மோடி-விஜய் நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ தவிர்ப்பு… தேசிய கீதத்துக்கு அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து!

Published On:

| By Mathi

Modi Chennai Vijay

சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில், முதலில் தேசிய கீதமும், 2-வதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. அதேநேரத்தில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படவில்லை.

கடந்த மே 10-ந் தேதி தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், 2-வதாக தேசிய கீதம், 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதுதான் நீண்டகால நடைமுறை. ஆனால் விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல ஜூலை 28-ந் தேதி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவிலும் முதலில் வந்தே மாதரம், 2-வதாக தேசிய கீதம், 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் சர்ச்சையானது.

ADVERTISEMENT

இதன் பின்னர், ஆகஸ்ட் 10-ந் தேதி தமிழக சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டுவந்தார். தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, வந்தே மாதரம், தேசிய கீதம், மாநிலப் பாடல் ஆகியவற்றை இசைக்கும் வரிசை தொடர்பான விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் சென்றது. அப்போது மத்திய அரசு தரப்பில், மாநிலப் பாடலை எந்த இடத்தில் இசைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதேநேரத்தில், வந்தே மாதரமும் தேசிய கீதமும் ஒன்றாக இசைக்கப்படும் நிகழ்ச்சிகளில், முதலில் வந்தே மாதரமும் அடுத்து தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜூலை 9-ந் தேதி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநிலப் பாடலை நிகழ்ச்சியில் எந்த இடத்தில் இசைப்பது என்பதை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் இன்று அக்டோபர் 11-ந் தேதி சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், வந்தே மாதரம் இசைக்கப்படாமல், முதலில் தேசிய கீதமும் அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டுள்ளன.

மே மாதம் விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது சர்ச்சையானது. தற்போது பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் 2-வது இடத்தில் இசைக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share