‘சாலை பேட்ச் ஒர்க்கில் ரூ.2,000 கோடி ஊழலா?’ ஆதவ் அர்ஜூனாவுக்கு ‘கிளாஸ்’ எடுத்த எ.வ.வேலு

By Mathi

|

Published on 15 Nov 2026, 8:36 AM

EV Velu Press Meet

சாலை பராமரிப்புப் பணிகள் (பேட்ச் ஒர்க்) என்ற பெயரில் ரூ.2,000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விரிவான விளக்கம் அளித்துள்ளார். சாலை பராமரிப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது முதல் டெண்டர் விடுவது வரை அனைத்தும் அதிகாரிகள் நிலையிலேயே நடைபெறுவதாகக் கூறிய எ.வ.வேலு, “தவறு இருந்தால் கண்டுபிடிக்கட்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிக்கட்டும்” என்று சவால் விடுத்தார்.

திருவண்ணாமலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று (நவம்பர் 14) செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீது ஏற்கனவே ஊழல் தடுப்புத் துறையின் சார்பாக ஒரு புகார் கொடுக்கப்பட்டு, அதில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பான தகவல் அறிந்த உடனேயே, என்னுடைய நியாயங்களை எடுத்துவைப்பதற்காக உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறேன்.

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் உள்ள ஊழல் தடுப்புக் காவல்துறை மூலமாக எனக்கு சம்மன் வழங்கப்பட்டது. அந்த சம்மன் அடிப்படையில் இன்றைக்கு நேரடியாக அந்த அலுவலகத்திற்குச் சென்று விசாரணையில் கலந்துகொண்டேன். அவர்களுடைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறேன். அவர்கள் என்னென்ன கேள்விகள் கேட்டார்களோ, அந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாக நான் பதில் அளித்திருக்கிறேன். கடைசியாகக் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு, காவல்துறை அதிகாரிகளிடம், உங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறேன் என்று தெரிவித்தேன். அதற்கான வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

நீதிமன்றத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை

எனக்கு எப்போதும் நீதிமன்றத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை உண்டு. ஏற்கனவே 2006-ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை நான் அமைச்சராக இருந்தபோது, அதற்குப் பின்னர் அதிமுக அரசாங்கத்தின் மூலமாக என் மீது இதே துறையின் சார்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது என்பது திருவண்ணாமலையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நம்முடைய மூத்த வழக்கறிஞர் கே.வி.எம். அவர்கள்தான் நீதிமன்றத்தில் அந்த வழக்கை நடத்தினார். அதற்குப் பின்னர் அன்றைய அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்றது. கடைசியாக உச்சநீதிமன்றம் வரை சென்று நான் நிரபராதி என்பதை நிரூபித்து விடுதலை பெற்றேன். அதுவும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ADVERTISEMENT

அதேபோல இப்போது வந்திருக்கிற இந்த அரசாங்கமும் திட்டமிட்டு என் மீது தவறான, பொய்யான வழக்கைப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்திருக்கிறது. அதனால்தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறேன். என்னுடைய நியாயங்களை, நான் நிரபராதி என்பதற்கான விவரங்களை என்னுடைய வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துவைத்திருக்கிறேன். ஏற்கனவே மனுவும் தாக்கல் செய்திருக்கிறேன். இந்த விசாரணையில் நீதிமன்றத்தின் மூலமாக எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் விசாரணைக்கு வந்திருக்கிறேன்.

திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் மண் எடுத்ததாகப் புகார்

என் மீது என்ன வழக்கு என்று கேட்டால், இதுவும் உங்களுக்குத் தெரிந்த வழக்குதான். 2025-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாடு இளைஞரணி சார்பாக நடைபெற்றது என்பது இங்குள்ள செய்தியாளர்கள் அனைவருக்கும் தெரியும். இளைஞரணி சார்பாக அந்த மாநாட்டை நடத்துவதற்கு மாநில தலைமை ஆணையிட்டது. அதன்படி இளைஞரணித் தம்பிமார்கள் அந்த மாநாட்டை நடத்தினார்கள்.

ADVERTISEMENT

டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த மாநாட்டில் எங்கள் கழகத் தலைவர், அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைய துணை முதலமைச்சர்- இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ச்டாலின், பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். நானும் அமைச்சர் என்ற முறையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். அந்த மாநாடு நடைபெற்றது என்பது ஊரறிந்த விஷயம்.

