சிறுமிகளை பாலியல் ரீதியாக சீரழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கை முன்னர் விசாரித்த உதவி ஆணையர் உட்பட 3 போலீசாருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் விபசாரத் தடுப்புப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட பென் டிரைவில் சிறுமியுடன் முதியவர் ஒருவர் பாலியல் செயலில் ஈடுபடும் வீடியோ இருந்தது. இதையடுத்து அக்டோபர் 7-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த வழக்கில் வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் அப்போது போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோவில் இருப்பது தாம் இல்லை என வீரமணி மறுத்ததாகவும், தங்களுக்குத் தெரிந்து அத்தகைய குற்றச் செயல்கள் நடைபெறவில்லை என சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் தெரிவித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், வீடியோ 2019-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகவும், பல ஆண்டுகள் கடந்துவிட்டதால் அதன் அசல் பதிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் இல்லை எனக் கூறி, 2026 பிப்ரவரி 18-ஆம் தேதி வழக்கைக் கைவிடுவதற்கான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆனால், இந்த முடிவை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான் ஜெம் வீரமணி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. பின்னர் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, வீரமணி மீதான வழக்கை முன்பு விசாரித்த போலீசார் எதன் அடிப்படையில் வழக்கைக் கைவிட முடிவு செய்தனர்? விசாரணை முழுமையாக நடத்தப்பட்டதா? வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏதேனும் தலையீடுகள் இருந்தனவா? என்பது தொடர்பாகவும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் பணப் பரிமாற்றம் நடந்ததா, காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் தனிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான், ஜெம் வீரமணி வழக்கை முன்பு விசாரித்த உதவி ஆணையர் யாஸ்மின், விபசார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
