முதுமலை வனப்பகுதிக்குள் தடையை மீறி டிரக்கிங் சென்றாரா அமைச்சர் வன்னி அரசு?

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 2:11 PM

தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு முதுமலை வனப்பகுதிக்குள் புலியை கண்டு அதனை விரட்டி செல்வது, யானை உள்ளிட்ட வன விலங்குகளை பார்த்தது. வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து போஸ் கொடுப்பது போன்ற வீடியோக்களை ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அவர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தடையை மீறி சென்றுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

முதுமலை வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருக்க வனத்துறையினர், உயர்நீதிமன்ற உத்தரவு படி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். உள்ளூரில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சுற்றுலா ஜீப்புகளுக்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

ADVERTISEMENT

அமைச்சர் வன்னியரசு கடந்த 10 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் தனது குடும்பத்தினரோடு முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் சென்றுள்ளார். அவரை முதுமலை வனத்துறையினர் வெளி மண்டல பகுதியில் உள்ள பொக்காபுரம் வனப்பகுதிக்குள் ட்ரக்கிங் அழைத்து சென்று இருக்கிறார்கள். வனப்பகுதிக்குள் நடந்து சென்ற அமைச்சர் புலி ஒன்று நடந்து சென்றதை பார்த்துள்ளார். அப்போது அவர் புலியை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் புலியை துரத்தி செல்வது, யானை உள்ளிட்ட வன விலங்குகளை அமைச்சர் பார்த்த வீடியோவை அவரே ரீல்சாக தனது இஸ்டாவில் பதிவிட்டுள்ளர். இந்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

முதுமலையில் தங்கும் விடுதிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் உள்ளூர் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை எவ்வாறு வனத்துறையினர் நடக்க வைத்து வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு இது குறித்து தகவல் தெரியாது.. விசாரிக்கிறேன்.” என்று கூறி உள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel