வங்கக்கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்.. நாளை தீவிர புயலாக வலுப்பெறும்.. ஆந்திரா நோக்கி நகரும்!

By Mathi

|

Published on 16 Nov 2026, 4:44 AM

Akvan Cyclone

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று (நவம்பர் 16) மாலையில் ‘அக்வான்’ புயலாகவும், நாளை (நவம்பர் 17) மாலையில் தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

இது மேலும் வலுவடைந்து நேற்று (நவம்பர் 15) இரவு 11.30 மணியளவில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 760 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

மேலும், இலங்கை திருகோணமலைக்கு கிழக்கு – வடகிழக்கே 640 கி.மீ. தொலைவிலும், அந்தமான் நிகோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திற்கு மேற்கே 670 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

ADVERTISEMENT

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு – தென்கிழக்கே 870 கி.மீ. தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தெற்கு – தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் அதன் மையம் அமைந்திருந்தது.

இன்று மாலை புயலாக வலுப்பெறும்

இந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (நவம்பர் 17) மாலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும்.

ADVERTISEMENT

ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும்

நாளை மாலை தீவிர புயலாக வலுப்பெற்ற பின்னரும் இந்தப் புயல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் ஆந்திரா கடற்கரையை நோக்கிச் செல்லக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel