ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய அறிவிப்பு இது. இதுவரை இலவசமாகக் கிடைத்துவந்த சில காப்பீடு, சினிமா டிக்கெட் சலுகைகளை வங்கி நிறுத்தப்போகிறது. அதோடு, கார்டை மாற்றுவதற்கான கட்டணமும், சில சர்வதேசப் பரிவர்த்தனைக் கட்டணங்களும் உயர்கின்றன. இந்த மாற்றங்கள் நவம்பர் 25, டிசம்பர் 11, டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் வெவ்வேறு கட்டங்களாக அமலுக்கு வரும்.
டிசம்பர் 15 முதல் இலவச இன்சூரன்ஸ் இல்லை
எமரால்டு பிரைவேட் மெட்டல், டைம்ஸ் பிளாக், எமரால்டு, எமரால்டு பிரைவேட், டயமண்ட், சஃபைரோ, ரூபிஎக்ஸ் உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் தரப்படும் இலவச விமான விபத்துக் காப்பீடு டிசம்பர் 15 முதல் நிறுத்தப்படுகிறது.
- எமரால்டு பிரைவேட் மெட்டல், டைம்ஸ் பிளாக், எமரால்டு, எமரால்டு பிரைவேட் கார்டுகளுக்கான பயண ரத்துக் காப்பீடும் (CFAR) முடிவுக்கு வருகிறது.
- பராக்ரம், பராக்ரம் செலக்ட் கார்டுகளுக்கான தனிநபர் விபத்துக் காப்பீடும் இனி கிடைக்காது.
இலவச ஐநாக்ஸ் சினிமா சலுகையும் முடிகிறது
ரூபிஎக்ஸ், கோரல், எக்ஸ்பிரஷன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மேக்மைட்ரிப், ஹெச்பிசிஎல் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் கிடைத்துவந்த இலவச ஐநாக்ஸ் (INOX) திரைப்படச் சலுகை டிசம்பர் 15 முதல் நிறுத்தப்படுகிறது. இந்த கார்டுகளில் இலவச டிக்கெட் வாங்கி வந்தவர்கள் இனி அதைப் பயன்படுத்த முடியாது.
கார்டு மாற்றக் கட்டணம் ரூ.300
கார்டு தொலைந்தாலோ சேதமானாலோ புதிய கார்டு வாங்க இப்போது ரூ.200 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம். டிசம்பர் 11, 2026 முதல் அது ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி ஆக உயர்கிறது. எமரால்டு பிரைவேட் மெட்டல், 1838 ரிசர்வ், டைம்ஸ் பிளாக் கார்டுகளுக்கு இந்தக் கட்டண உயர்விலிருந்து விலக்கு உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கான பிரையாரிட்டி பாஸ் மாற்றுவதற்கும் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் புதிதாக வருகிறது.
சர்வதேசப் பரிவர்த்தனைக் கட்டணம் 3.50%
வணிக மற்றும் கார்ப்பரேட் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நவம்பர் 25 முதல் டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் (DCC) கட்டணம் கூடுகிறது. இப்போது 1 சதவீதமாக இருக்கும் இது 3.50 சதவீதமாக மாறும்.
வெளிநாட்டில் இந்திய ரூபாயில் செய்யும் சில பரிவர்த்தனைகளுக்கும், வெளிநாட்டில் பதிவான வணிகர்களிடம் இந்தியாவில் ரூபாயில் செய்யும் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.
உங்கள் கார்டுக்கு எது பொருந்தும்? உங்கள் கார்டுக்கு எந்தச் சலுகை பொருந்துகிறது, எந்தத் தேதியில் மாற்றம் வருகிறது என்பதை ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.










