- ஸ்ரீராம் திருவரங்கம்
இந்த தேசத்தின் பாரம்பரியமான சில காலக் கணிப்புகளின் படி இன்று தொடங்கி ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் நிகழ்ந்ததாகவும் – அது குறித்து சமஸ்கிருத மொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணமானது இந்திய மண்ணின் மிகப் பழைமையான இதிகாசமாகவும் அறியப்படுகிறது.
கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வாரால் தமிழிலும் எழுதப்பட்டு நாடெங்கும் அந்த இராம நாடகம் விரிந்து நிறைந்து விட்டது.

அந்த இதிகாசத்தை அடிப்படையாக வைத்து டெக்னாலஜியின் அசுரத்தனமான உதவியோடு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் இராமாயணம் PART 1 எனச் சொல்லப்படுகிறது.
சரி, அந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது?
முதல் முக்கால் மணி நேரம் விறுவிறுப்பான அட்டகாசமான திரைக்கதை!
அங்குலம் அங்குலமாகச் செதுக்கப்பட்ட அற்புதமான திரை வடிவம்!
திரையெங்கும் விபூதி தாங்கிய அட்டகாசம்!
இராவணனாக, உயர்ந்து, உருவேற்றி, அட்டகாசம் செய்கிறார் நடிகர் YASH!
இந்தியத் திரையுலகம் இதுகாறும் காணாதபடிக்கு அற்புதமான VFX நுணுக்கங்களோடு ஆச்சரியப்பட வைக்கிறது ஜடாயு கதாபாத்திரம்.
இதிகாசக் கதை திரித்துச் சொல்லப்பட்டு இருந்தபோதிலும் – வித்யுச்வா மற்றும் சூர்ப்பணகா கதாபாத்திரங்களைத் தாங்கிய நடிகர்கள் மனம் கவர்கிறார்கள்!
அவ்வளவுதான்! அவ்வளவேதான்!
பாப்கார்ன் பொட்டலங்கள் வேக வேகமாகக் காலியாகிப் போக, அரங்கமெங்கிலும் ‘சள சள’வெனப் பேச்சுக்குரல்கள் கேட்டபடியே இருக்க, இரண்டாயிரம் கோடியை விழுங்கியபடி காட்சிகள் அனைத்தும் கேட்பாரற்று கடந்து கொண்டேயிருக்கின்றன.
காரணம் என்ன?
எந்தவிதமான உணர்வெழுச்சியும் அளிக்காமல் மிக மிகச் சுமாராக அமைந்து போன ராமர் மற்றும் சீதை கதாபாத்திரங்களின் அறிமுகக் காட்சிகள்!
எந்த நேரமும் உச்சிச் சூரியனை உற்றுப் பார்த்துத் திரும்பியதைப் போன்றதான வதங்கிய முகத்தோடும், சற்றே கூன் விழுந்த மேலுடலோடுமாக ராமராகத் தோன்றும் ரன்பீர் கபூர் ஆயாசம் தருகிறார்! அவர் நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால், நாம் எதிர்பார்ப்பது யுக புருஷரான ராமரை அல்லவா?
“மதனுக்கும் எழுத ஒண்ணா சீதை” என்ற கம்பரை மறுதலித்தபடி – வடதேசத்து பேரழகியாகக் கொள்ளப்பட்ட கதாநாயகியாம் சீதைக்கு – கொஞ்சமும் ஒட்டாமல் ‘விஸுக்’ கென்று முழித்துக் காட்டி கவர முயல்கிறது மலர் டீச்சரின் ஊட்டிமலை முகம்! அவர் அழகிதான். நல்ல நடிகைதான். ஆனால், நாம் எதிர்பார்ப்பது தெய்வாம்சம் பொருந்திய சீதையை அல்லவா?
புதுமை என்ற பெயரிலோ என்னமோ அசால்ட்டாக மேக்கப் போடப்பட்டு, கண்ணில் மை கூட பூசாமல், முகத்தில் ஜொலிப்பின்றி வறண்டிருக்கும் அவர்களது பொலிவற்ற கண்களும் முகங்களும் இதிகாசத் தன்மையை இழந்திருந்தன.
ராமர் எனும் யுகப்புருஷனையும் சீதை எனும் பேரழகுப் பெட்டகத்தையும் தங்களது உள்ளத்தில் வைத்து ஆராதித்துப் பூஜித்துத் தொழும் வைணவப் பெருமக்களுக்கு அந்த வெளிறிய கோலம் மிகப் பெரிய ஏமாற்றத்தை நிச்சயம் கொடுத்துவிட்டிருக்கும்.
புராணப்படி ராமர் விஷ்ணுவின் அவதாரமாகவும் – லக்ஷ்மணர் ஆதிசேஷனின் அவதாரமாகவும் அறியப்படுகிறார்கள். மேலும், ராமரைத் தாயாகவும், தகப்பனாகவும், குருவாகவும், தெய்வமாகவும் தொழுது நின்றவர் லக்ஷ்மணர் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
ஆனால், இந்தத் திரைப்படத்தில் லக்ஷ்மணர் ராமரிடம் மிகக் கேஷுவலான உடல் மொழியோடு பேசிக் கடந்து போகும் விதம் திடுக்கென்று இருந்தது.

