டெல்லி போராட்டம்: சட்டவிரோத கைது கூடாது… மெட்ரோ, இணைய சேவைகளை முடக்கக் கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Mathi

Delhi-Protest-Supreme Court

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது (Delhi Protest) ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக இன்று (அக்டோபர் 11-ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அமைதியாகப் போராடும் மக்களைச் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கக் கூடாது என்றும், மெட்ரோ ரயில் மற்றும் இணைய சேவைகள் தடையின்றி இயங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் நேற்று (அக்டோபர் 10-ந் தேதி) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் காவலில் வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஏற்கெனவே அக்டோபர் 9-ந் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை டெல்லி போலீசார் மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணை நடத்தியது.

ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணை

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு காலை 10.30 மணியளவில் விசாரணையைத் தொடங்கியது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கே.கே.வேணுகோபால், கோபால் சங்கரநாராயணன், மேனகா குருசாமி உள்ளிட்டோர் ஆஜராகினர்.

ADVERTISEMENT

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். டெல்லி போலீசாரின் உயர் அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.

இந்த விசாரணையின்போது டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது, இணைய சேவை துண்டிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக வாதங்கள் நடைபெற்றன.

7,000 பேர் காவலில் வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு

மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதிடுகையில், டெல்லியில் சுமார் 7,000 பேர் காவலில் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றார். மேலும், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 45 தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சில எம்.பி.க்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாதபடி தடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போராட்டக்காரர்களைக் காவலில் வைத்தது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வமான முழு விவரங்களை வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல மற்றொரு வழக்கறிஞர், 6,000 முதல் 7,000 பேர் வரை காவலில் வைக்கப்பட்டதாகக் கூறினார்.

‘அறிவிக்கப்படாத அவசரநிலையா?’

மேனகா குருசாமி தனது வாதத்தின்போது, மக்கள் அமைதியாகப் போராடும் உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டதாலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டதாலும் பொதுமக்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் இவ்வாறு முடக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மற்றொரு வழக்கறிஞர் ஷதான் ஃபராசத், டெல்லியில் நேற்று நிலவிய சூழல் போலீஸ் ஆட்சியை நோக்கிச் செல்வதைப் போல இருந்ததாக வாதிட்டார். அமைதியாகப் போராடும் உரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போலீசார் அடையாள அட்டை அணியவில்லை

போராட்டத்தில் பங்கேற்றவர்களைச் சில போலீசார் தாக்கியதாகவும், காவலில் எடுத்துச் சென்றதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, போலீசார் சிலர் தங்களது பெயர் அடையாள அட்டைகளை அணியவில்லை என்றும் கூறப்பட்டது.

பெண் வழக்கறிஞர் ஒருவர், தாங்கள் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தபோது போலீசார் தங்களைப் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், போலீஸ் நிலையங்களில் வழக்கறிஞர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, அடையாள அட்டை அணியாத போலீசார், காவலில் எடுத்துச் சென்ற விதம், போலீசார் பயன்படுத்திய பலம் ஆகியவை குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதாக நீதிபதி ஜாய்மால்ய பாக்சி தெரிவித்தார்.

57 மெட்ரோ நிலையங்கள் விவகாரம்

டெல்லியில் போராட்டத்தையொட்டி 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதன் பிறகும் பல நிலையங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்ததாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர்.

விசாரணையின்போது 45 முதல் 47 மெட்ரோ நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. எந்தெந்த நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதை வரைபடத்துடன் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி பாக்சி கூறினார்.

இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அக்டோபர் 10-ந் தேதி மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணைப்படியே இயக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.சில நிலையங்களின் நுழைவாயில்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், நேற்று இரவு 10 மணி முதல் அனைத்து மெட்ரோ நிலையங்களும் திறக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இணைய சேவைகளும் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மெட்ரோ, இணைய சேவைகளுக்கு உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் வழக்கம்போல இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் சட்டப்படி நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால் பொதுமக்களின் போக்குவரத்து உரிமையை தேவையின்றி முடக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

டெல்லியில் பொதுமக்கள் சுதந்திரமாகச் சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இணைய சேவைகள் தடையின்றி இயங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அமைதியாகப் போராடுவோரைக் கைது செய்யக் கூடாது

உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு முக்கியமான உத்தரவு, போராட்டக்காரர்களைச் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கக் கூடாது என்பதாகும். குறிப்பாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின்கீழ் தடை உத்தரவு அமலில் இல்லாத பகுதிகளில் ஆயுதமின்றி அமைதியாகக் கூடும் மக்களைச் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், சட்டப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்த உத்தரவு தடை விதிக்கவில்லை.

அமைதியாகப் போராடும் உரிமையும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.

உச்ச நீதிமன்றம் அருகே 163-வது பிரிவு அறிவிப்பை அகற்ற உத்தரவு

உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் 163-வது பிரிவு அமலில் இருப்பதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் நீதிமன்றத்திற்குச் சென்று வருவதில் அச்சமும் குழப்பமும் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அந்த அறிவிப்புப் பலகை இன்னும் அகற்றப்படவில்லை என்றால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் மட்டுமின்றி மற்ற நீதிமன்றங்களுக்கும் மக்கள் தடையின்றிச் சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.

பத்திரிகையாளர்களைத் தடுக்கக் கூடாது

டெல்லி போராட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளைச் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டதாகவும், சிலர் காவலில் வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் வாதிட்டபோது, பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொழில்சார்ந்த பணிகளைச் செய்வதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற தொழில்முறைப் பணியாளர்கள் தங்களது பணிகளைச் செய்வதை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை

இந்த விசாரணையின்போது நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, அரசியல் சாசனத்தின் 19-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த உரிமைகளுக்குச் சட்டப்படி நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் சாசனத்தின் 32-வது பிரிவின்கீழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதைத் தடுப்பது உச்ச நீதிமன்றத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். போலீசார் சட்டப்படி செயல்பட்டார்களா, போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்பட்டனவா, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் பின்பற்றப்பட்டனவா ஆகியவை தொடர்ந்து விசாரிக்கப்படும் என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

அக்டோபர் 13-ந் தேதி மீண்டும் விசாரணை

டெல்லி போராட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பான பிற மனுக்களையும் ஒன்றாக இணைத்து அக்டோபர் 13-ந் தேதி மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி போராட்டத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டப்படி நடந்தனவா என்பது குறித்து அடுத்த விசாரணையில் விரிவாக ஆராயப்பட உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share