நம் பாரம்பரிய உணவில் சிறுதானியங்களுக்குத் தனி இடம் எப்போதும் உண்டு. அந்த வரிசையில் நார்ச்சத்து நிறைந்த வெள்ளைச் சோளத்தை வைத்து விதவிதமாகச் செய்யலாம். வழக்கமான இட்லி, தோசைக்கு மாற்றாகவும், மாலைச் சிற்றுண்டி முதல் காலை உணவு வரையிலும் இதைப் பயன்படுத்தலாம். வீட்டில் எளிதாகச் செய்யக்கூடிய மூன்று ரெசிபிகள் இதோ.
வெள்ளைச் சோளத்தில் என்ன சத்து?
வெள்ளைச் சோளத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. இயற்கையிலேயே குளூட்டன் இல்லாத தானியம் என்பதால், குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் மாற்று உணவாக இருக்கலாம். நார்ச்சத்து இருப்பதால் வயிறு நிறைந்த உணர்வும் நீண்ட நேரம் நீடிக்கும்.
1. சோள பாலக் முறுக்கு
தேவை: சோள மாவு அரை கப், கோதுமை மாவு கால் கப், பாலக்கீரை கால் கப், பச்சை மிளகாய் ஒன்று, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் ஒரு ஸ்பூன்.
பாலக்கீரையையும் பச்சை மிளகாயையும் அரைத்து, மாவுகளோடு கலந்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையுங்கள். முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுத்தால் மாலை நேரத்துக்கு மொறுமொறு முறுக்கு தயார்.
2. காலைக்கு வெள்ளைச் சோள புட்டு
இரண்டு கப் வெள்ளைச் சோள மாவை இரண்டு நிமிடம் லேசாக வறுத்து ஆறவிடுங்கள். உப்புச் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையுங்கள்.
புட்டுக் குழாயில் தேங்காய்த் துருவலும் சோள மாவும் மாற்றி மாற்றி அடுக்கி, பத்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள். வெந்ததும் ஏலக்காய்த்தூள், வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்த்துச் சாப்பிடலாம்.
3. பஞ்சு மாதிரி சோள இட்லி
தேவை: வெள்ளைச் சோளம் ஒரு கப், உளுத்தம் பருப்பு அரை கப், வெந்தயம் ஒரு ஸ்பூன்.
இவற்றைத் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவையுங்கள். முதலில் உளுந்து, வெந்தயத்தை அரைத்து, அதன் பிறகு சோளத்தைச் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். உப்புச் சேர்த்த மாவை சுமார் நான்கு மணி நேரம் புளிக்கவிட்டு, இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்தால் சோள இட்லி ரெடி. இதே மாவில் தோசையும் சுடலாம்.
வழக்கமான அரிசி உணவுகளுக்கு நடுவே, அவ்வப்போது வெள்ளைச் சோளத்தையும் சேர்த்துப் பாருங்கள். குடும்பத்தினருக்குச் சிறுதானிய உணவை அறிமுகப்படுத்த இது எளிதான வழி.










