தமிழ்நாட்டிலிருந்து வளர்ச்சி அடைந்த பாரதம் படைக்கும் உறுதிப்பாட்டை நனவாக்குவோம் – மோடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Modi

சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.13000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் விஜய் உடன் இணைந்து தொடங்கி வைத்தார்

நெடுஞ்சாலைகள், ரெயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் அன்றாட பயணத்தை மேலும் விரிவாக்கும், மற்றவை தொழில்துறையையும் வர்த்தகத்தையும் பலப்படுத்தும். இவை அனைத்தும் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த தருணத்தில் நான் தமிழ்நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து நவராத்திரி புனித காலம் தொடங்குகிறது. இந்த புனிதமான வேளையில், சிவனோடு கூடவே சக்தி பீடம் கொண்டிருக்கும் பவித்திரமான பூமியாம் தமிழ்நாட்டில் நான் இருக்கிறேன். இங்கு வருவதற்கு முன் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பகவான் சிவனின் நல்லாசிகளைப் பெறும் பேறு எனக்கு கிட்டியது. புண்ணிய பூமியாம் தமிழ்நாட்டிலிருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் நவராத்திரி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இன்று பாரத ரத்னா ஜெயபிரகாஷ் நாராயணன், நானாஜிதேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாளும் ஆகும். அவர்களுடைய வாழ்வு தேசபக்தி, தேச சேவை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. அவர்களை இந்த வேளையில் நான் நினைவுகூறுகிறேன்.

சற்று முன்னால் மதராஸ் ஐஐடியில் மூளை ஆய்வு மையம் செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இந்த துறையில் நடைபெற்று வரும் ஆய்வு பொது சுகாதாரத் துறையில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மேலும் சென்னை மெட்ரோவின் வேறு ஒரு விரிவாக்கத்தை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது

ADVERTISEMENT

ஆலயம் முதல் மெட்ரோ வரை தமிழ்நாட்டின் இந்த அனுபவம்தான் பாரதத்தின் உணர்வு. பாரதம் தனது கலாச்சார சக்தியிலிருந்து உத்வேகம் பெறுகிறது; அறிவியல் வளர்ச்சியில் முன்னேறுகிறது; மேலும் நவீன உள்கட்டமைப்பு வாயிலாக புதிய வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு வருகிறது. பாரம்பரியம் மற்றும் நமது எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்து நாம் முன்னேறி வருகிறோம்.

சில நாட்களுக்கு முன்பாக உங்கள் நல்லாசிகளோடும், உங்கள் இனிமையான அன்பு காரணமாகவும் அரசாங்கத்தின் முன்னவர் என்ற வகையில் எனது 25 ஆண்டு கால மகத்துவமான பயணம் நிறைவடைந்தது. அக்டோபர் மாதம் 2001 ஆம் ஆண்டிலேயே நான் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டேன். அப்போதிலிருந்து முதல்வராகவும் பிரதமராகவும் சேவை புரிய எனக்கு வாய்ப்பளித்தார்கள். 25 ஆண்டுகள் என்ற இந்த காலகட்டத்தில் ஜனநாயகத்தின் இரண்டு சக்திகளின் மீது பலமான நம்பிக்கை மேலும் மேலும் எனக்கு பலப்பட்டு வந்திருக்கிறது: முதலாவது, நாட்டின் குடிமக்களான நீங்கள்; இரண்டாவது, கூட்டுறவு கூட்டாட்சி.

நான் எப்போதுமே மாநிலங்களின் வளர்ச்சியிலே தேசத்தின் முன்னேற்றம் என்ற மந்திரத்தை மனதில் தாங்கிப் பயணித்து வந்திருக்கின்றேன். ஒரு முதல்வர் என்ற வகையில் மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை நான் நன்கு புரிந்து கொண்டேன். அதனால்தான் பிரதமரானவுடன் நான் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டேன். அதே சமயத்தில் அனைத்து மாநிலங்களும் தங்களுடைய பேரார்வ இலக்குகளை நிறைவேற்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

