ஈழத் தமிழர் அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம் காலமானார்.. வன்னி அரசு, வேல்முருகன் இரங்கல்!

By Mathi

|

Published on 15 Nov 2026, 10:47 AM

Sivajilingam-Velmurugan-Vanni Arasu

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த மூத்த தமிழ்த் தேசிய அரசியல் தலைவரும், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் (வயது 69) உடல்நலக் குறைவால் காலமானார்.

மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் என்ற முழுப் பெயரைக் கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினரான சிவாஜிலிங்கம், இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர்.

ADVERTISEMENT

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ (TELO) அமைப்பில் இணைந்து செயல்பட்டார். பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

2001 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்று உறுப்பினராகப் பணியாற்றினார்.

ADVERTISEMENT

பின்னர் டெலோ அமைப்பிலிருந்து விலகிய சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

2009-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் சிவாஜிலிங்கம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னின்று நடத்தி வந்தார்.

ADVERTISEMENT

இலங்கை ராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழ்நாட்டுக்கும் பலமுறை வருகை தந்த சிவாஜிலிங்கம், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாகத் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து விவாதித்தார்.

சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 10-ந் தேதி வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். மேலும், டிசம்பர் 18-ந் தேதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்திற்கு சம்மன் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவாஜிலிங்கத்திற்கு சம்மன் வழங்கப்பட்ட சம்பவம் தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 11-ந் தேதி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நவம்பர் 3-ந் தேதி பருத்தித்துறை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (நவம்பர் 14) இரவு 11.50 மணியளவில் தனது 69 வயதில் காலமானார்.

தமிழக அமைச்சர் வன்னி அரசு இரங்கல்

சிவாஜிலிங்கம் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரும் தமிழக சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சர் வன்னி அரசு வெளியிட்ட அறிக்கை: உடல்நலமின்றி கடந்த சில வாரங்களாக வடமராட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் சிவாஜிலிங்கம் இறந்தார் என்னும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது.

‘டெலோ’அமைப்பில் இணைந்து தனித்து தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்தி களமாடினார். பின்னர் விடுதலைப்புலிகளின் ஒற்றை தலைமையை ஏற்று அரசியல் ரீதியாக செயல்பட்டு வந்தார். மேதகு பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நாடாளுமன்றத்தில் புலிகளின் பிரதிநிதிகளின் ஒருவராக செயல்பட்டார். தமிழ்நாட்டு வந்து தமிழீழ அரசியலின் பரப்புரையிலும் ஆதரவு நிலைப்பாட்டிலும் சமரசமின்றி செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தாலும் விசிக தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனை சந்தித்து தமிழீழ விடுதலை குறித்தும் அதன் தீவிரம் குறித்தும் பேசுவார்; விவாதிப்பார்.

விடுதலைச் சிறுத்தைகளை- எழுச்சித் தமிழரை நேசிக்கும் விடுதலைப்புலியாக பயணப்பட்டு வந்த அண்ணன் சிவாஜிலிங்கம் மரணித்தார் என்னும் செய்தி தமிழீழ விடுதலைக்களத்துக்கு மட்டுமல்ல; விடுதலைச்சிறுத்தைகளுக்கும் ஏற்பட்ட இழப்பாகவே பார்க்கிறோம்.

ஒரு முறை அண்ணன் சிவாஜிலிங்கத்தோடு வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்தேன். இடையில் பளை என்னும் இடத்திற்கு வந்த போது, அண்ணன் சிவாஜிலிங்கம், “டெலோவிலிருந்த போது இந்த இடத்தில் தான் ஒரு ஆயுதக்குழுவால் நான் சுட்டு வீழ்த்தப்பட்டேன். பின்னர் நான் மரணித்ததாக சொல்லி அப்படியே போட்டு விட்டுச்சென்றனர். எங்கள் அமைப்பினர் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று என்னை காப்பாற்றினர்” என உடல் முழுக்க குண்டடிப்பட்ட வடுக்களை காண்பித்தார்.

பின்னர் விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டு களமாடிய பிறகு சிங்கள ஆயுதக்கும்பலின் அச்சுறுத்தல் குறித்தும் உரையாடினார். இப்போது உரையாடுவதற்கு இல்லாமல் போய்விட்டார். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழீழ விடுதலைக்கருத்தியலை பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டார். விடுதலைச் சிறுத்தைகளை
திருமாவளவனை நேசித்த வல்வெட்டித்துறை அண்ணனை இழந்து துயருருகிறோம். அண்ணன் பிரபாகரன் இன்றிருந்திருந்தால் தமிழீழ விடுதலைக்காக களமாடிய அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ‘மாமனிதர்’ விருதே வழங்கி பெருமைப்படுத்தியிருப்பார். அப்படிப்பட்ட மாமனிதருக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் செம்மார் ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் இரங்கல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட இரங்கல்: ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த மூத்த தமிழ்த் தேசிய அரசியல் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது.

தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் விடுதலை, தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்காகத் தனது அரசியல் பயணத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், வடமாகாண சபை உறுப்பினராகவும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகவும் பொதுவாழ்வில் பணியாற்றிய அவரது பங்களிப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் நினைவுகூரத்தக்கது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அவர் முன்னெடுத்த குரலும், போராட்டங்களும் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஈழத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel