சர்வதேச ”எம்மி” விருது வழங்கும் விஜய் சேதுபதி.. நியூயார்க்கில் காத்திருக்கும் கவுரவம்!

By Mathi

|

Published on 15 Nov 2026, 12:47 PM

EMMY AWARDS-VIjay Sethupathi

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நவம்பர் 23-ந் தேதி நடைபெற உள்ள 54-வது சர்வதேச எம்மி விருது விழாவில் நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்குபவராகப் பங்கேற்க இருக்கிறார்.

உலக அளவில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையத் தொடர்கள், ஆவணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் சர்வதேச எம்மி விருதுகள் (International Emmy Awards) வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் ஓடிடி படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி (International Academy of Television Arts & Sciences) இந்த விருது விழாவை நடத்துகிறது.

ADVERTISEMENT

இந்த ஆண்டுக்கான 54-வது சர்வதேச எம்மி விருது விழா நவம்பர் 23-ந் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ADVERTISEMENT

விருது வழங்கும் விஜய் சேதுபதி

இந்த விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகளை வழங்கும் பிரபலங்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்தியர் விஜய் சேதுபதி என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் அவருக்கு முன்பே இந்திய நடிகைகள் இந்த விழாவில் விருதுகளை வழங்கியுள்ளனர்.

2009-ஆம் ஆண்டு நடிகை ஆஷ்கா கோரடியா (Aashka Goradia), 2010-ஆம் ஆண்டு நடிகை சிமோன் சிங் (Simone Singh), 2012-ஆம் ஆண்டு நடிகை பிரேர்ணா வான்வாரி (Prerna Wanvari) ஆகியோர் சர்வதேச எம்மி விருது விழாவில் விருதுகளை வழங்கியுள்ளனர்.

விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?

சர்வதேச எம்மி அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் கவிதா குப்தா (Kavita Gupta).

விஜய் சேதுபதி இந்த ஆண்டு விருது விழாவில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளில் கவிதா குப்தா முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்திய நகைச்சுவைக் கலைஞர் வீர் தாஸ் (Vir Das), சர்வதேச எம்மி விருது விழாவைத் தொகுத்து வழங்குவதற்கும் இவர் உதவியுள்ளார்.

இந்த ஆண்டு சர்வதேச எம்மி விருதுகளுக்கு இந்தியாவிலிருந்து 2 படைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான Real Kashmir Football Club என்ற இணையத் தொடர், சிறந்த நாடகத் தொடர் (Best Drama Series) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில் முகமது ஜீஷான் அயூப், மானவ் கவுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதேபோல நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான வீர் தாஸின் Vir Das: Fool Volume என்ற நகைச்சுவை நிகழ்ச்சி, சிறந்த நகைச்சுவைத் தொடர் (Best Comedy Series) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel