தனிஷ்க் நகைக் கடை கொள்ளை – இன்ஸ்டா பிரபலம் கைது; நகைகள் தோண்டி எடுப்பு!

By Kavi

|

Published on 14 Nov 2026, 7:44 PM

மதுரை தனிஷ்க் நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 

மதுரை புறவழி சாலையில் காளவாசல் பகுதியில் முன்னணி தொழில் நிறுவனமான டாடா குழுமத்திற்கு சொந்தமான தனிஷ்க் நகை கடை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

முழுமையாக கட்டுமானம் ஆகாத அவசர அவசரமாக திறக்கப்பட்ட இந்த கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 

அன்றைய தினம் அதிகாலை 3 மணி அளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த  கொள்ளையர்கள் அங்கு கண்ணாடி ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். 

ADVERTISEMENT

இது தொடர்பாக தனிஷ்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மதுரை காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் மேற்பார்வையில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

தனிஷ்க் கடையில் இருந்த சிசிடிவி, அதன் சுற்றுப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடையின் பின்பக்கத்தில் கட்டடப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சாரங்கள் வழியாக மேலே ஏறி லிப்ட் திறப்பு வழியாக உள்ளே வந்ததும் அவர் கடைக்குள் ஒரு மணி நேரம் இருந்ததும் தெரிய வந்தது. 

தொடர்ந்து கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக கூறப்படும் வழித்தடங்களில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவை சேர்ந்த நிஷாந்த் கிருஷ்ணா என்ற பட்டதாரி இளைஞர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சூழலில் நிஷாந்த் கிருஷ்ணா மடக்குளம் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு இரண்டு பைகளில் துணிகளுடன் சென்று அவற்றை எரித்ததாக அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் போலீsaaருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அங்கு சென்று போலீசார் விசாரித்ததில், அந்த துணிகள் நகைகடைக்கு சென்ற போது அணிந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவருடைய செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். 

இதில் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு நிஷாந்த் கிருஷ்ணா தனது செல்போனில் இருந்து மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் மீனாட்சிக்கு தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

நிஷாந்த் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதற்கிடையே மீனாட்சியிடம் நகைகள் எங்கே என்று போலீசார் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மாடக்குளத்தில் உள்ள மலை அடிவார பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். 

இதைத்தொடர்ந்து மீனாட்சியை அழைத்துக் கொண்டு அங்கு சென்ற போலீசார், நகைகளை தோண்டி எடுத்தனர். 

ஏற்கனவே நிஷாந்த் தந்தை சுரேஷிடம் இருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மீதமிருந்த 10 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel