டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வந்தால் அறப்பணி என்னாகும்?

By Minnambalam Desk

|

Published on 15 Nov 2026, 9:30 PM

லாபத்தை விட சமூக நலனே முக்கியம் என்கிறார் நோயல் டாடா

டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, டாடா குழுமம் பல தலைமுறைகளாகப் பின்பற்றிவரும் மரபையே மாற்றிவிடக்கூடும் என்று டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா எச்சரித்துள்ளார். லாபத்தைவிட சமூக நலனுக்கும் அறப்பணிகளுக்கும் முன்னுரிமை தரும் இப்போதைய நடைமுறை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என்பது அவரது கவலை.

ADVERTISEMENT

30,000 முதல் 40,000 பங்குதாரர்கள் வந்தால்?

நவம்பர் 14 அன்று நடந்த HT Leadership Summit 2026 நிகழ்ச்சியில் பேசிய நோயல் டாடா, டாடா சன்ஸ் பொதுச் சந்தையில் பட்டியலிடப்பட்டால் 30,000 முதல் 40,000 பங்குதாரர்கள் உருவாகலாம் என்றார்.

அப்படி ஆனால், சமூக நலனை விட லாபத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அழுத்தம் நிறுவனத்துக்கு வரலாம் என்றும், அது குழுமத்தின் அடிப்படைச் செயல்பாட்டுக் கொள்கையையே மாற்றிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

யார் யாருக்கு எவ்வளவு பங்கு?

டாடா சன்ஸில் டாடா டிரஸ்ட்ஸ் வைத்திருக்கும் பங்கு: சுமார் 66 சதவீதம்.

ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம்: 18.37 சதவீதத்தோடு இரண்டாவது பெரிய பங்குதாரர்.

ADVERTISEMENT

நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்பது ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் நிலைப்பாடு. டாடா டிரஸ்ட்ஸ் அதை எதிர்த்து வருகிறது.

ரிசர்வ் வங்கி முடிவால் சூடுபிடித்த விவகாரம்

இந்த விவகாரம் தீவிரமானதற்கு ரிசர்வ் வங்கியின் ஒரு முடிவும் முக்கியக் காரணம். 2026 செப்டம்பரில், ‘கோர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி’ என்ற பதிவை ரத்து செய்யக் கோரி டாடா சன்ஸ் கொடுத்த விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. அதையடுத்து, பட்டியலிடலுக்கான நடவடிக்கைகளை எடுக்க நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்தது.

டாடா குழுமத்துக்குள்ளேயே மாறுபட்ட குரல்கள்

நோயல் டாடா எதிர்க்கும் நிலையில், டாடா டிரஸ்ட்ஸ் துணைத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட சிலர் பட்டியலிடலை ஆதரிக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை, நிர்வாகக் கட்டுப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவை இதனால் கூடும் என்பது அவர்கள் வாதம். அறக்கட்டளைகளின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டே பங்குச்சந்தையிலும் செயல்பட முடியும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

செமிகண்டக்டர், EV பேட்டரி பற்றி

டாடா குழுமத்தின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசியபோது, செமிகண்டக்டர் உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு போன்ற துறைகளில் குழுமம் கவனம் செலுத்துவதாக நோயல் தெரிவித்தார். இந்தத் திசை சரிதான் என்றாலும், செயல்படுத்துவதிலும் முதலீடுகளை ஒதுக்குவதிலும் கூடுதல் கட்டுப்பாடும் திட்டமிடலும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார.

லாபம் சம்பாதிப்பதோடு, அதில் ஒரு பகுதியை மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பேரிடர் நிவாரணம் போன்ற சமூக நலப் பணிகளுக்குப் பயன்படுத்தும் அடையாளம் தொடர வேண்டும் என்பதுதான் நோயல் டாடாவின் முக்கியக் கருத்து.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel