வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை ‘அக்வான்’ புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயல் நவம்பர் 19-ந் தேதி இரவு அல்லது 20-ந் தேதி அதிகாலை சென்னை எண்ணூர் – கடலூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை வல்லுநர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கூறியுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மிக மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று (நவம்பர் 15) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை நவம்பர் 16-ந் தேதி புயலாகவும், நாளை மறுநாள் நவம்பர் 17-ந் தேதி தீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
சென்னை – கடலூர் இடையே கரையைக் கடக்குமா?
வங்கக்கடலில் உருவாகும் புயலின் நகர்வை வளிமண்டலத்தில் நிலவும் இரண்டு உயர் காற்றழுத்த அமைப்புகள் பாதிக்கக்கூடும். இதனால் நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் புயல் மெதுவாக நகர்ந்து, ஒரே இடத்தில் நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அதன் பின்னர் காற்றழுத்த அமைப்புகளில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து புயல் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குறிப்பாக, நவம்பர் 19-ந் தேதி இரவு முதல் 20-ந் தேதி அதிகாலைக்குள் சென்னை எண்ணூர் – கடலூர் இடையே ‘அக்வான்’ தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
வடதமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
அக்வான் புயலின் தாக்கத்தால் நாளை மறுநாள் நவம்பர் 17-ந் தேதி இரவு முதல் தமிழகத்தில் மழை படிப்படியாகத் தொடங்கக்கூடும். நவம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பருவமழையின் 3-வது சுற்று தீவிரமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக்கூடும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சீரான மழைப்பொழிவு இருக்கும். புயல் மேற்கு நோக்கி நகர்ந்தால் நவம்பர் 16-ந் தேதியே டெல்டா பகுதிகளில் லேசான மழை தொடங்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா, வர்தா புயல்களைப் போல பாதிப்பு இருக்குமா?
’அக்வான்’ தீவிரப் புயலாக வலுப்பெற்றாலும், கஜா, தானே, ஓக்கி, வர்தா போன்ற புயல்களால் ஏற்பட்ட அளவுக்குப் பெரிய சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இருப்பினும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். காற்றின் தாக்கத்தைவிட மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்தடுத்து புயல்கள் உருவாவது ஏன்?
வங்கக்கடலில் அடுத்தடுத்து புயல்கள் உருவாவதற்குக் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதும், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும் முக்கியக் காரணங்களாக உள்ளன. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோ (El Niño) எனப்படும் வெப்பநிலை மாற்றமும் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. வங்கக்கடலில் கடல் நீரின் வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாகவும், இது புயல் வலுப்பெறுவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களும் இன்று முதல் 20-ந் தேதி வரை கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
நவ.22-ல் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி?
இதனிடையே நவம்பர் 22-ந் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் டிசம்பர் மாதத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கக்கூடும். இவ்வாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.