மாநாடு நடைபெற்ற இடம் சமமான பூமி அல்ல. எனவே மலப்பாம்பாடி ஏரியிலிருந்து மண்ணை எடுத்துக் கொட்டி, அந்த இடத்தைச் சமப்படுத்தித்தான் மாநாட்டை நடத்தியதாகக் கூறுகிறார்கள். அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் மண்ணை எடுத்தது பெரிய குற்றம் என்ற அடிப்படையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இளைஞரணி மாநாடு நடைபெற்றது டிசம்பர் மாதம். அதற்கு முன்னதாகவே, ஏறத்தாழ 5 மாதங்களுக்கு முன்பு, அதே இடத்தில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதுவும் பத்திரிகையாளர்களான உங்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்லாமல், அந்த இடத்தில் ஓர் அரசாங்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த இடம் ஏற்கனவே சமமாக இருந்ததால்தான் அந்த நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்றன. ஏற்கனவே 2 நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே இடத்தில்தான் மூன்றாவதாக இளைஞரணி சார்பாக மாநாடு நடத்தப்பட்டது. இளைஞரணித் தம்பிமார்கள் அந்த இடத்தைப் பெற்று மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள்.

ஆகவே, இது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட பொய் என்று சொல்வதற்குக் காரணம், அந்த இடம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதுதான். அதனால்தான் ஒரு பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று சொல்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் எ.வ.வேலு அளித்த பதில்களும்:

முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள்

கேள்வி: தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு முன்னாள் அமைச்சராக வழக்குப் பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: பொதுவாகவே இந்த அரசாங்கம் வந்ததிலிருந்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அக்கறையைவிட, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர்வது, ஏதாவது கேட்டால் ஊழல் என்று ஊதுகுழல் மாதிரி ஊதிக்கொண்டே இருப்பது போன்ற வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

‘லீக்கேஜ்’ என்று அதற்கு ஒரு புதுவிதமான வார்த்தையைக் கண்டுபிடித்து, ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியும். சட்டமன்றத்தில் முதலமைச்சர் எழுந்து ஒரு வார்த்தை சொன்னார். ஊழல் என்றார். நீங்களே தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நான்தான் எழுந்து கேட்டேன். ஊழல் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்? ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் பேச வேண்டும். ஆதாரம் இல்லாமல் சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்று சொன்னேன். நாங்களெல்லாம் நீண்ட காலமாக சட்டமன்றத்தில் இருக்கிற காரணத்தால் இதைச் சொல்கிறேன். இனிமேல் ஆதாரத்துடன்தான் பேச வேண்டும் என்று சபாநாயகரிடம் முறையிட்டேன். சபாநாயகரே ஒரு ரூலிங் கொடுத்தார். இனிமேல் சட்டமன்றத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று அவரே உத்தரவிட்டிருக்கிறார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

ரீல்ஸ் மூலம் ஆட்சியைப் பிடித்தார்கள்

இந்த ஆட்சி எப்படி வந்தது? மக்களிடம் சென்று தொண்டு செய்துவிட்டு, நாங்கள் இதையெல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்களா? இல்லை, எங்களுடைய கட்சியின் நோக்கம் தமிழுக்காக உயிர் கொடுத்தோம், தமிழுக்காகச் சிறை சென்றோம், எங்களுடைய தியாகத்திற்காக வாக்களியுங்கள் என்று கேட்டு வந்தார்களா?

எங்களைவிட மொழிப்பற்று உள்ளவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்று சொல்லி வந்தார்களா? இந்த மண்ணின் மீது எங்களுக்கு மிகுந்த பாசம் இருக்கிறது, திராவிட உணர்வு இருக்கிறது என்று சொல்லி வந்தார்களா? எதுவுமே கிடையாது.

வீட்டில் இருக்கிற சின்னப் பிள்ளைகளையும், என்னுடைய அன்புச் சகோதரிகளையும் ரீல்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற டிஜிட்டல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஏமாற்றியிருக்கிறார்கள். இல்லாத பொல்லாத செய்திகளையெல்லாம் வீடு வரைக்கும் கொண்டு சென்று ஓர் ஏமாற்று வேலையைப் பார்த்து, அதன் அடிப்படையில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.

