செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில்,”ஏலக்காய் லோடு ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்து விட்டதாக மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற லாரி ஓட்டுநர், காவல் நிலைய கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த மரணத்தை ‘தற்கொலை’ என்று கூறி தமிழகக் காவல்துறையினர் மூடி மறைக்க முயன்றாலும், காவல் மரணங்களுக்கு பெயர் போன தவெக ஆட்சியில், இது மற்றுமொரு காவல் மரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
காரணம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தான் தமிழக காவல் நிலையங்களின் கண்காணிப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளனவா? அல்லது புகாரளிக்க வந்த நபர், காவல் நிலைய கழிவறையிலேயே தூக்கு மாட்டிக் கொள்ளும் வரை காவலர்கள் என்ன உறங்கிக் கொண்டிருந்தார்களா? கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்டோர் அரசு காவலில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், காவலர்களின் இந்த சாக்குப்போக்கை கொஞ்சம் கூட நம்மால் நம்ப முடியவில்லை.
எனவே, லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தின் உண்மைப் பின்னணியை எவ்வித சமரசமுமின்றி தவெக அரசு விசாரிப்பதோடு, தமிழகக் காவல் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் விசாரணைக் கைதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த வேண்டும்! முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நிர்வாகக் குளறுபடிகளுக்காக, அப்பாவி மக்களின் உயிர்களை நாம் அடகு வைக்க முடியாது!” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி ‘Sorry வேண்டாம்; நீதி வேண்டும்’ என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், காவல் நிலைய வளாகத்திலேயே தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக அவரது புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, அந்த லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஏலக்காய் மூட்டைகளில் 67 மூட்டைகள் குறைவாக இருப்பதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவிகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூரியர் நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காகச் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்திருந்த பாலகிருஷ்ணன், அங்குள்ள கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு காவலர்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், காவல்துறையினரின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற காவல்துறையின் விளக்கத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு இந்தச் சம்பவத்தைக் கடந்து செல்ல முடியாது. பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் என்று அவரது குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் அனைத்தும் வெளிக்கொணரப்பட வேண்டும். சிபிசிஐடி விசாரணை எவ்விதத் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
நாகர்கோவில் காவல் நிலைய மரணத்தைத் தொடர்ந்து தற்போது செக்கானூரணி காவல் நிலைய மரணம் நிகழ்ந்திருப்பது தமிழ்நாட்டில் காவல் நிலைய மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது. காவல் நிலையங்கள் பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதி செய்ய வேண்டிய இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, உயிருக்கு உத்தரவாதமற்ற அச்சத்தின் கூடாரங்களாக மாறிவிடக் கூடாது.
இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏழு இளம் பெண்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் கவலையளிக்கிறது. ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மறுபுறம் காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் எனப் பொதுமக்கள் அச்சத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
காவல்துறையின் பொறுப்புணர்வையும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் உறுதி செய்வதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலைய மரணங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதுடன், தவறு செய்த காவல்துறையினர் எத்தகைய பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காவல் நிலையங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.










