ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

சென்னையில் தமிழ்நாட்டுக்கான ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா இன்று அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இருவரும் இணைந்து இந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மாண்புமிகு பிரதமர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வடபழனியிலிருந்து பூந்தமல்லி வரையிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பாதையைத் தொடங்கி வைத்ததற்கும், பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதற்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த பண்பாடுகளையும், அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் பேணிப் பாதுகாத்து வரும் மக்களையும் கொண்ட சிறப்புமிக்க மாநிலமாகும்.
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழும் இம்மாநிலம், சிறப்பான வரலாறு, இலக்கியம், கலை, கட்டடக்கலை மற்றும் பண்பாட்டு மரபுகளால் தனித்துவம் பெற்றுள்ளது.
நமது அரசு அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
100 நாட்களுக்கும் மேலான ஆட்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட, ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில், நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து, கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நமது அரசு குழந்தைகள், பெண்கள், திருநர், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு தொழில், அறிவியல், கல்வி, கலை, இலக்கியம், சமூக நீதி ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வரும் மாநிலமாகும்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து..
வலிமையான மாநிலங்களே வலிமையான இந்தியாவை உருவாக்குகின்றன. இந்தியாவின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு எப்போதும் அடித்தளமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.
தமிழ்நாடு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, 2036-ம் ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி, வேளாண்மை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது.
இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, புதுமை, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 3 அம்சங்களுக்கும் நாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
அதே நேரத்தில் வளர்ச்சியின் பயன் சென்னை மாநகரத்தைத் தாண்டி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.
இளைஞர்களே நமது பலம்
தமிழ்நாட்டின் இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலம். அவர்களின் திறமை, தொழில்நுட்ப அறிவு, புதுமைச் சிந்தனை ஆகியவற்றை உலக அளவிலான வாய்ப்புகளுடன் இணைப்பதே நமது இலக்கு. இன்று நாம் தொடங்கும் மற்றும் நிறைவேற்றும் திட்டங்கள் அடுத்த தலைமுறைக்கான முதலீடுகளாக அமைய வேண்டும்.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 54 கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில், 4-வது வழித்தடமாக பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2-ம் கட்டத்தின் கீழ் சுமார் 104 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
3-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ம் கட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டத்தில் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், பூந்தமல்லியிலிருந்து சுங்குவார்சத்திரம், கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் சுமார் 65 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், சென்னை பெருநகரப் பகுதி முழுவதற்கும் விரிவான போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள்
அதேபோல, தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்டங்களை மாண்புமிகு பிரதமர் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஓசூர் மெட்ரோ ரயில்
தமிழ்நாட்டின் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலத்தின் பொம்மசந்திரா வரையிலான மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டம் 2 மாநில மக்களுக்கும் பயனளிக்கும்.
2026-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை இடையே 2 அதிவேக ரயில் வழித்தடங்களை அறிவித்ததற்காக மாண்புமிகு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் திட்டங்கள் நிச்சயமாக இந்தப் பகுதியின் வளர்ச்சிக்குப் பயனளிக்கும்.
தமிழ்நாட்டின் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரையிலும் அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தத் திட்டங்கள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.
மேலும் சில முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை இந்த வாய்ப்பில் வலியுறுத்த விரும்புகிறேன்.
- செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான ஜிஎஸ்டி சாலை, தேசிய நெடுஞ்சாலை எண் 32-ஐ 6 வழிச்சாலையாக விரிவுபடுத்துதல்
- திருச்சி – பஞ்சப்பூர் – ஜெயபுரம் – கரூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 81-ஐ 6 வழிச்சாலையாக விரிவுபடுத்துதல்
- கரூர் முதல் கோயம்புத்தூர் வரையிலான சாலையை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்துதல்
- தேசிய நெடுஞ்சாலை எண் 87-ல் மாதவரம் முதல் சோழவரம் வரை உயர்மட்டச் சாலை அமைத்தல் ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும்.
இந்தத் திட்டங்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்கி, அவற்றைச் செயல்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். மேலும் சில கோரிக்கைகளை மாண்புமிகு பிரதமரிடம் முன்வைக்க விரும்புகிறேன்.
மாநிலங்களுக்கு இடையே நீர்வளத்தைச் சமமாகப் பகிர்ந்துகொள்வதற்கு நதிகளை இணைப்பது அவசியமாகும்.
- கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் தென் மாநிலங்களின் நீர்வளத்தை அதிகரிப்பதற்கான முக்கியமான வாய்ப்பாகும். இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து, தேசியத் திட்டமாக எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தமிழை முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
- இதனை விரைவாகப் பரிசீலித்து, சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழைப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தனது பங்காகத் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையை எந்தவித நிபந்தனைகளும் விதிக்காமல் விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய இந்த நிகழ்வைச் சிறப்பித்த மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