எந்தத் தியாகத்தைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தார்கள்? நான் மாணவர் பருவத்தில் இருந்தபோது தமிழுக்காகப் போராடியவன். போலீசாரிடம் அடி வாங்கியவன். இன்றைக்கும் என்னுடைய காலில் அந்த வடு இருக்கிறது. எந்த நோக்கத்தைச் சொல்லி அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? ஒன்றும் கிடையாது.

அவர்களுடைய நோக்கம் என்ன? ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் மீது ஊழல், ஊழல் என்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது. மக்களிடம் சென்று இவர்கள் ஊழல் செய்தார்கள், தவறு செய்தார்கள் என்று ஒரு கருத்தைக் கட்டமைப்பது. ஒரு தத்துவம் சொல்வார்கள்.. பொய்யையே பலமுறை சொன்னால் அது உண்மையாக மாறிவிடும் என்று சொல்வார்கள். அதுபோல ஒரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது எடுபடாது.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்

கேள்வி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் பற்றி?

பதில்: கடந்த 4 நாட்களாக ஒரு செய்தி உலகளாவிய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்களுடைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு இந்தச் செய்தி தெரிந்த உடனேயே, ஒரு மக்கள் பிரதிநிதி என்ற காரணத்தினால், அவர் நேரடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று தகவல் தெரிவித்திருக்கிறார். இப்படியொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது எங்களுடைய மாவட்டத்திற்கு அவமானம். உரிய நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லி, தகவலைக் கொண்டு சென்றவரே அவர்தான்.

அன்றைய தினத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் இருக்கிறார். ஏனென்றால் அவருக்கு ஏற்பட்டிருக்கிற மன உளைச்சல் பற்றி நீங்களே பத்திரிகைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.

இந்தத் தகவல் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற தலைமைச் செயலாளர் வரைக்கும் சென்றிருக்கிறது. எனவே தலைமைச் செயலாளர் முதலமைச்சரிடம் சொல்லி, அந்தச் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கைதான் எடுக்க வேண்டும். இதில் வேறு என்ன மாற்று இருக்க முடியும்? தலைமைச் செயலாளர் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் இது.

நெடுஞ்சாலைத் துறை மீதான குற்றச்சாட்டுகள்

கேள்வி: நெடுஞ்சாலைத் துறையில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அந்தத் துறையின் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: நெடுஞ்சாலைத் துறை என்பது 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட துறை. இந்தத் துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து காங்கிரஸ் ஆட்சி இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்திருக்கிறது. திராவிட இயக்கம் என்ற பெயரில் அதிமுக ஆட்சியும் இருந்திருக்கிறது.

இப்படி மாறி மாறி பல்வேறு அரசாங்கங்கள் இந்தத் துறையை நிர்வகித்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மட்டுமல்ல, எங்கள் மாவட்டத்திற்கும் அவர்தான் பொறுப்பு அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா).

நான் இதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். அவர் எல்லார் மீதும் குற்றச்சாட்டு சொல்கிறார். நெடுஞ்சாலைத் துறையைப் பற்றியும் குற்றச்சாட்டு சொல்கிறார். பொதுப்பணித் துறையைப் பற்றியும் குற்றச்சாட்டு சொல்கிறார். நேற்று அவர் சொன்ன குற்றச்சாட்டையும் இங்கே இணைத்துச் சொல்கிறேன். பொதுப்பணித் துறை தொடர்பாக ஒரு குற்றச்சாட்டைச் சொல்கிறார்.

”நான் திருவண்ணாமலைக்குப் போனேன். அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தண்ணீர்கூட இல்லாத நிலைமை இருக்கிறது. ஆனால் அங்குள்ள முன்னாள் அமைச்சருடைய மருத்துவக் கல்லூரியில் எல்லா வசதிகளும் இருக்கின்றன” என்று சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.

முதலில் அது முன்னாள் அமைச்சருடைய மருத்துவக் கல்லூரி என்று சொன்னாரே, அதுவே 100 சதவிகிதம் பொய். ஏனென்றால் அந்த மருத்துவக் கல்லூரிக்கும் அங்குள்ள அறக்கட்டளைக்கும் எனக்குச் சம்பந்தம் இல்லை என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. அந்த மருத்துவக் கல்லூரியைப் பற்றி அவ்வளவு அக்கறையாகப் பேசுகிறாரே, அந்த மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்தது யார்? சொல்லுங்கள்.

