5 நாட்கள் வங்கிகள் முடங்கும்… வங்கி ஊழியர் ஸ்டிரைக் வேண்டாம்- இறங்கி வந்த மோடி அரசு!

Published On:

| By Mathi

3-Day Bank Strike

நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு முக்கிய கோரிக்கைகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் செயல்படும் United Forum of Bank Unions (UFBU) மற்றும் சில தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களை அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும்; செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (Performance Linked Incentive – PLI) திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.

இந்நிலையில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கி ஊழியர்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தொழிற்சங்கங்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதர கோரிக்கைகளுக்கு தீர்வு காண பல சுற்று சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் செப்டம்பர் 11-ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. தற்போது செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பொதுத்துறை வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அனைவருக்கும் நிதிச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பது, டிஜிட்டல் வங்கிச் சேவை, நிதி விழிப்புணர்வு மற்றும் கிராமப்புற வங்கிச் சேவை ஆகியவற்றில் பொதுத்துறை வங்கிகள் முன்னணியில் உள்ளன.

ADVERTISEMENT

வங்கி ஊழியர்களின் பணிச்சூழல் மற்றும் நலனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊதியம் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டு அனைத்து நிலை ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் மருத்துவச் செலவுகள், உணவு மானியம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், கல்வி உதவி உள்ளிட்டவற்றுக்கான ஊழியல் நலன் நிதி 2024 ஆகஸ்டில் 56% உயர்த்தப்பட்டது.

Assistant General Manager, Deputy General Manager, General Manager, Chief General Manager உள்ளிட்ட உயர் பதவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014-15 முதல் 2025-26 நிதியாண்டு வரை பொதுத்துறை வங்கிகளில் சுமார் 4.82 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் பணியாளர் நியமனம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026 ஜூலை 1 நிலவரப்படி அதிகாரி பணியிடங்களில் 95.84 சதவிகிதமும், கீழ்நிலை மற்றும் Award Staff பணியிடங்களில் 92 சதவிகிதமும் நிரப்பப்பட்டுள்ளன.

வங்கி பணியாளர் நியமனத்தில் ஆதார் அடையாளச் சரிபார்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடும் நடைமுறை சீரமைக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்குவதற்கான நடைமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன.

பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வின்போது ஊழியர்கள் தாங்கள் விரும்பும் இடத்தைத் தெரிவு செய்ய வசதியாக இணையவழி நடைமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

பெண் வங்கி ஊழியர்களுக்கு மாதவிடாய் காலம், குழந்தையின்மை சிகிச்சை, இரண்டாவது குழந்தையைத் தத்தெடுத்தல், இறந்த குழந்தை பிறக்கும் சூழல் உள்ளிட்டவற்றுக்காக சிறப்பு விடுப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

வங்கி ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் திருத்தப்பட்டுள்ளது. பணியை ராஜினாமா செய்தவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர கருணைத்தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1986-க்கு முன்பு ஓய்வுபெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கருணைத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்றவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான போக்குவரத்துப் படியும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக, 2027 நவம்பரில் முடிக்கப்பட வேண்டிய அடுத்த இருதரப்பு ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன.

வங்கி ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2015-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள சனிக்கிழமைகள் பொதுமக்கள் வங்கிக் கிளைகளை நேரடியாக அணுகுவதற்கான முக்கிய நாட்களாக உள்ளன.

செப்டம்பர் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு முன்பு வரும் செப்டம்பர் 26 இரண்டாவது சனிக்கிழமை; செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை. இதனால் வேலைநிறுத்தம் நடைபெற்றால் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிக் கிளை சேவைகள் முடங்கும் நிலைமை உருவாகும்.

மேலும், செப்டம்பர் 30 வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பு நாள். கணக்குகளைச் சரிபார்த்தல், நிதி ஒதுக்கீடுகள், கருவூலம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த நாள் முக்கியமானது.

இந்த நேரத்தில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள், வணிக நிறுவனங்கள், அரசு பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச வங்கிப் பணிகளுக்கு கணிசமான சிரமம் ஏற்படும்.

பொதுத்துறை வங்கிகள் தற்போது வலுவான நிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வங்கி ஊழியர்கள், வங்கி நிர்வாகங்களின் பங்களிப்பின் மூலம் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், வங்கிகளின் வர்த்தகமும் பாதிக்கப்படும். இறுதியில் அது வங்கி ஊழியர்களின் நலனையும் பாதிக்கும்.

வங்கி ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாள் வங்கி வேலை என்ற கோரிக்கை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எனவே வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் தடையின்றி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய நிதி அமைச்சர்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share