முதலமைச்சராக இருந்தபோது பலமுறை கலைஞர் கருணாநிதி அவர்களோடும், ஜெயலலிதா அவர்களோடும் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பிரதமரான பிறகும் கூட ஜெயலலிதா அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், மு.க. ஸ்டாலின் அவர்கள் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அரசுகள் மாறிக் கொண்டிருந்தன, ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இங்கிருக்கும் மக்களுக்கு சேவை புரியும் என்னுடைய மன உறுதியும் எப்போதும் தொடர்ந்து இருந்து வந்தது. இதே உறுதிப்பாட்டோடு கூடவே நான் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களோடும் இணைந்து தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் நகர்ப்புற மேம்பாடு நமது பிரதான முதன்மையாகும். நகரமயமாக்கல் என்பது ஒரு சவால் அல்ல மாறாக அது ஒரு வாய்ப்பு என்பதை நாம் எப்போதும் கருதி வந்திருக்கிறோம். மேலும் இதில் பொதுத்துறை போக்குவரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. மக்களின் போக்குவரத்து முறைகள் நன்றாக இருக்க வேண்டும்; இதனால் மக்களின் வாழ்க்கையில் சுலபத் தன்மை அதிகரிக்கிறது.

சிறப்பான போக்குவரத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது மட்டுமே போதுமானது அல்ல, நவீன நகரங்களில் முழுமையான கட்டமைப்பு அவசியமாகும். ஆகையால் கடந்த 10 ஆண்டுகளாகவே நாடு முழுவதும் மெட்ரோ வலைப்பின்னலை மிகப் பெரிய அளவில் விரிவாக்கியிருக்கிறோம். 2014 ஆம் ஆண்டில் நாட்டில் 5 நகரங்களில் மட்டுமே இயங்கி வந்தது, இன்று தேசத்தின் 25 நகரங்களில் சேவைகள் செயல்பட்டு வருகின்றன.

2014 இல் தேசத்தின் மெட்ரோ வலைப்பின்னலின் தூரம் சுமார் 250 கிலோமீட்டர் மட்டுமே இருந்தது, இன்று இந்த வலைப்பின்னல் 1100 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக உள்ளது. இன்று சென்னை மெட்ரோவின் இந்த விரிவாக்கம் காரணத்தால் இந்த வலைப்பின்னல் மேலும் பெரியதாகி வருகிறது.

ஏன் தெரியுமா? சென்னையில் வசிக்கும் சாமானிய மக்கள், இங்கிருக்கும் பணிபுரியும் குடும்பங்கள், இங்கேயே இருக்கும் மாணவ மாணவிகள், மூத்த குடிமக்கள் அனைவரின் பயணமும் சுலபமாக வேண்டும், அவர்களின் பயணம் குறைவான நேரத்தில் நிறைவாக வேண்டும் என்பதே இந்த சீரிய பணியின் நோக்கமாகும்.

நமது மாநிலங்களை சக்தி படைத்தவையாக மாற்றி பாரதத்தை சக்தி உடையதாக நாம் ஆக்க வேண்டும். ஆகையால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பொருட்களின் உற்பத்தியை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை, இங்கே இருக்கும் சிறு தொழில்கள், இவற்றில் வேலை பார்க்கும் அனைவர் மீதும் பாரத நாட்டவர் அனைவரும் பெருமிதம் கொள்கிறார்கள்.

மேலும் இன்று இந்தியாவில் தயாரிப்போம், உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற மத்திய அரசின் இயக்கங்கள் தமிழ்நாட்டிற்கும் ஆதாயங்களை அளித்து வருகின்றன. இன்று உள் பாகங்கள் தொடங்கி தொழில்நுட்பம் மற்றும் முடிவடைந்த பொருட்கள் வரை அனைத்து மாநிலங்களுமே மத்திய அரசின் ஒட்டுமொத்த பொருட்கள் சங்கிலியைப் பயன்படுத்தி வருகின்றன. மேலும் இந்த முயற்சிகளின் பலனாக நாம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்பேசி தயாரிப்பாளராக மாறி இருக்கிறோம். 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை நமது மின்னணு உற்பத்தி ஏற்றுமதி 16 மடங்கு அதிகரித்து உள்ளது; நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 50 மடங்கு அதிகரித்து இருக்கிறது; மேலும் நமது பொறியியல் ஏற்றுமதியும் கூட இந்த ஆண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

தயாரிப்பின் இந்த பயணம் காரணமாக தேசத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. மேலும் பாரதத்தின் இந்த தயாரிப்பு வளர்ச்சியிலே தமிழ்நாட்டின் மக்களுடைய மெச்சத்தகுந்த பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. இன்று நாம் மேம்பட்ட லூப்ரிகன்ட் பேஸ் ஆயில் (Lubricant Base Oil) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இருக்கிறோம். இதனால் இங்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்; தேசத்தின் இறக்குமதியை குறைப்பதிலும் இது பேருதவியாக இருக்கும்.