கலைஞரிடம் சொல்லி, அண்ணன் கலைஞரிடம் எடுத்துச் சொல்லி அந்த மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்தவன் நான். ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர்ப் பிரச்சினை வரும்போது, எங்கள் ஊரில் இருக்கிற தூய்மை அருணை என்ற அமைப்பின் மூலமாக லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அந்த மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்திருக்கிறேன்.

எனக்கு அந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது. ஆனால் அமைச்சர் என்ற பொறுப்புக்கு வந்துவிட்ட காரணத்தினாலேயே எப்படியாவது ஒரு குற்றச்சாட்டைச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பேசுகிறார்.

பொதுப்பணித் துறைக்கு நிதி ஒதுக்குவது எப்படி?

பொதுப்பணித் துறைக்கு என்று தனியாக எந்தவித நிதியும் கிடையாது என்று அவரே (ஆதவ் அர்ஜூனா) ஒரு பேட்டியில் சொல்கிறார். அதற்குப் பிறகு என்ன சொல்கிறார்? தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அங்கே கழிப்பறைகள் கட்டவில்லை. இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை. ஏற்கனவே எல்லாவற்றையும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்கிறார். அவரே பணம் ஒதுக்க வேண்டும் என்றும் சொல்கிறார். முதலில் பொதுப்பணித் துறையின் பணிகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு கல்வித் துறையில் கட்டடம் கட்டுவதாக இருந்தாலும், பராமரிப்பதாக இருந்தாலும் கல்வித் துறையிலிருந்து மானியம் ஒதுக்க வேண்டும். மருத்துவத் துறையாக இருந்தால் மக்கள் நல்வாழ்வுத் துறையிலிருந்து மானியம் ஒதுக்க வேண்டும். அந்தப் பணம் பொதுப்பணித் துறைக்கு வந்தால்தான் பணிகளைச் செய்ய முடியும். பொதுப்பணித் துறைக்கு என்று நேரடியாக எல்லாப் பணிகளுக்கும் பணம் கொடுக்கிற பழக்கம் கிடையாது. இதுதான் உண்மை. அவரே இதைச் சொல்லிவிட்டு, அதைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் மாற்றிப் பேசுகிறார். ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா.

ரூ.2,000 கோடி பேட்ச் ஒர்க் ஊழல் குற்றச்சாட்டு

அந்த அடிப்படையில்தான் நெடுஞ்சாலைத் துறையிலும் குற்றச்சாட்டைச் சொல்கிறார். ”ரூ.2,000 கோடிக்கு மேல் பேட்ச் ஒர்க் என்ற பெயரில் ஊழல் நடந்திருக்கிறது; அதை இப்போது ஊழல் தடுப்புத் துறையிடம் ஒப்படைக்கப் போகிறோம்” என்று சொல்கிறார் ஆதவ் அர்ஜூனா.

ஒப்படைக்கட்டுமே! தவறு இருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்கட்டும். தவறு இருந்தால் கண்டுபிடிக்கட்டும். ஒரு துறை என்பது அரசாங்கத்தின் மூலமாக நடைபெறுகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் விதிகளுக்கு உட்பட்டுத்தான் அந்தத் துறையை நடத்த முடியும். நெடுஞ்சாலைத் துறையில் எனக்குத் தெரிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், உதவிப் பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் பொறுப்புக்கு வந்தால், தன்னுடைய துறையை நல்ல பெயருடன் கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. ஆனால் இவர் வந்ததிலிருந்து எப்போதும் அந்தத் துறையைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். துறையை நாசப்படுத்துவது போலப் பேசிக்கொண்டிருக்கிறார். அந்தத் துறை எவ்வளவு சேவை செய்கிறது என்பதை என்றைக்காவது சொல்லியிருக்கிறாரா? அந்த அடிப்படையில்தான் இந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்பட்டிருக்கிறது.

