தவெக கூட்டணியில் பாமக இடம் பெற்றால்… எங்க முடிவு இதுதான்.. திருமாவளவன், வன்னி அரசு அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Mathi

Thirumavalavan-vanni arasu

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் பாமக இணைந்தால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசில் இருந்து வெளியேறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அறிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நடைபெற்ற விசிக மாநாட்டில் தொல். திருமாவளவன் பேசியதாவது:

பாமகவும் பாஜகவும் இடம் பெறுகிற அணியில் இருக்கமாட்டோம் என 15 ஆண்டுகளாக திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம். இப்படி சொல்வதால் பாமகவுக்கு நல்லது ஒன்று நடக்கிறது. இப்படி நாம் சொல்வதால் பாமக, வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைக்கிறது. வன்னியர்கள் யாரும் விசிக இருக்கிற அணிக்கு ஓட்டுப் போடமாட்டார்கள். விசிகவினர் யாரும் பாமக இடம் பெறும் அணிக்கு ஓட்டுப் போடமாட்டார்கள். இது வெளிப்படையாக நடக்கிற அரசியல். நாம் வாக்குகளை திரட்ட சொல்லவில்லை. கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் சொல்கிறோம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

ADVERTISEMENT

திண்டிவனத்தில் நடைபெற்ற விசிக நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது: இந்தப் பதவி இருக்கும், இல்லாமல் போகும். எனக்கு அமைச்சரைவிட எழுச்சித் தமிழர்தான் முக்கியம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் முக்கியம். நம்முடைய போராட்டம்தான் முக்கியம் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதைத்தான் சொல்கின்றேன்.

பாமக உள்ளே வந்தால் உங்களுடைய நிலை என்ன, நிலை என்ன என்று பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அதற்குப் பதில் சொல்லிச் சொல்லி வாயும் வலித்துவிட்டது. கேட்டுக் கேட்டு காதும் வலிக்கிறது. ஒரே வழிதான்.

ADVERTISEMENT

சாதியவாத பாமகவோடு, மதவாத பாஜகவோடு விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று சொல்லி முழங்கிய நம்முடைய தலைவர் மகத்தான தலைவர்.

இப்பொழுதும் சொல்கிறேன். இந்த இடத்திலிருந்தும் சொல்லுகின்றோம். ஒருபோதும் அதற்கான வாய்ப்பு இல்லை. உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்பதுதான் பிரகடனம்.

ADVERTISEMENT

எங்களுக்கு பதவி முக்கியமல்ல..

எங்களுடைய தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் எதைக் கட்டளையிடுகிறாரோ, அந்த வேலையைச் செய்வதற்குத்தான் ஓர் அடிமட்டத் தொண்டனாக இருந்து இந்த இடத்திலே களமாடுகின்றோம்.

சிலர் சொல்கிறார்கள், பதவிக்காக நம்முடைய தலைவர் அவர்களை வாய்க்கு வந்தபடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லுவேன். மூடர்களே! விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் புறக்கணிப்புப் பாதையிலே நின்ற இயக்கம். எங்களுக்கு இந்தத் தேர்தல் பாதை முக்கியமல்ல. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மற்ற அதிமுக, திமுக போன்ற சராசரிக் கட்சி அல்ல. இது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைக்காகக் களமாடுகின்ற இயக்கம். இந்த இயக்கம் எப்போதும் விடுதலைக்காக, விடுதலையை நோக்கி, விடுதலையை நேசிக்கக்கூடிய இயக்கம். விடுதலைதான் எங்களுடைய உயிர்மூச்சு.

அந்த வகையில்தான் இந்த மண்ணிலே, இந்தத் தமிழ்நாட்டிலே, நம்முடைய தலைவர், மகத்தான தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையிலே ஒவ்வொரு தொண்டனாக நாம் களமாடுகின்றோம். இவ்வாறு வன்னி அரசு பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share