செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷனையும் முன்கூட்டியே வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் பென்ஷன் செப்டம்பர் 25-ஆம் தேதியே வழங்கப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் செயல்படும் கணக்குகள் தலைமை கட்டுப்பாட்டாளர் (Controller General of Accounts – CGA) அலுவலகம் செப்டம்பர் 23-ஆம் தேதி இது தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் வங்கிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, பாதுகாப்பு, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகள் உட்பட அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்குமான செப்டம்பர் 2026 மாத சம்பளம் மற்றும் ஊதியத்தை செப்டம்பர் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழிற்துறை ஊழியர்களுக்கான செப்டம்பர் 2026 மாத ஊதியமும் முன்கூட்டியே செப்டம்பர் 25-ஆம் தேதி வழங்கப்படும்.
அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்குமான செப்டம்பர் 2026 மாத ஓய்வூதியமும் செப்டம்பர் 25-ஆம் தேதி வழங்கப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் சம்பளம், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் முன்பணமாக (Advance Payments) கருதப்படும். ஒவ்வொரு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரருக்கும் முழு மாதத்திற்கான சம்பளம், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இறுதியாகக் கணக்கிடப்பட்ட பிறகு அதற்கேற்ப சரிசெய்யப்படும். ஏதேனும் சரிசெய்தல் தேவைப்பட்டால், அது அக்டோபர் 2026 மாத சம்பளம் அல்லது ஊதியத்தில் மேற்கொள்ளப்படும்.
நடப்பு காலாண்டின் இறுதி நாட்களுடன் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தமும் இணைந்து வருவதால், செப்டம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பணம் செலுத்துதல் உள்ளிட்ட வங்கிப் பரிவர்த்தனைகளையும், சாத்தியமான இடங்களில் முன்கூட்டியே மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
