பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமரை, தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பிரதமரை வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து போரூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் இருந்தபடியே பிரதமர் மோடி பொதுமக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்.
தவெக ஆட்சி அமைந்த பிறகு, முதல் முறையாகப் பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில், பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் வாகனத்திற்குப் பின்னால் தமிழக முதல்வர் விஜய்யின் கார் சென்றது. இன்று பிரதமர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல்வர் விஜய் கலந்துகொள்ள உள்ளார்.
