மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி செப்.28, 29, 30-ல் வங்கி ஊழியர்கள் 3 நாள் ஸ்டிரைக்!

Published On:

| By Mathi

Bank Strike-Talks Fail

வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான United Forum of Bank Unions (UFBU) அறிவித்துள்ளது.

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளான சி.எச். வெங்கடாசலம் (AIBEA), ரூபம் ராய் (AIBOC) எல். சந்திரசேகர் (NCBE), சஞ்சய் கான் (AIBOA), தேபாசிஷ் பாசு சவுத்ரி (BEFI) பிரேம் மக்கர் (INBOC) ஓ.பி. சர்மா (INBEF) ஆகியோர் இன்று செப்டம்பர் 22-ம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கை: இன்று மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தைச் சேர்ந்த துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (Dy. CLC), புதுடெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் பேச்சுவார்த்தையை நடத்தினார். எங்கள் பிரதிநிதிகளுடன் இந்திய வங்கிகள் சங்கம் (IBA), நிதிச் சேவைகள் துறை (DFS) மற்றும் வங்கி நிர்வாகங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

UFBU சார்பில், கடந்த 2024 மார்ச் மாதம் நடைபெற்ற ஊதியத் திருத்த ஒப்பந்தத்தின்போது ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட வாரத்தில் 5 நாட்கள் வங்கிப் பணி என்ற எங்களது கோரிக்கையை அமல்படுத்துவதற்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினோம். எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்கிறோம் என்று தெரிவித்தோம்.

UFBU முன்வைத்த கோரிக்கையின்படி, Scale IV மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக IBA தெரிவித்தது. இது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் மேலும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், வாரத்தில் 5 நாட்கள் வங்கிப் பணி என்ற கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக IBA தெரிவித்தது. எனவே வங்கி வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்து, அதை ஒத்திவைக்க வேண்டும் என்று UFBU-விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை (DFS) பிரதிநிதிகள், வங்கி ஊழியர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். வாரத்தில் 5 நாட்கள் வங்கிப் பணி என்ற கோரிக்கையும் அரசின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்பு பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று UFBU-விடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே, வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்காமல் தடுப்பதற்காக வங்கி நிர்வாகங்களும் பிற அதிகார அமைப்புகளும் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு UFBU சார்பில் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தோம்.

குறிப்பாக, Scale IV மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மற்றும் Probationary Officers (PO) வேலைநிறுத்தத்தில் பங்கேற்கக்கூடாது என்று அச்சுறுத்துதல் மற்றும் அழுத்தம் கொடுப்பது, Industrial Relations Code-ன் பிரிவு 84-ன் கீழ் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறை (Unfair Labour Practice) என்று சுட்டிக்காட்டினோம்.

இத்தகைய அச்சுறுத்தல்கள், கட்டாயப்படுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும், எனவே இதுபோன்ற முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தோம்.

வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று DFS, IBA மற்றும் வங்கி நிர்வாகங்கள் விடுத்த வேண்டுகோளுக்குப் பதிலளித்த UFBU, வாரத்தில் 5 நாட்கள் வங்கிப் பணி என்ற எங்களது கோரிக்கையை அமல்படுத்துவதில் உறுதியான மற்றும் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டால், அதைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தது.

அவ்வாறு எந்த உறுதியான சாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 2026 செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டிய கட்டாயம் UFBU-க்கு ஏற்படும் என்றும் தெரிவித்தோம்.

3 நாள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்

மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 2026 செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களும் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டபடி செயல்படுத்தி வெற்றிபெறச் செய்யுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share