டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போலீஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று (அக்டோபர் 10-ந் தேதி) போராட்டம் நடைபெற்றது.
காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஆனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை பலப்பிரயோகம் செய்து தடுத்து கைது செய்தனர்.
நேற்று தொடங்கிய இந்த நடவடிக்கைகள் இன்றும் (அக்டோபர் 11-ந் தேதி) தொடர்ந்தன. ஜந்தர் மந்தர் நோக்கிச் சென்ற மாணவர் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்; பலரை இழுத்துச் சென்று போலீஸ் வாகனங்களில் ஏற்றிய காட்சிகளும் வெளியாகின.
மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸுக்கு என்ன நடந்தது?
இன்றைய போராட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டதுதான்.
டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஜான் பிரிட்டாஸ் அங்கு சென்றார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து பேருந்துக்குள் ஏற்றினர். தான் ஒரு எம்.பி. என்று பலமுறை கூறியும், அடையாள அட்டையைக் காட்டியும் பாதுகாப்புப் படையினர் கண்டுகொள்ளவில்லை; பேருந்துக்குள் ஏற்றப்பட்ட தம்மை 5 சிஆர்பிஎப் வீரர்கள் அழுத்தி பிடித்ததாகவும் தாம் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டதாகவும் ஜான் பிரிட்டாஸ் கூறினார்.
பின்னர் போலீஸ் அதிகாரி சச்சின் தலையிட்டு தன்னை விடுவிக்க உத்தரவிட்டதாகவும், ஆனால் அதற்குப் பிறகு பேருந்திலிருந்து தன்னை வெளியே தள்ளி சாலையோரத்தில் விட்டுச் சென்றதாகவும் ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார்.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாஜித் என்ற இளைஞர் அவருக்கு உதவியுள்ளார். மூச்சுவிட சிரமப்பட்ட ஜான் பிரிட்டாஸ் பின்னர் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மாநிலங்களவை எம்.பி. ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சந்தித்தனர்.

சாஜி மீதான தாக்குதல்
டெல்லி ராஜீவ் சவுக், கன்னாட் பிளேஸ் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ (SFI) நிர்வாகிகளை போலீசார் தாக்கினர். இதில் ஆதர்ஷ் எம். சாஜியின் நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களையும் SFI பகிர்ந்துள்ளது.
அமைதியாகப் போராடிய தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என்று ஆதர்ஷ் சாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதர்ஷ் எம். சாஜி மட்டுமின்றி SFI டெல்லி மாநிலச் செயலாளர் சூரஜ் எலமோன், மத்திய செயற்குழு உறுப்பினர் அபிஜித் மணிலால் ஆகியோரும் போலீசாரால் தாக்கப்பட்டனர். அத்துடன் SFI நிர்வாகிகள் சிம்ரன், அனில், சரண்யா, சந்த் உள்ளிட்டோர் போலீஸ் வாகனங்களுக்குள் ஏற்றப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களும் தப்பவில்லை
ஜான் பிரிட்டாஸ் மீதான போலீஸ் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜாவும் போலீசாரால் வாகனத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பி. சந்தோஷ் குமாரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.
AISA தலைவர் நேஹா போரா காவலில்
அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேஹா போராவும் டெல்லி போராட்டத்தில் போலீசாரால் தாக்கப்பட்டார். ஆர்.கே. ஆசிரம மார்க் பகுதியில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையில், விஜய் சவுக் அருகே நேஹா போரா உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். SFI, AISA மட்டுமின்றி கிராந்திகாரி யுவ சங்கதன் (KYS) அமைப்பினரும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பினரைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

4 முன்னாள் முதல்வர்கள்
டெல்லி போராட்டத்தில் மாணவர் அமைப்பினர் மட்டுமின்றி நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களும் காவலில் வைக்கப்பட்டனர்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் ஆகிய 4 முன்னாள் முதல்வர்களும் நேற்று (அக்டோபர் 10) போராட்டத்தில் பங்கேற்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். கேரளா ஹவுஸ் அருகே பினராயி விஜயன், மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ், முன்னாள் அமைச்சர் கே.என். பாலகோபால் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்து தடுத்து வைத்தனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் சுமார் மூன்றரை மணி நேரம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சுற்றி அழைத்துச் சென்றதாக ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார்.
மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத், சிபிஐ (எம்.எல்.) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்திலேயே சிஜேபி
இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி வந்தபோது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஓராண்டுக்கு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்கள்
டெல்லி போராட்டத்தில் வழக்கறிஞர்களும் போலீசாரால் தாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வழக்கறிஞர் ஷதான் ஃபராசத், தன்னை கைது செய்து ஓடிக்கொண்டிருந்த போலீஸ் பஸ்ஸுக்குள் தூக்கிப் போட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வீடியோ எடுத்த பாதிரியாரும் காவலில்?
டெல்லியில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சேக்ரட் ஹார்ட் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் பிஜு சேவியரும் கைது செய்யப்பட்டார் என்கிறது SFI.

பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்
டெல்லி போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் போலீசார் தாக்கினர். Scroll செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஆயுஷ் திவாரி, டெல்லியில் போராட்டக்காரர்களை போலீசார் பிடித்துச் சென்றதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர் அடையாள அட்டையைக் காட்டியும் போலீசார் அவரைப் பலமாக கீழே தள்ளிவிட்டனர். இதில் அவரது சட்டை கிழிந்ததுடன் இடுப்பிலும் கீறல் காயம் ஏற்பட்டதாக ஆயுஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
Business Standard பத்திரிகையாளர் அனுஷ்கா பரத்வாஜை போலீசார் அவரது பை மற்றும் உடைகளைப் பிடித்து இழுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Reuters செய்தியாளர் சவுரப் சர்மாவை அடையாள அட்டை அணியாத, முகமூடி அணிந்த போலீஸ்காரர் ஒருவர் இழுத்துச் சென்று உதைத்துள்ளனர்.
India Today நிறுவனத்தின் Mo ஊடகத்தைச் சேர்ந்த ஷிவாங் சுக்லாவை போலீசார் தள்ளித் தாக்கி பேருந்துக்குள் ஏற்றினர்.
Newslaundry பத்திரிகையாளர் அஷ்வின் குமார் சிங்கை போலீசார் தள்ளியதுடன் அவரது செல்போனையும் பறித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்தா சவ்யசாச்சி, அன்மோல் பிரீதம், அன்ஷு ஆகியோரும் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அன்மோல், அன்ஷு ஆகியோரின் செல்போன்களும் பறிக்கப்பட்டனர்.
Navbharat Times பத்திரிகையாளர்கள் ஹிருத்திக் ஜோஷி, ராகுல் சரஸ் ஆகியோரை அடையாள அட்டைகளைக் காட்டியும் போலீசார் பிடித்துச் சென்றனர். ராகுல் சரஸிடம் போலீசார் தவறாக நடந்துகொண்டதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஆஷிஷ் பாண்டே குற்றம்சாட்டினார்.
Scroll பத்திரிகையாளர் சோயிப் தனியல், BOOM பத்திரிகையாளர் ஜாக்ரிதி திரிஷா, மூத்த பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா தாக்கூர்தா உள்ளிட்டோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவங்களுக்குப் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இந்திய பெண்கள் பத்திரிகையாளர் அமைப்பு, டெல்லி பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.
டெல்லியில் 2 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் எம்.பி.க்கள், முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், மாணவர் அமைப்புத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நாட்டையே பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
