சப்பாத்தி, பூரி, பட்டூரா என்று எதோடு சாப்பிட்டாலும் சன்னா மசாலாவுக்குத் தனி ரசிகர்கள் உண்டு. ஹோட்டலில் கிடைக்கும் அடர்த்தியான கிரேவி, மசாலா மணம், மென்மையான கொண்டைக்கடலை எல்லாம் வீட்டில் செய்யும்போது வருவதில்லை என்று பலருக்கும் குறை. சில சின்ன நுணுக்கங்களைப் பின்பற்றினால் அதே சுவையை வீட்டிலும் கொண்டுவரலாம்.
என்னென்ன வேண்டும்?
வெள்ளைக் கொண்டைக்கடலை – 1 கப்
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்,
சன்னா மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய், உப்பு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் கொண்டைக்கடலையை 8 முதல் 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். பிறகு குக்கரில் கொஞ்சம் உப்புச் சேர்த்து 6 முதல் 8 விசில் வரும் வரை வேகவிடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகமும் வெங்காயமும் போட்டுப் பொன்னிறமாக வதக்குங்கள். அடுத்து இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் போன்ற மசாலாக்களைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
தேவையான தண்ணீர் ஊற்றி, சுமார் 10 நிமிடம் கொதிக்கவிட்டு, வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேருங்கள். கடைசியில் கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கினால் சன்னா மசாலா ரெடி.
ஹோட்டல் சுவைக்கான 4 ரகசியங்கள்
கடலையை நன்றாக ஊறவையுங்கள்: குறைந்தது 8 மணி நேரம் ஊறவைத்தால் கடலை மென்மையாக வேகும்.
மசாலாவை அவசரப்படாமல் வதக்குங்கள்: வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொறுமையாக வதக்கினால், பச்சை வாசனை போய் நல்ல மணம் வரும்.
கிரேவியைக் கெட்டியாக்கும் டிப்: வேகவைத்த கொண்டைக்கடலையில் கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் அரைத்து, கிரேவியில் சேர்த்துவிடுங்கள். தண்ணீராக இல்லாமல் அடர்த்தியான பதம் கிடைக்கும்.
கடைசியில் சேர்க்க வேண்டியவை: கரம் மசாலா, சன்னா மசாலாத் தூள், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றோடு, கொஞ்சம் கஸ்தூரி மேத்தியை நசுக்கிப் போட்டால் ஹோட்டல் மணம் வந்துவிடும்.
இன்னும் சுவை கூட்ட கடலை வேகவைத்த தண்ணீரை ஊற்றிவிடாமல் கிரேவியில் சேர்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் வெண்ணெய் சேர்த்தாலும் சுவை கூடும். சன்னா மசாலா தயாரானதும் உடனே பரிமாறாமல், சில நிமிடம் மூடி வைத்துவிட்டுப் பரிமாறினால் மசாலாவின் சுவை கடலைக்குள் இறங்கியிருக்கும்.
இனி சப்பாத்தியோ பூரியோ செய்யும்போது, சைட் டிஷுக்காக ஹோட்டலுக்கு ஓட வேண்டியதில்லை.