70,000 கிலோமீட்டர் சாலைகள் பராமரிப்பு

நான் ஏற்கனவே சொன்னேன். நெடுஞ்சாலைத் துறை 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்றைய தேதியில் ஏறத்தாழ 70,000 கிலோமீட்டர் சாலைகளை அந்தத் துறை பராமரிக்கிறது. 70,000 கிலோமீட்டர் சாலைகளைப் பராமரிப்பதற்காக அரசாங்கமே ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது.

பிஆர் என்று ஒன்று இருக்கிறது. அது காலமுறைப் பழுதுபார்ப்புப் பணி. இன்னொன்று திட்டம் சாராப் பணிகள். ஓஆர் என்று ஒன்று இருக்கிறது. அது சாதாரணப் பழுதுபார்ப்புப் பணி. இப்படிப்பட்ட பராமரிப்புப் பணிகளுக்காக ஏறத்தாழ ரூ.800 கோடியை அரசாங்கமே நேரடியாக பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. இதுதவிர இன்னொரு வகையான சேவை துறைகளும் இருக்கின்றன.

இப்போது மின்சார வாரியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் கேபிள் பதிக்க வேண்டும். அதற்காகச் சாலையைத் தோண்டுகிறார்கள். கேபிள் பதிப்பதற்காகச் சாலையைத் தோண்டினால், அந்தச் சாலையை மீண்டும் சீரமைப்பதற்கான பணத்தைக் கட்ட வேண்டும்.

அதேபோல குடிநீர்க் குழாய் பதிக்க வேண்டும் என்றாலும் சாலையைத் தோண்ட வேண்டியிருக்கிறது. அதற்குரிய பணத்தையும் நெடுஞ்சாலைத் துறைக்குக் கட்ட வேண்டும். இதில் தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேபிள் பதிக்கின்றன. அந்த நிறுவனங்கள் சாலையைச் சேதப்படுத்தினால், அதை மீண்டும் சீரமைப்பதற்கான கட்டணத்தை நெடுஞ்சாலைத் துறைக்குச் செலுத்த வேண்டும்.

ஒன்று, அரசாங்கம் சாலைகளைப் பராமரிப்பதற்காக ஒதுக்குகிற பணம். இன்னொன்று, தனியார் நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்தின் பிற துறைகள் சாலைகளைத் தோண்டும்போது, அவற்றை மீண்டும் சீரமைப்பதற்காகச் செலுத்துகிற பணம். இந்தப் பணத்தை வைத்துத்தான் அந்த சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.

சாலைப் பராமரிப்பு என்றால் என்ன?

சாதாரணமாக மழை பெய்கிறது. மழை பெய்தால் சாலைகள் சேதமடைகின்றன. சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்படுகின்றன. அப்போது பேட்ச் ஒர்க் செய்ய வேண்டுமா, வேண்டாமா? செய்ய வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னால் நம்முடைய ஊர்களில் இருக்கிற கல்வெட்டுகள், சிறுபாலங்கள் போன்றவற்றில் புதர்கள் வளர்ந்துவிடுகின்றன. அந்தப் புதர்களை அப்படியே விட்டுவிட்டால் தண்ணீர் செல்ல முடியுமா? அவற்றைச் சீரமைக்க வேண்டுமா, வேண்டாமா? சீரமைக்க வேண்டும்.

சாலையோரங்களில் இருக்கிற மைல் கற்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றுக்கு பெயிண்ட் அடித்து எண்கள் போடுகிறார்களா, இல்லையா? சாலையோரங்களில் மரங்கள் இருக்கின்றன. இந்த மரம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்பதற்காக அந்த மரங்களுக்குப் பெயிண்ட் அடித்து எண்கள் போடுகிறார்களா, இல்லையா? இப்படி ஏராளமான பணிகள் இருக்கின்றன. இதற்குப் பெயர்தான் பராமரிப்புப் பணி.

70,000 கிலோமீட்டர் சாலைகளைப் பராமரிப்பதற்காக அரசாங்கம் ரூ.800 கோடி ஒதுக்குகிறது. இதுதவிர நான் ஏற்கனவே சொன்னபடி, சாலைகளைத் தோண்டிய பின்னர் மீண்டும் சீரமைப்பதற்கான பணிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சில அரசுத் துறைகள் மூலமாகவும் பணம் செலுத்தப்படுகிறது.

சாலைப் பணிகளுக்கான நிதி யாருடைய கணக்கிற்குச் செல்கிறது?

இந்தச் சாலைச் சீரமைப்புப் பணிகளுக்காக தனியார் நிறுவனங்களும் அரசுத் துறைகளும் செலுத்துகிற பணம் அரசாங்கத்திற்கே நேரடியாக வராது. அது தலைமைப் பொறியாளருடைய கணக்கிற்குத்தான் செல்லும். தலைமைப் பொறியாளர் அனுமதி வழங்குவார். கண்காணிப்புப் பொறியாளர் அனுமதி வழங்குவார். அதற்கான மதிப்பீட்டை யார் தயாரிப்பார்கள்? உதவிக் கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் மதிப்பீடு தயாரிப்பார்கள். அதை யார் அனுமதிப்பார்கள்? கண்காணிப்புப் பொறியாளர் அனுமதிப்பார். டெண்டர் விடுவது யார்? கோட்டப் பொறியாளர்தான் டெண்டர் விடுவார். இது அரசாங்கத்திற்கு வராது. புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பணிகள் எல்லாமே தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகியோருடைய நிலையிலேயே நடைபெறுகின்றன.

இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ் விதிகள்

இந்தப் பணிகளுக்கெல்லாம் ஐஆர்சி என்று ஒன்று இருக்கிறது. இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ் என்று சொல்வார்கள். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட விதிகள். அந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

பேட்ச் ஒர்க் என்று சொல்கிறோமே, அந்தப் பணியின் ஆயுட்காலம் என்ன தெரியுமா? 6 மாதங்கள். ஒரு சாலையில் பேட்ச் ஒர்க் செய்தால் அது 6 மாதங்கள் வரை இருக்க வேண்டும். அந்த 6 மாதங்களுக்குள் சாலை மீண்டும் பழுதடைந்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்தான் மறுபடியும் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் டெண்டர்கள் விடப்படுகின்றன.

இன்னொன்று, தமிழ்நாட்டில் ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தின் மூலமாகத்தான் டெண்டர்கள் விடப்படுகின்றன. அதன் மூலமாகத்தான் ஒப்பந்தங்களை எடுக்க முடியும்.
டெண்டர் இல்லாமல் எந்தப் பணியையும் எடுக்க முடியாது. அந்த அடிப்படையில்தான் டெண்டர்கள் விடப்பட்டு, அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நான் ஏற்கனவே சொன்னபடி பேட்ச் ஒர்க்கைப் பொறுத்தவரை அதன் ஆயுட்காலம் 6 மாதங்கள் என்பது ஐஆர்சி வழிகாட்டு நெறிமுறைகளில் இருக்கிறது. 6 மாதங்களுக்கு மேலும் அந்தச் சாலை நன்றாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் மழை பெய்கிறது, கனரக லாரிகள் செல்கின்றன என்றால் சாலை சேதமடையவும் வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் 6 மாதங்களுக்குள் சாலை பழுதடைந்தால், அந்த ஒப்பந்ததாரர்தான் மீண்டும் பணியைச் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் இதுவரைக்கும் பணிகள் நடைபெற்றிருக்கின்றன.

அமைச்சரின் பொறுப்பு என்ன?

என்னைப் பொறுத்தவரை பேட்ச் ஒர்க் பணிகள் அனைத்தும் தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகியோருடைய நிலையிலேயே நடைபெறுகின்றன. அவை அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்புக்கு வருவதில்லை.

ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, சாலையில் போகும்போது பள்ளம் இருப்பதைப் பார்க்கிறோம். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கூப்பிட்டு, ஏன்யா இங்கே பள்ளம் இருக்கிறது, சாலையை ஒழுங்காகப் போடுங்கள் என்று சொல்ல முடியும். அந்த அளவில்தான் நம்முடைய பொறுப்பு இருக்கிறது.

இப்போது அமைச்சராக வந்திருக்கிறவர் என்ன செய்வார்? பேட்ச் ஒர்க் நடைபெறுகிற ஒவ்வோர் இடத்திற்கும் சென்று குடையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாரா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
என்ன விதி இருக்கிறதோ, அந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஓர் அமைச்சர் பணியாற்ற முடியும். அவராக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, நாளைக்கு வேறு எந்த அமைச்சர் வந்தாலும் சரி, விதிகளுக்கு உட்பட்டுத்தான் எதையும் செய்ய முடியும். விதிகளுக்கு மாறாக எதையும் செய்ய முடியாது.

