மழைக்காலம் தொடங்கிவிட்டாலே சமையலறையில் இரும்புத் தோசைக்கல், கடாய் போன்றவற்றில் துரு பிடிக்கும் தொல்லை பல வீடுகளில் தொடங்கிவிடும். தொடர்ந்து மழை பெய்து காற்றில் ஈரம் கூடும்போது, இரும்புப் பாத்திரங்களைப் பராமரிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் சில எளிய வழிகளைப் பின்பற்றினால் துரு பிடிக்காமல், பல ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
துரு ஏன் பிடிக்கிறது?
காற்றில் இருக்கும் ஈரப்பதமும் ஆக்சிஜனும் இரும்போடு வினைபுரிவதால் துரு உருவாகிறது. பாத்திரத்தைக் கழுவிய பிறகு நன்றாக உலர்த்தாமல் வைப்பதும் முக்கியக் காரணம்.
1. பயன்படுத்தியதும் ஈரத்தைத் துடையுங்கள்
சமைத்து முடித்ததும் தோசைக்கல்லில் இருக்கும் எண்ணெய், ஈரம் இரண்டையும் காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் துடைத்துவிடுங்கள். கடாயைக் கழுவியதும் உடனே துணியால் துடைத்து, மிதமான தீயில் சுமார் ஒரு நிமிடம் சூடாக்கினால் மிச்ச ஈரமும் போய்விடும்.
2. எலுமிச்சையும் பேக்கிங் சோடாவும்
ஏற்கெனவே துரு பிடித்த பாத்திரத்தைத் தூக்கிப் போட வேண்டியதில்லை. துரு உள்ள இடத்தில் கொஞ்சம் பேக்கிங் சோடாவைத் தூவி, பாதியாக வெட்டிய எலுமிச்சைப் பழத்தால் நன்றாகத் தேயுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, ஈரமில்லாமல் துடைத்து, மெல்லிய எண்ணெய்ப் பூச்சு போடுங்கள்.
3. சிலிக்கா ஜெல் பாக்கெட்
புதிய பொருட்கள் வாங்கும்போது பெட்டியில் வரும் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளைப் பலரும் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். உண்மையில் அவை ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. சேதம் இல்லாத பாக்கெட்டுகளை, குழந்தைகளுக்கு எட்டாதபடி சமையலறை அலமாரிகளில் வைத்தால் ஈரப்பதம் கட்டுப்படும்.
4. உலர்ந்த இடத்தில் வையுங்கள்
இரும்புப் பாத்திரங்களை ஈரமான தரையிலோ காற்றோட்டம் இல்லாத அலமாரியிலோ வைக்காதீர்கள். உலர்ந்த இடத்தில் சேமியுங்கள். ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால், நடுவில் டிஷ்யூ பேப்பர் அல்லது மெல்லிய துணி வைப்பது நல்லது.
இந்தச் சின்னப் பராமரிப்புகளைத் தொடர்ந்து செய்தாலே, தோசைக்கல்லும் கடாயும் துரு இல்லாமல் நீண்ட காலம் உழைக்கும்.