இராமர் அறிமுகம் – சீதை அறிமுகம் – மந்தரை கைகேயியோடு பேசுமிடம் – சீதா கல்யாணம் – அயோத்தி வருகை உள்ளிட்ட உணர்வெழுச்சி உண்டாக்க வேண்டிய பற்பல தருணங்களில் ஏ.ஆர். ரஹ்மான் ஆழ்ந்து உறங்கிவிட்டார் போலும். கொஞ்சமும் சுரத்தே இல்லை. அவர் சொன்னதுபோல ஐஸ்க்ரீம் விற்றிருந்தாலும் கூட அழகாக இருந்திருக்குமோ என்னமோ!?
திரையில் தோன்றும் ஒரு காட்சிக்கு உயிரூட்டுவதில் EFFECTS களின் பங்கு மிக மிக முக்கியமானது. நடக்கும் காலடி ஓசைகள், பொருட்களின் நகர்வுகள் போன்ற சிறுசிறு அசைவுகளுக்கும் கூட EFFECTS சேர்க்கப்பட்டாக வேண்டும். அப்போதுதான் அது காட்சியின் ஆழத்தைக் கடத்தும். இது பால பாடம்.
ஆனால், ராமரும் லக்ஷ்மணரும் கைகேயியிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சி உட்படப் பல இடங்களில் EFFECTS சேர்க்கப்படாமல் மொன்னையாகக் கடக்கிறது. சொல்லப்பட்ட 2000 கோடி பட்ஜெட் EFFECTS சேர்க்கப் போதாமல் போய்விட்டதோ என்னவோ!?
தனது வம்சம் அழிக்கப்பட்டதைக் குறித்து ராவணனிடம் தெறிக்கும் கோபமும் ஆவேசமும் அதை அவனிடம் உண்டாக்கிய அவனது தாயாகத் தோன்றும் நடிகை சோபனாவின் முகத்தில் கொஞ்சம்கூடக் காணக் கிடைக்கவில்லை. பரதநாட்டிய நடன மங்கைக்கே உரிய நளினமான அழகு முகத்தைக் காட்டுவதில் மட்டுமே அவர் குறியாக இருந்தார். அதுவல்ல அந்தப் பாத்திரத்தின் கனம் !
யாரைச் சொல்லியும் குற்றமில்லை. தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட்டின் ஆழத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு CAPTAIN OF THE SHIP எனச் சொல்லப்படும் இயக்குநருக்கானது அல்லவா? அதை அவர் ஈடேற்றாமல் விட்டது ஏன் ?
யார் அந்த இயக்குநர்?
மும்பை IIT-யில் படித்து, திரையுலகில் நுழைந்து, தங்கல் எனும் அமீர்கானின் படத்துக்கு முன்னும் பின்னுமாக மூன்று காமெடி படங்களை இயக்கிய நித்தீஷ் திவாரி – ரொமாண்டிக் காமெடி ட்ராமா ஒன்றை இயக்கியவரும் தயாரிப்பாளருமான அவரது மனைவி அஷ்வினியோடு இணைந்து தங்களது அனுபவங்கள் வழியே இந்தியத் திரையுலகின் வியாபார நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்தவராக மிளிர்கிறார்.
ஆனால், ஒரு புராண காவியத்தை இயக்கும் அளவுக்கு இலக்கியப் பயிற்சியோ அது குறித்த உணர்வு பூர்வமான சிந்தனையோ அவரிடம் இருந்ததாக கிஞ்சித்தும் தெரியவேயில்லை.
ராமாயணம் போன்ற உணர்வெழுச்சி மிகுந்த புராணத்தை இயக்க டெக்னிக்கல் அறிவு மட்டும் போதாதல்லவா?
இரண்டு அரக்கர்கள் துரத்த, அந்தக் கானக வெளியில் ராமரும், சீதையும், லக்ஷ்மணரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள். முடிவில் ஒற்றை அம்பில் ராமர் அந்த அசுரர்களைச் சாய்க்கிறார். அந்த அம்பை அவர் எடுத்த எடுப்பிலேயே எய்திருக்கலாமே? விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவதார புருஷர்களை அப்படியா ஓடவிடுவது? அந்தக் காட்சியில் விறுவிறுப்பை ஏற்படுத்த வேறு வழிகளா இல்லை?
ஜடாயு ராவணனோடு மோதும் சண்டைக் காட்சிகள் VFX உதவியோடு அருமையாகத்தான் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அதன் பின்?

இறக்கை அறுந்து பெருமூச்சு விட்டபடி வீழ்ந்து கிடந்த ஜடாயுவை இராமர் வந்து காணும் அந்தக் காட்சியை நெக்குருக இப்படியாக வர்ணிக்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்!
துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர்த் தந்தை
வள்ளியோன் திருமேனியில், தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான்!