பலமான ஒரு உற்பத்தித் துறை உருவாக்க நமக்கு நல்ல சாலை வசதிகள் தேவை, கச்சா பொருட்களின் போக்குவரத்துக்காக ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தேவை. அப்படிப்பட்ட உள்கட்டமைப்பு உருவாகும்போது இதனால் பல்வேறு மட்டங்களில் அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாகிறது. கட்டுமானம் நடக்கிறது என்று சொன்னால் பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கிறது, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகிறது. சிமெண்ட், எஃகு மற்றும் உபகரணங்களோடு தொடர்புடைய தொழிற்சாலைகளிலும், சிறிய நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. மேலும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது நல்ல இணைப்புகள் காரணமாக தொழிற்சாலைகளும் சேவைகளும் மேம்படுவதில் உதவியாக இருக்கிறது. ஆகையால் இன்று ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.

இன்று நாம் பாரதத்தின் கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் உலகளாவிய மையமாக ஆக்கும் தொலைநோக்குடன் பணியாற்றி வருகிறோம். இதிலும் கூட தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டின் கப்பல் கட்டுமானத்திற்கு கௌரவம் வாய்ந்த சரித்திரம் இருக்கிறது. இந்த மரபு நவீன தொழில்நுட்பம் மற்றும் வாய்ப்புகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த திசையிலே மத்திய அரசு தற்போது ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவினை எடுத்திருக்கிறது. சுமார் 17,000 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் உலகத்தரத்திலான மெகா கண்டெய்னர் மற்றும் பசுமை எரிசக்தி மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களின் வேகமும் திறனும் சிறப்பாக ஆகி உள்ளது. வேகம் அதிகரிப்பதன் வாயிலாக துறைமுகங்களில் கப்பல்கள் திரும்பும் நேரம் பாதியாக குறைந்துவிட்டது. மேலும் இதன் காரணமாக பாரதத்தின் பொருட்களும் கூட முன்பை விட அதிக வேகத்தில் உலக சந்தைகள் வரை சென்று சேருகின்றன. நமது கடல்சார் பொருளாதார தொலைநோக்கிலே மீன்பிடி மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. ஆகையால்தான் பிரதமர் மந்திரி மீன்வளத் திட்டத்தோடு கூடவே மேலும் பல திட்டங்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இங்கே மீன்பிடித் துறைமுகங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன; மீன்பிடி படகுகள், கரைசேர் மையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன; குளிர் சேமிப்பு சங்கிலி வசதிகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது; மீன்களைப் புதிதாக வைத்துக் கொள்ள போக்குவரத்து வாகனங்கள் வாங்கவும் உதவிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சென்னை மீன்பிடித் துறைமுகம் மீனவ சகோதரர்களுக்கு சென்னை மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தப்படுவதாகட்டும், தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா மேம்பாடாகட்டும், மத்திய அரசு இவற்றில் உதவிகளைப் புரிந்து வருகிறது. விவசாயிகள் பற்று கார்டு மூலம் மீனவர்களுக்கும் செயல்படும் மூலதனம் சுலபமாக கிடைக்க உதவிகரமாக இருக்கிறது. ஆகையால் இந்த தேசத்தின் மீன்பிடி அளவு விரைவாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டிலே நமது கடல்சார் உணவு ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பு இரண்டிலும் மிக அதிக அளவுகளை எட்டியது. இதனால் நமது மீனவ குடும்பங்கள் மற்றும் கரையோர சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாகி வருகிறது.

இன்று எந்த திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவோ அவை நிகழ்காலம் மற்றும் எதிர்காலக் கனவுகளின் பாதையை உருவாக்க இருக்கின்றன. தொடர்ந்து பயணித்து புதிய சிகரங்களைத் தொடும் தமிழ்நாட்டைப் படைக்க நாங்கள் விரும்புகிறோம். இதற்காக மத்திய அரசாங்கத்திடமிருந்து தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். நாம் இதற்காகக் கச்சை கட்டிக் கொண்டு உங்களோடு பணியாற்ற இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் உழைப்பும் ஆற்றலும் தேசத்தின் எதிர்காலத்திற்கு திசையளிப்பதில் பெரும் பங்காற்ற வேண்டும். நாம் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிலிருந்து வளர்ச்சி அடைந்த பாரதம் படைக்கும் உறுதிப்பாட்டை நனவாக்குவோம். இந்த உணர்வோடு வாழ்த்துகிறேன்!” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share