ரீல்ஸ் போடுவதற்காகக் குற்றச்சாட்டு

எனவே இது ரீல்ஸ் போடுவதற்காகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு. நேற்று பேசிவிட்டார் அல்லவா? இன்னும் 2 நாட்களுக்கு அதைப் பற்றி ரீல்ஸ் போட்டுக்கொண்டிருப்பார்கள். அதற்காகத்தான் இப்போது இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கிறார்.

நாங்கள் இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புக் காவல்துறையிடம் ஒப்படைக்கப் போகிறோம் என்று சொல்கிறார். நான் ஏற்கனவே 2 வழக்குகளை நடத்தியிருக்கிறேன். நீங்கள் அதையும் ஒப்படைத்துவிட்டுப் போங்கள். அதனால் என்ன? யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று.

21-ஆம் நூற்றாண்டின் உத்தமர் காந்தி

எனக்குத் தெரிந்து எங்கள் மாவட்டத்திற்கு இதற்கு முன்பு பொறுப்பு அமைச்சர்களாக இருந்தவர்களாக இருந்தாலும் சரி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்களாக இருந்தவர்களாக இருந்தாலும் சரி, காந்தியாரைப் போல யாரையும் நான் பார்த்ததே கிடையாது.

காந்தியாரை நான் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போது எங்கள் மாவட்டத்திற்கு 21-ஆம் நூற்றாண்டின் உத்தமர் காந்தி ஒருவர் (ஆதவ் அர்ஜூனா) வந்திருக்கிறார். பொறுப்பு அமைச்சராக ஓர் உத்தமர் காந்தி வந்திருக்கிறார். அவரைப் போல ஒருவர் வந்திருக்கிறார். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியவில்லை.

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள்

கேள்வி: கடந்த ஆண்டு தீபத் திருவிழாவின்போது துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர் ஆகியோர் பலகட்டக் கூட்டங்களை நடத்தினார்கள். அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி, தீபத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். ஆனால் இப்போது ஒரே ஒரு முறை, ஒரே ஒரு நாள் மட்டும் பொறுப்பு அமைச்சர் வந்து கூட்டம் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார். தீபத் திருவிழா நாளைக்குத் தொடங்க இருக்கிறது.

பதில்: ஏற்கனவே இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு இந்த மண்ணின் பெருமை தெரியும். அந்தத் திருக்கோயிலின் பெருமை தெரியும். ஆன்மீக மக்களுடைய வேண்டுதல்கள் தெரியும். மக்களுடைய கோரிக்கைகள் தெரியும். அவற்றைப் பற்றிய புரிதல் இருந்த காரணத்தினால் அவ்வப்போது கூட்டங்களை நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியருடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார்கள்.

ஏன், பத்திரிகையாளர்களான உங்களுடைய கருத்துகளைக்கூடக் கேட்டார்கள். எப்படித் திருவிழாவைச் சிறப்பாக நடத்தலாம் என்று ஆலோசித்துத்தான் ஏற்பாடுகளைச் செய்தார்கள். ஆனால் இப்போது வருகிற அமைச்சர் ரீல்ஸுக்காக வருகிறார்; அன்றைக்கு ஒரு நாள் வந்து கூட்டம் நடத்துவார். அதைப் படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள். ரீல்ஸ் போட்டுக்கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

கேள்வி: தமிழகத்தில் அன்றாடம் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல ஆரணியிலும் தவெகவைச் சேர்ந்தவர் ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: சட்டம் ஒழுங்கு மிக மிக மிக மோசமாக இருக்கிறது. அன்றாடம் தொலைக்காட்சிகளில் நீங்களும் அதைக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அச்சுப் பத்திரிகைகளிலும் தினமும் செய்திகள் வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

எனக்குத் தெரிந்து என்னுடைய பொது வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கை. இந்த 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில், இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிற அளவுக்கு, சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிற அளவுக்கு, எனக்குத் தெரிந்து எந்தக் காலத்திலும் இருந்தது கிடையாது. இவ்வாறு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel