாரம்பரியமானது, வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமென யாரேனும் கோரிக்கை வைத்தால், கோயில் நிர்வாகம்தான் இடத்தை முடிவு செய்ய வேண்டும். முடிவெடுக்கும் போது தர்கா அருகில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தர்கா எல்லையில் இருந்து குறைந்தது 15 மீட்டர் தாண்டி ஒட்டுமொத்த மலைப்பகுதியில் கோயில் நிர்வாகம் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது. 1996 தீர்ப்புக்குப் பின், உச்சி பிள்ளையார் கோயில் தீபத்தூண்தான் பாரம்பரியமாக தீபம் ஏற்றும் புனிதமான இடம் என முடிவு செய்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றி வருகிறது. உண்மை இவ்வாறிருக்க, தர்கா அருகில் உள்ள எல்லைக் கல்லை – தூபத்தூண் எனச் சொல்லி இந்து முன்னணி செய்த பிரச்சாரத்திற்கு நீதிமன்றம் பலியானது சட்டப்படி சரியல்ல.

ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு செல்லுமா?

5. தற்போதைய வழக்கைத் தொடுத்த இராம ரவிக்குமார் என்பவர் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தார். அதைப் பரிசீலித்த கோயில் நிர்வாகம் பல நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோவில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றுவோம், அதுதான் கோயிலின் பழக்க வழக்கம், ஸ்தானியர்கள் முடிவு எனத் தெரிவித்தது. இதனை எதிர்த்து ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், தற்போது நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் தீர்ப்பு வழங்கி உள்ளார். கார்த்திகை தீபம் தொடர்பாக, இதே வழக்கின் கோரிக்கையை வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு நீதிபதிகள் 2017 ஆம் ஆண்டு நிராகரித்து, உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதே சரியானது எனத் தீர்ப்பளித்த நிலையில், தற்போதைய ஒரு நீதிபதியின் தீர்ப்பை சட்டப்படி செல்லுமா ? இல்லையா? என்ற சட்டக் கேள்வி எழுந்துள்ளது. நீதித்துறை வழக்காறு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உயர் நீதிமன்றமும், இரு நீதிபதிகளின் தீர்ப்புக்கு ஒரு நீதிபதியும் கட்டுபட்டவர்கள். மேலும் கார்த்திகை தீபம் தொடர்பான பிரச்சனை ஏற்கனவே நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டநிலையில், வேறு காரணங்களைச் சொல்லி மறைமுகமாக மீண்டும் வழக்குத் தொடர முடியாது.CONSTRUCTIVE RESJUDICATA, JUDICIAL DISCIPLINE என்ற இச்சட்ட நிலைகள் கீழ்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    The Hon’ble Supreme Court has repeatedly held that principles of res judicata apply to writ proceedings under Article 226, including constructive res judicata.

    Key Judgments:

    1. Direct Recruit Class II Engineering Officers’ Assn. v. State of Maharashtra, (1990) 2 SCC 715
      – Held that principles of res judicata apply to writ jurisdiction.
    2. State of Karnataka v. All India Manufacturers Organisation, (2006) 4 SCC 683
      – Held: Once an issue has been adjudicated, the same cannot be reopened under Article 226.
    3. Forward Construction Co. v. Prabhat Mandal, (1986) 1 SCC 100
      – Constructive res judicata applies to writ proceedings, especially against repeated attempts on the same cause of action.
    4. Hope Plantations Ltd. v. Taluk Land Board, (1999) 5 SCC 590
      – No party is allowed to reagitate an issue decided earlier, even indirectly.
      DIVISION BENCH JUDGMENT OF 2017 BINDS THE PRESENT BENCH – JUDICIAL
      DISCIPLINE
    5. In W.A.(MD) No.1524 of 2014 decided on 2017, the Division Bench again reaffirmed the legal position and refused to alter the place of lighting the Karthigai Deepam at Thiruparankundram and permitted the temple administration to light the karthigai deepam at the traditional place called as Uchipillayar kovil mandapam .
    6. Once a Division Bench has laid down the law, a Single Judge is bound to follow the same.
      Supreme Court Judgments on Judicial Discipline:
      (i) Official Liquidator v. Dayanand, (2008) 10 SCC 1
      – Single judges cannot disregard binding decisions of a Division Bench.
      (ii) Central Board of Dawoodi Bohra Community v. State of Maharashtra, (2005) 2 SCC 673
      – A coordinate bench cannot differ from another coordinate bench; the only remedy is reference to a larger bench.
      (iii) Sub-Inspector Rooplal v. Lt. Governor, (2000) 1 SCC 644
      – Judicial discipline mandates strict adherence to earlier judgments.
      Therefore, Entertaining the present writ petition is itself contrary to judicial discipline, as a Single Judge cannot reopen or contradict findings of two earlier binding judgments on the identical issue.

