முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன்

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 12:08 PM

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த அடிப்படையில் அமலாக்கத்துறையும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாகக் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவருக்கும் சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி விஜயபாஸ்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வரும் புதன்கிழமை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel