அதே நவம்பர்.. அதே நாரிமன் ஹவுஸ்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல்?

By Mathi

|

Published on 15 Nov 2026, 1:45 PM

Mumbai-Terror 26_11

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நாரிமன் ஹவுஸ் கட்டிடத்தை உளவு பார்த்ததாக 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை தாக்குதலின் 18-ஆம் ஆண்டு நினைவு தினம் நெருங்கும் நிலையில், இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்தனர். தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். 3 நாட்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள நாரிமன் ஹவுஸ், சாபாத் ஹவுஸ் (Chabad House) என்றும் அழைக்கப்படுகிறது. யூதர்களின் மத மையமான இந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.

இந்தத் தாக்குதலில் யூத மதகுரு கேப்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க், அவரது மனைவி ரிவ்கா உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களது 2 வயது மகன் மோஷே, இந்தியப் பெண் சாண்ட்ரா சாமுவேல்ஸ் உதவியால் உயிர் தப்பினார்.

ADVERTISEMENT

மீண்டும் நாரிமன் ஹவுஸ்-க்கு குறி?

இந்தத் தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், நாரிமன் ஹவுஸ் தொடர்பாக மீண்டும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நவி மும்பையின் ஐரோலி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் யஷ் சிங் (Yash Singh), வெளிநாட்டில் உள்ள சிலரின் உத்தரவின்பேரில் நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். நாரிமன் ஹவுஸ், யூதர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வெளிநாட்டினர் வந்து செல்லும் இடங்கள் ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்ததுடன், அங்கு வந்து செல்லும் வாகனங்கள் பற்றிய விவரங்களையும் அவர் சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தத் தகவல்களை டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டில் உள்ள சிலருக்கு அனுப்பி, அதற்காகப் பணம் பெற்றதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

யஷ் சிங்கிற்கு வெளிநாட்டிலிருந்து உத்தரவிட்டவர்கள் யார்? நாரிமன் ஹவுஸ் பற்றிய தகவல்களை எதற்காகச் சேகரித்தார்? மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel