தமிழக முதல்வர் விஜய் நாளை நவம்பர் 16-ந் தேதி டெல்லி செல்ல இருப்பதாக நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று முதன்முதலாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து டெல்லியில் முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்திக்கிறார்; காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் என கூறப்படுகிறது.
மோடி பிலிப்பைன்ஸ் பயணம்
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதாக பிரதமர் அலுவலகம் ஏற்கெனவே நவம்பர் 12-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ”பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16 முதல் 17 வரை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது, 2026-ம் ஆண்டிற்கான ஆசியான் அமைப்பின் தலைமை நாடாகச் செயல்படும் பிலிப்பைன்ஸ் ஏற்பாடு செய்யும் 23-வது ஆசியான்-இந்திய உச்சிமாநாட்டிலும், 21-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டிலும் பிரதமர் பங்கேற்பார். இந்த உச்சிமாநாடுகள் 2026 நவம்பர் 17 அன்று நடைபெறவுள்ளன.
இந்திய-ஆசியான் உறவுகள், இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான நமது தொலைநோக்குப் பார்வையின் ஒரு மையத் தூணாகும். இந்தியாவும் ஆசியான் அமைப்பும் 2026-ம் ஆண்டை ஆசியான்-இந்திய கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாகக் கொண்டாடும் வேளையிலும், 2027-ம் ஆண்டில் இரு தரப்பு உறவுகளின் 35 ஆண்டுகளையும், விரிவான உத்திசார் கூட்டாண்மையின் ஐந்தாண்டுகளையும் நினைவுகூரும் வகையிலும் இந்தப் பயணம் அமைந்துள்ளது. ஆசியான்-இந்திய உச்சிமாநாடு, ‘ஆசியான்-இந்திய செயல் திட்டம் 2026–2030’ உள்ளிட்ட விரிவான உத்திசார் கூட்டாண்மையைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான பாதையையும் வகுக்கும். ஆசியான், இதில் பங்கேற்கும் இதர நாடுகளுடன் பிராந்திய, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் இந்த வெளிநாட்டு பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டெல்லி செல்லும் முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.
நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்திப்பாரா?
இதனால் பிரதமர் மோடிக்கு பதில் மத்திய நிதி அமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்திக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. முதல்வராகப் பதவியேற்ற பின்னர் கடந்த மே மாதம் டெல்லி சென்ற விஜய், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசியிருந்தார். அதேபோல தற்போதைய டெல்லி பயணத்திலும் நிர்மலா சீதாராமனை விஜய் சந்தித்து பிரதமர் மோடியிடம் தர வேண்டிய கோரிக்கை மனுக்களை கொடுக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அமித்ஷாவை சந்தித்து விளக்கம் தருவாரா?
அதே நேரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் விஜய் சந்திக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. முதல்வராக பதவியேற்ற பின்னர் கடந்த மே மாதம் டெல்லி சென்ற விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க முயற்சி மேற்கொண்டார்; ஆனால் அப்போது அமித்ஷா தரப்பில் விஜய்யை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அமித்ஷாவை சந்திக்காமலேயே விஜய் சென்னை திரும்பினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநாட்டின்போதுதான் அமித்ஷாவை விஜய் சந்தித்துப் பேச முடிந்தது.
தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து விஜய் அரசின் மீது திமுக, அதிமுக, பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்தச் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் விஜய்யும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கக் கூடும். ஆனால் அமித்ஷாவை விஜய் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவோ, சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழா
இன்னொரு பக்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் Belonging: A Journey of Love என்ற சுயசரிதை நூல் நவம்பர் 10-ந் தேதி விற்பனைக்கு வந்தது. இதன் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ராகுல் காந்தி தொலைபேசியில் பேசி விஜய்க்கு அழைப்பு விடுத்ததாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதனால் முதல்வர் விஜய் டெல்லி செல்வதே சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவுக்குதான் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.










