டாடா இன்டர்நேஷனல் தலைவராக டி.வி. நரேந்திரன்… கோவை, திருச்சிக்கு என்ன தொடர்பு?

By Mathi

|

Published on 14 Nov 2026, 5:33 PM

Tata Steel-TV Narendran

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டி.வி. நரேந்திரன், டாடா குழுமத்தின் சர்வதேச வர்த்தக நிறுவனமான டாடா இன்டர்நேஷனலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கும் கோவை, திருச்சிக்கும் என்ன தொடர்பு?

நோயல் டாடா

ADVERTISEMENT

டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவராக இருந்த நோயல் டாடா, 70 வயதை எட்டிய நிலையில், டாடா குழுமத்தின் ஓய்வு விதிகளின்படி அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கௌரவத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் புதிய தலைவராக டி.வி. நரேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

டி.வி. நரேந்திரன்

ADVERTISEMENT

டி.வி. நரேந்திரனின் முழுப் பெயர் தச்சாட் விஸ்வநாதன் நரேந்திரன் (Thachat Viswanath Narendran). 1965-ஆம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி பிறந்தவர். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். நரேந்திரனுக்கு 2 வயதாக இருந்தபோது அவரது குடும்பம் கோவைக்கு வந்தது. அங்குள்ள கிக்கானி பள்ளியில் படித்த நரேந்திரன், பின்னர் திருச்சிக்குச் சென்றார். திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். தற்போது இந்தக் கல்லூரி தேசிய தொழில்நுட்பக் கழகமாக (NIT) செயல்பட்டு வருகிறது. பொறியியல் படிப்பை முடித்த பிறகு கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM Calcutta) மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

1988-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் நரேந்திரன் பணிக்குச் சேர்ந்தார். ஆரம்பத்தில் சேல்ஸ், மார்க்கெட்டிங், இண்டர்நேஷனல் பிசினஸ் பிரிவுகளில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்த அவருக்கு 2005-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள நாட்ஸ்டீல் (NatSteel) நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது டாடா ஸ்டீல் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம்.

ADVERTISEMENT

2008-ஆம் ஆண்டு நாட்ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார். சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அந்த நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார். 2013-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிரிவுகளின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது 2017-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உயர்ந்தார் டி.வி. நரேந்திரன்.

டாடா ஸ்டீல் நிறுவனம் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இதன் தொழிற்சாலைகள் உள்ளன. டாடா இன்டர்நேஷனல் நிறுவனம் நேரடியாக எஃகு உற்பத்தி செய்வதைவிட, பல்வேறு நாடுகளில் உலோகங்கள், கனிமங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் நரேந்திரனுக்கு, தற்போது டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 1988-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த நரேந்திரன், கடந்த 38 ஆண்டுகளாக டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, தற்போது டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

டாடா நிறுவனங்களில் பணியாற்றுவதுடன் இந்தியா மற்றும் சர்வதேசத் தொழில் அமைப்புகளிலும் நரேந்திரன் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII), உலக எஃகு சங்கம், அகில இந்திய மேலாண்மை சங்கம் (AIMA) ஆகியவற்றின் தலைவராகவும் நரேந்திரன் பணியாற்றியுள்ளார். மேலும், XLRI ஜாம்ஷெட்பூர், ஐஐடி காரக்பூர், ஐஐடி பாட்னா ஆகிய கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களிலும் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். திருச்சி NIT, கொல்கத்தா IIM ஆகிய கல்வி நிறுவனங்களின் சிறந்த முன்னாள் மாணவர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel