ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வந்த யூடியூபர் மணிகண்டனை, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஊட்டியில் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவரது தந்தை பெயர் சங்கர நாயனார். சமூக வலைதளங்களில் ‘மணி ப்ரோ’ என்று அறியப்படும் இவர், ‘Tiruchendur Manikandan’ என்ற யூடியூப் சேனலையும், ‘mani_history_mad’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பயன்படுத்தி வந்தார்.
ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பி இவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோரின் தயாரிப்புகள் குறித்து அவர் வெளியிட்ட வீடியோக்கள் சர்ச்சையாகியுள்ளன.
கோவை சிவானந்தா காலனி, டாடாபாத் சிக்ஸ் கார்னர் பகுதியில் ‘நான் கற்றது Exclusive Store’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் கே. விக்னேஷ்வரி. இவர் ‘nan katrathu’ என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். தான் தயாரிக்கும் பொருட்களின் செய்முறை, அவற்றின் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான வீடியோக்களை அந்தச் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மணிகண்டன் அனுமதியின்றி எடுத்து, அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வந்ததாக விக்னேஷ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.
தனது தயாரிப்புகள் குறித்தும் தொழில் குறித்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மணிகண்டன் பரப்பியதாகவும், தனிப்பட்ட முறையில் தன்னை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், மணிகண்டனின் சமூக வலைதளப் பதிவுகளால் தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நவம்பர் 13-ந் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விக்னேஷ்வரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மணிகண்டனின் சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மணிகண்டன் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஊட்டிக்குச் சென்று, இன்று மணிகண்டனைக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.
காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் மணிகண்டன் மீது ஏற்கெனவே 16 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.










