சென்னை வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
மே 17 இயக்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் மே 17 இயக்கம் ஏன் கறுப்புக் கொடி காட்டுகிறது? தமிழ்நாட்டு தமிழர்கள் ஏன் மோடிக்கு எதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்?
தமிழ்நாட்டிற்கு மெட்ரோ திட்டத்தைத் திறந்து வைக்கத்தானே வருகிறார். இதற்காகக் கறுப்புக் கொடியா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
இப்போது மோடி திறந்து வைக்க வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியைத் தர மறுத்தவர் மோடி. அவருக்கு கறுப்புக் கொடி காட்டாமல் என்ன செய்வது?
தமிழ்நாட்டில் நெய்வேலியில் இருந்து நிலக்கரியும், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயற்கை எரிவாயுவும் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 3,500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்காமல் தமிழ்நாட்டை மின் பற்றாக்குறை மாநிலமாக மாற்றிய மோடிக்கு கறுப்புக் கொடி காட்டாமல் என்ன செய்வது?
தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதிகளைத் தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து, தமிழ்நாட்டைப் பொருளாதாரச் சிக்கலுக்குள் தள்ளும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டாமல் என்ன செய்வது?
தமிழ்நாடு இந்தியாவின் கல்வி வளர்ச்சியைவிட 3 மடங்கு முன்னேறியிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டு மாணவர்கள் சொந்தப் பாடத்திட்டத்தில் படிக்கக்கூடாது என்று சொல்லி அதைத் தடுத்து, தமிழ் மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டாமல் என்ன செய்வது?
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் புதிதாகத் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தராமல், இங்கு வர வேண்டிய தொழிற்சாலைகளையும் குஜராத்துக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் மாற்றிக் கொண்டிருக்கும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டாமல் என்ன செய்வது?
ஜவுளித் தொழிலில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு, ஜவுளித் தொழில் தொடர்பான மத்திய அரசின் மானியத்தில் ஒரு ரூபாய்கூட வழங்காமல், குஜராத்தின் சூரத் நகருக்கு மட்டுமே வழங்கும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டாமல் என்ன செய்வது?
இந்தியாவில் வளர்ந்து வரும் செமிகண்டக்டர் எனப்படும் மின்னணுத் துறைக்கு மத்திய அரசு அறிவித்த சுமார் ₹75,000 கோடி மானியத்தில் ஒரு ரூபாய்கூட தமிழ்நாட்டிற்கு வழங்காமல், மின்னணுத் துறையில் முன்னேறிய மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்த மோடிக்கு கறுப்புக் கொடி காட்டாமல் என்ன செய்வது?
இதற்கெல்லாம் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்பவர்கள் பதில் சொல்லட்டும். அல்லது பிரதமர் மோடியிடம் பேசி இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு பெற்றுத் தரட்டும். அப்படிச் செய்தால் நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவதை மறுபரிசீலனை செய்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு எதிரான இந்த நடவடிக்கைகள் தொடரும் வரை, இந்திய ஒன்றியத்தில் யார் இதைச் செய்தாலும் அவர்களுக்கு எதிராக மே 17 இயக்கம் தனது எதிர்ப்பை மிகக் கடுமையாகப் பதிவு செய்யும்” என தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னைக்கு இன்று அக்டோபர் 11-ந் தேதி வருகை தந்த பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்ததாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