“தன் தந்தை தசரதனுக்கு இணையானவரும், சீதையை மீட்க தன் உயிரையே பணயம் வைத்தவருமான புள்ளினத்தரசர் ஜடாயுவின் மீது – வெள்ளி மலை ஒன்றின் மேல் கரியமலை ஒன்று வந்து விழுந்தது போல ராமன் வீழ்ந்து கதறி அழுதான்…” என்கிறார்.
ஆனால், திரைப்படத்தில் ரன்பீர் கபூர் சுரத்தே இல்லாமல் பரிதாபமாக நிற்கிறார். அல்லது நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்.
VFX என்பது பார்வையாளரை வியக்க வைக்கலாம். ஆனால், நடிப்புதான் பார்வையாளரை உருக வைக்கும். இலக்கியத்தரமான திரைமொழியெனில் அது பார்வையாளரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாக வேண்டும்.
ஆனால், இந்த இயக்குனருக்கு புராணத்தின் மீதோ அது சார்ந்த உணர்வின் மீதோ எந்தவிதமான ஊக்கமும் வேட்கையும் பயிற்சியும் இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ராமானந்த் சாகர் என்னும் மேதை தூர்தர்ஷன் என்னும் ஆரம்பகாலச் சின்னத்திரையின் வழியே நமக்குள் ஆழமாகப் பதிய வைத்த அந்த இராமாயண எழுச்சியை இந்த நவீன இராமாயணப் படத்தின் இயக்குநர் நித்தீஷ் திவாரி எட்டிப் பிடிக்கக் கூட முயலவில்லை!
சுருங்கச் சொல்வதென்றால், நித்தீஷ் திவாரியின் இந்தப் படைப்பில் எங்குமே ஈரமில்லை. இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சாரமில்லை. பெரும்பாலான கேரக்டர்கள் மனதில் நிற்கவில்லை. விஞ்சி வீங்கித் தெரிவது வியாபாரம் மட்டுமே!
வியாபாரம் செய்வது தவறில்லை. அது தனித்திறமை. அதை மெச்சத்தான் வேண்டும். ஆனால், ராமாயணம் போன்ற உன்னதங்களைக் கூட வியாபாரப் பொருளாக்கிக் கெடுப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் நமது ஆதங்கமாகிறது.

டாக்டர் ராஹி மாசூம் ரசா
கவனியுங்கள்!
1988 ல் தூர்தர்ஷனில் தொடராக வெளியாகிப் புகழ்கொண்ட “மகாபாரதம்” தொடருக்கு வசனம் எழுதியவர் ஒரு இஸ்லாமியர். புகழுடைய உருதுக்கவியும் எழுத்தாளருமான அவரது பெயர் டாக்டர் ராஹி மாசூம் ரசா (DR. RAHI MASOOM RAZA).
அவரது எழுத்தில் பக்தி இருந்தது. பரவசம் இருந்தது. கோபம் இருந்தது. கருணை இருந்தது. அன்பு இருந்தது. ஆவேசம் இருந்தது. நீதி இருந்தது. நிறைவு இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தேசத்தின் சாரம் இருந்தது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டு அருகிலிருக்கும் கிராமங்களுக்கு இறங்கி ஓடோடிச் சென்று கும்பலாக நின்று சூடம் ஏற்றி சிலிர்த்தனர் மக்கள்.
புனிதமான மகாபாரதக் காவியத்துக்கு ஓர் இஸ்லாமியர் வசனம் எழுதுவதா? என அன்று சிலர் விமர்சித்தபோது…
“ஸுனோ பாயீ, மெய்ன் கங்கா கா பேட்டா ஹூன்! முஜ்சே பெஹ்தர், மகாபாரத் கோன் லிக் சக்தா ஹை?” என உதடுகள் துடிக்கக் கேட்டார் ஈடு இணையற்ற எழுத்தாளரான டாக்டர் ராஹி மாசூம் ரசா!
“கேள் சகோதரா, நான் கங்கையின் மைந்தன். என்னை விடச் சிறப்பாக மகாபாரதத்தை யார் இங்கே எழுதிவிட முடியும்?”
அடக்கடவுளே! அந்த உயர்ந்த படைப்பாளனிடம் ஓங்கி நின்ற உணர்வும் வேட்கையும் இன்றைய நவீனமான நாலாயிரம் கோடிக்குள் சிக்கி நாய்படாத பாடு பட்டுவிட்டதே!
இந்த இந்த பிராண்டுக்கு இத்தனை கோடி வியாபாரம். மொத்த பிராண்டையும் ஒன்று கூட்டி உழப்பினால் இவ்வளவு கோடி அள்ளலாம் எனத் திட்டமிட்டு ராமாயணத்தையும் வணிகப் பொருளாக்கி விற்றுக் கொண்டாடுபவர்களை என்னதான் சொல்வது!?
ஓ… ராமா, கோசலை மைந்தா மீண்டும் நீ இறங்கி வா!
இவர்களிடமிருந்து எப்படியாவது திரைமகளைக் காப்பாற்று!