    நீதிபதி இளங்கோவன் தீர்ப்பு என்ன?

    6. வக்ப் வாரியம் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் , இராம ரவிக்குமார் சொல்லும், தீபத்தூண் என்ற இடம் தீபத்தூண்தானா, அல்லது எல்லைக் கல்லா? என்பதைத் தீர்மானிக்க, எங்கள் தரப்பு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும், எல்லைகளை அளந்து வரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? என்பதற்கான விளக்கம் தீர்ப்பில் இல்லை.தர்கா தரப்பு வழக்கறிஞர்கள் , தீபத்தூண் இருப்பதாக சொல்லப்படும் இடம் தர்கா எல்லையில் வருகிறது, எனவே எல்லைகளை சிவில் நீதிமன்றம் வரையறுத்த பிறகே உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க முடியும் என்று வைத்த வாதமும் ஏற்கப்படவில்லை. தர்காவும் அதற்கு மேல் உள்ள மலைப்பகுதி முழுவதும் தர்கா நிர்வாகத்துக்குச் சொந்தம் என்று சிவில் நீதிமன்றத் நீதிமன்ற தீர்ப்பு உள்ள நிலையில், தர்காவுக்கு மேல் உள்ள உச்சிமலை பகுதியில் எல்லைகள் இதுவரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை, இதனால் பிரச்சனைகள் வருகிறது, கோயில் நிர்வாகத்துடன் எல்லைகளை அளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தர்கா சொன்னதை, கோயில் நிர்வாகமும் ஏற்று கொண்டு வழங்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்றத்தின் 04.08.2021 தேதிய W.P(MD)No.11001/2021 வழக்கின் தீர்ப்பு நீதிபதி இளங்கோவனால்வழங்கப்பட்டதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியும் நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்கள் அதனை ஏற்கவில்லை.

    எது தீபத் தூண்? நிரூபிக்க முடியுமா?

    7. மேலும் குறிப்பாக ( i ) அரசு, கோயில் மற்றும் இடையிட்டு மனுதாரர்கள் தரப்பில், தர்கா அருகில் உள்ள கல்லில், தீபம் ஏற்றும் பழக்கம் ஒருபோதும் கிடையாது, மனுதாரர் இராம ரவிக்குமார் தர்கா அருகில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறினால், அப்பழக்கம் இருந்ததை அவர் சிவில் நீதிமன்றத்தை அணுகித்தான் நிரூபித்துக் கொள்ள வேண்டும்,
    (ii) மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எந்த இடம் புனிதமானது என்பதை உயர் நீதிமன்றம் நீதிப்பேராணை மனுக்களில் விசாரிக்க இயலாது
    (iii) வழக்குத் தொடுத்த ராம ரவிக்குமார் தான் தர்கா அருகில் தீபம் ஏற்றும் பழக்கத்தை நிரூபிக்க வேண்டும், தர்கா அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்யவில்லை, ஏற்கனவே தர்காவில் ஆடு கோழி வெட்டும் பழக்கம் தொடர்பான வழக்கில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ஆடு கோழி நீண்ட காலமாக தர்காவில் வெட்டி வருகிறோம், அது எங்கள் மதப் பழக்க வழக்கம் என்று சொன்னதற்கு, அப்பழக்கத்தை சிவில் நீதிமன்றம் சென்று தர்கா தரப்பு நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதே திருப்பரங்குன்றம் மலைத்தொடர்பான மூன்று நீதிபதிகள் தீர்ப்பு, ஒரு நீதிபதியைக் கட்டுப்படுத்தும் என்பதால், ராம ரவிக்குமாரும் சிவில் நீதிமன்றம் சென்று தான், தர்கா அருகில் கார்த்திகை தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தது என்பதை நிரூபிக்க வேண்டும்,

