மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். லாரி ஓட்டுநரான இவர், மதுரையைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரி நாகராஜிடம் பணியாற்றி வந்தார். இந்நிலையில் போடியிலிருந்து மதுரைக்கு லாரியில் ஏலக்காய் ஏற்றிச் சென்றார் பாலகிருஷ்ணன். அப்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் கொடுத்திருந்தார். இதனிடையே லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக பதிவான வழக்கின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு மீண்டும் சென்றுள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனர். காவல் ஆய்வாளரின் அறையில் வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், மறுநாள் காலை காவல் நிலையக் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பது போலீசாரின் ஆரம்பகட்ட விளக்கம். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த பாலகிருஷ்ணன் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டது ஏன்? அவரை வீட்டிற்கு அனுப்பாமல் காவல் நிலையத்திலேயே வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? காவல் நிலையக் கழிவறையில் ஒருவர் தூக்கிட்டுக்கொள்ளும் சூழல் எப்படி ஏற்பட்டது? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
பாலகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்களும் அப்பகுதி மக்களும் செக்கானூரணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாலகிருஷ்ணன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நேரத்தில் என்ன நடந்தது, அவரிடம் யார் விசாரணை நடத்தினர், அவரது மரணத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பாலகிருஷ்ணன் மரணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு விஜய் அரசின் காவல்துறை மெத்தனமாக இருந்திருப்பதாக” குற்றம்சாட்டியுள்ளார். மேலும், செஞ்சி சிறுமி விவகாரம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை, காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தவெக அரசு திணறுவதாக விமர்சித்துள்ளார்.
விஜய் திரைப்படங்களில் பேசும் வசனங்களையும் அவரது ஆட்சியின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார். “நீதியும் வரல. சாரியும் வரல” என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, காவல் நிலைய மரணங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய சரமாரி கேள்விகள்
இதேபோல மதுரை காவல் நிலைய மரணத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடர்வதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணனை இரவில் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல் நிலையக் கழிவறையில் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது என்றும் கேட்டுள்ளார்.
பாலகிருஷ்ணனின் உடலை உறவினர்களுக்குக் காட்டாமல் அவசரமாக உடற்கூராய்வுக்கு அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரைத் தாக்கியதால் உயிரிழந்தாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், இந்தக் கேள்விகளுக்கு காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.










