கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஜெ.இ. பத்மஜா. இவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ் ஆபாச வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கு அருள் விக்னேஷ் மது போதையில் சென்று தவறாக நடந்துகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு!
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பர் 11-ந் தேதி The News Minute இணையதளத்தில் வெளியான செய்தியில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாச வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருள் விக்னேஷ் ஏற்கெனவே மது போதையில் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்குச் சென்று தவறாக நடந்துகொண்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பான வாட்ஸ்அப் மெசேஜ்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எந்தப் பதவியில் இருந்தாலும், அரசியல் செல்வாக்குக்கோ வெளிப்புறத் தலையீட்டுக்கோ இடமளிக்காமல் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை (Action Taken Report – ATR) தமிழக டிஜிபி சமர்ப்பிக்க வேண்டும்.
பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான தொந்தரவு அல்லது தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளில், பதவியையோ செல்வாக்கையோ பயன்படுத்தி யாரும் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு தேசிய மகளிர் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