      (iv)1989 ஆம் ஆண்டு நாகப்பா. நாச்சியப்பன் என்பவர் திருப்பரங்குன்றம் கோவில் தொடர்பாக, முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வின்படி, உச்சி பிள்ளையார் கோயிலில் தீபத்தூண் ஏற்றுவதே நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த வழக்கம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
      (v)இந்து முன்னணி சங்பரிவார் அமைப்புகள், கடந்த பிப்ரவரி நாலாம் தேதி அன்று, திருப்பரங்குன்றம் கோயிலில் நுழைந்து போராட்டம் என்று கலவரம் செய்தனர், நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று எச். ராஜா பேசினார். வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், அரசியல் பேச மாட்டோம் என்று சொல்லிவிட்டு, அரசியலும் பேசி, கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதற்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கார்த்திகை தீபம் பிரச்சனையை கையில் எடுத்த சங்பரிவார அமைப்புகள், நவம்பர் 30 ஆம் தேதி போராட்டத்தை அறிவித்து வழக்கையும் ராம ரவிக்குமார் மூலம் தொடுத்தனர். எனவே, ராமரவிக்குமார் வழக்கு என்பது மத நடவடிக்கை அல்ல முழுக்க அரசியல் நடவடிக்கை, மதுரையின் அமைதி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த வேலையை செய்கின்றனர் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக வாதிடப்பட்டது.

      கோவில் மரபுக்கு மாறாக ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு

      8. இந்த வாதங்கள் எதனையும் ஏற்க மறுத்த நீதிபதி ஜி ஆர் சாமி நாதன் , கோயில் மரபுகளுக்கு மாறாக, தர்கா அருகில் உள்ள எல்லைக் கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். மற்ற வழக்குகளில் எல்லாம், கோயில் பூஜை அர்ச்சனை தீபம் ஏற்றுதல் உள்ளிட்ட மத நடவடிக்கைகள் அனைத்தையும், கோயில் அர்ச்சகர்களும், ஸ்தானியர்களுமே தீர்மானிக்க வேண்டும், அறநிலை துறை அதிகாரிகள் தலையிடக்கூடாது என்று வாதிடும் இந்து முன்னணி, சங் பரிவார அமைப்புகள், தங்கள் அரசியல் நடவடிக்கைக்காக இந்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? திருப்பரங்குன்றம் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா பட்டர் தீர்மானித்த இடத்தை, சங்பரிவார் அமைப்பின் ராம ரவிக்குமார் மாற்றலாமா? இரு நீதிபதிகள் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றலாம் என்று தீர்மானித்த பின், ஒரு நீதிபதி அதனை மீற முடியுமா? இரண்டு தீர்ப்புகள் தற்போது உள்ள நிலையில், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பை தான் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர, ஒரு நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே தெளிவான சட்ட நிலை. இச்சட்ட நிலையை உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன.

        எனவே, மதுரை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உரிய கருத்துரை பெற்று நீதிபதி ஜி. ஆர் சாமிநாதன் தீர்ப்பின் நிலை குறித்து முடிவெடுக்க வேண்டும்.

        ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக நீதிமன்றம்

        9.கரூர் மாவட்டம் நெரூரில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் மடத்தில், எச்சில் இலையில் உருளும் சடங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தடை செய்தது. வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி ஆர் சாமிநாதன், கடந்த 2024 ஆம் ஆண்டு மீண்டும் எச்சில் இலையில் உருளும் சடங்கை நடத்த உத்தரவிட்டார். அத்தீர்ப்பை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் judicial discipline- யை மீறியது தவறு என்று உத்தரவிட்டது.

        கோவில் இடமா? தர்க்கா இடமா?

        10. எனவே, தற்போதைய தீர்ப்பில் ஏராளமான, சட்ட மற்றும் பொருண்மைத் தவறுகள் உள்ளன. திறந்த நீதிமன்றத்தில், தான் மட்டும் மலையை ஆய்வு செய்யச் செல்கிறேன் யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு, தற்போது தீர்ப்பில் மாற்றி எழுதுகிறார். நீதிபதி, நீதிமன்ற அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தால் இது தெளிவாகத் தெரியும். தர்கா அருகில் உள்ள எல்லைக்கல், இன்னொரு தீபத்தூண் என்பதை நீதிமன்றத்தில் யாரும் சொல்லாத போது நீதிபதி எவ்வாறு கண்டறிந்தார்? அனைத்து தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்துச் செல்லாமல், நீதிபதி செய்த ஆய்வு சட்டப்படி செல்லாது. கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன். கோயில் மற்றும் தர்கா நிர்வாகம் இருவரும், எல்லையை அளந்து வரையறுக்க வேண்டும் என்று கூறியதைப் பதிவு செய்துள்ளார். சமீபத்திய திருப்பரங்குன்றம் மலை தொடர்பான மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் இதையே உறுதி செய்துள்ளது. முந்தைய சிவில் நீதிமன்ற தீர்ப்புகளும் இதையே வலியுறுத்துகின்றன. சட்ட நிலை இவ்வாறு இருக்க, இந்து முன்னணி தீபம் ஏற்ற கோர்ட் கூறும் இடம் கோயிலுக்கு தான் சொந்தம் என்ற முடிவுக்கு நீதிமன்றம் எப்படி வந்தது? சொத்தின் எல்லையைத் தீர்மானிக்க வேண்டியது சிவில் நீதிமன்றமா? உயர் நீதிமன்றமா?

        சங்பரிவார சதிக்கு இந்து சமய அறநிலையத்துறை உடந்தை

        11. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, தர்கா அருகிலுள்ள எல்லைகல்லைச் சுற்றி சில மரக்கட்டைகளை அடுக்கி, அப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டு, நீதிமன்றத்திலும், கோயில் நிர்வாகம் தான் கட்டைகளை அடுக்கியது என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததன் மூலம், சங்பரிவார அமைப்புகளின் சதிக்கு அப்பட்டமாக துணை போனது அமைச்சர் சேகர்பாபுவின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிர்வாகம்.

        தர்காவுக்குள் புகுந்து கலவரம் செயய் சதி

        12. தர்காவுக்கு சுற்றுச் சுவர் உள்ளதா? என்று கேட்டு பதிவு செய்த நீதிபதி, அதோடு தர்கா எல்லை முடிந்ததாக அறிவிக்கிறார். தர்கா வழியாக நுழைந்து தர்கா படிகளைப் பயன்படுத்தி, எல்லைக்கல்லில் சென்று தீபம் ஏற்றலாம் என்கிறார் நீதிபதி. தர்காவுக்கு சொந்தமான இடம் என்று பிரிவி கவுன்சில் வரை உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை, மாற்றி தர்காவில் புகுந்து கலவரம் செய்வதற்கு இடம் அளிக்கிறார் நீதிபதி. ஒருவரின் சொத்தில் அவருடைய அனுமதியின்றி உள்ளே நுழையலாம் என்று சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா?

        அவசர விசாரணையும் தீர்ப்பும் ஏன்?

        13. கோயில் சொத்தைக் காப்பாற்ற எல்லைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார் நீதிபதி. தனது இடத்திற்கோ, சொத்திற்கோ ஆபத்து என்று நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சொன்னதா? தர்கா, வக்ப்வாரியம் தரப்புகள், கோரிய கால அவகாசமும் நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை.நூறாண்டு கால பிரச்சனையை சில நாட்களில் அவசரமாக விசாரித்து நடத்தி முடிக்க வேண்டிய தேவை, அவசியம் என்ன?

          அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட இத்தீர்ப்பு, மதுரையின் அமைதியை, மத நல்லிணக்கத்தை பல பத்தாண்டுகள் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கும். ஏற்கனவே உள்ள பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணித்து எழுதப்பட்ட இந்த தீர்ப்பு சட்டப்படி செல்லத்தக்கதல்ல. எனவே தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லை. மதுரை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் நாளை வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றினால் போதுமானது. நாளைய தினம் கார்த்திகை தீப நாள் என்பதால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துரை கேட்டு, தீர்ப்பின் செல்லும் தன்மை குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும், மதுரையின் ஈராயிரம் ஆண்டுகால மதநல்லிணக்கம் மரபைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் மீ.த.பாண்டியன் தெரிவித்துள்ளனர்.

          செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
          Join Our Channel
          Share