தவெக மாஜி நிர்வாகி நாகை ‘மெத்’ பூபாலன் வீட்டுக் குட்டையில் ‘மர்மம்’.. ‘தூர்வாரிய’ அதிகாரிகள்.. சென்னையில் சிக்கிய நைஜீரியருக்கு தொடர்பா?

By Mathi

|

Published on 15 Nov 2026, 9:25 AM

TVK Nagai Meth Boopalan DRI Raid

நாகப்பட்டினத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக முன்னாள் நிர்வாகி பூபாலனின் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் மீண்டும் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். குட்டையில் இருந்த தண்ணீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றி அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பிடாகை சிந்தாமணியைச் சேர்ந்த வழக்கறிஞரும் தவெக முன்னாள் நிர்வாகியுமான பூபாலன், கடந்த அக்டோபர் மாதம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பூபாலன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் குறித்து நமது மின்னம்பலம் அக்டோபர் 31-ந் தேதி ‘டிஜிட்டல் திண்ணை’யில் விரிவான புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டிருந்தோம். குஜராத்தில் நைஜீரியர் ஒருவர் 500 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு ஆர்டர் கொடுத்ததாகக் கிடைத்த தகவல், லட்சத்தீவு அருகே ஈரான் படகில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, அதன் தொடர்ச்சியாக நைஜீரியர்கள் மூலம் நாகை பூபாலன் குறித்த தகவல் கிடைத்தது என சர்வதேச நெட்வொர்க்கின் பின்னணியை அந்தச் செய்தியில் விளக்கியிருந்தோம்.

பூபாலன் வீட்டுக் குட்டையில் என்ன மர்மம்?

இந்த வழக்கில் பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நவம்பர் 14-ந் தேதி மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மீண்டும் நாகப்பட்டினத்துக்குச் சென்றனர்.

ADVERTISEMENT

திருச்சி DRI அதிகாரி மருதுராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் கீழப்பிடாகை சிந்தாமணி பகுதியில் உள்ள பூபாலனின் வீட்டின் பின்புறம் சோதனை நடத்தினர். அங்கு சதீஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் குட்டை ஒன்று உள்ளது. அந்தக் குட்டையில்தான் அதிகாரிகளின் கவனம் திரும்பியது. குட்டையில் இருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக 2 மோட்டார் பம்புசெட்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மூலம் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிகள், குட்டைக்குள் இறங்கி தீவிரமாகத் தேடினர்.

குட்டையில் வீசப்பட்ட செல்போன்?

பூபாலனை கைது செய்ய அதிகாரிகள் சென்றபோது, அவர் தனது செல்போனை வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் வீசியதாகக் கூறப்படுகிறது. விசாரணையின்போது இந்தத் தகவல் கிடைத்ததால்தான் அதிகாரிகள் மீண்டும் அங்கு சென்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த செல்போனில் அப்படி என்ன இருக்கிறது? அதை மீட்பதற்காக அதிகாரிகள் ஏன் இவ்வளவு முயற்சி மேற்கொள்கின்றனர்? போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டவர்கள், அவர்களுடன் நடந்த தகவல் பரிமாற்றங்கள், பணப் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய ஆதாரங்கள் அந்த செல்போனில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சென்னையில் சிக்கிய நைஜீரியர் யார்?

இதனிடையே சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் நைஜீரியாவைச் சேர்ந்த பிராமிஸ் சுக்வு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே நாகை பூபாலன் சிக்கியதன் பின்னணியில் நைஜீரியர்களின் தொடர்பு இருப்பதாக மின்னம்பலம் ‘டிஜிட்டல் திண்ணை’யில் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் கைதான பிராமிஸ் சுக்வுக்கும் பூபாலனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருவருக்கும் இடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றனவா? அல்லது சென்னை கைது நடவடிக்கை தனியான வழக்கா? என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel