முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.43,000 கோடி முதலீட்டில் மிகப்பெரிய நிலக்கரி எரிவாயு உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வந்தால், மாநிலத்தில் சுமார் 40,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த இடத்தில், என்ன தொழில்நுட்பம்?
ஏலூரு மாவட்டத்தில் உள்ள சிந்தல்புடி செக்டர் A1, ரெச்சர்லா நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளை மையமாக வைத்து இந்தத் திட்டம் உருவாகிறது. நிலக்கரியைப் பழைய முறையில் வெட்டி எடுக்காமல், பூமிக்கு அடியிலேயே எரிவாயுவாக மாற்றும் Underground Coal Gasification தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள்.
இதற்காக ஆந்திரப் பிரதேசப் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தோடு (APEDB) ரிலையன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இரண்டு கட்டங்களில் முதலீடு
முதல் கட்டம்: ரூ.3,000 கோடி. நிலக்கரி இருப்பு ஆய்வு, புவியியல் மதிப்பீடு, நில அதிர்வுத் தரவுகள் சேகரிப்பு, சோதனை உற்பத்தி.
இரண்டாம் கட்டம்: சுமார் ரூ.40,000 கோடி. முதல் கட்ட ஆய்வு வெற்றியடைந்து, அரசு அனுமதிகள் கிடைத்த பிறகே தொடங்கும்.
அடுத்த 30 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் மொத்த முதலீட்டு வாய்ப்பு ரூ.2.7 லட்சம் கோடி வரை கூடலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு எவ்வளவு?
நேரடியாக 5,000 பேருக்கும், மறைமுகமாக 35,000 பேருக்கும் வேலை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. நிலம், தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற உதவும் ஒருங்கிணைப்புப் பணிகளை APEDB பார்த்துக்கொள்ளும்.
ஆந்திராவை நோக்கிப் படையெடுக்கும் முதலீடுகள்
ஏற்கெனவே கூகுள் நிறுவனம் ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் செலவில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸும் அதன் கூட்டணி நிறுவனங்களும் தரவு மையத் துறையில் 11 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்துள்ளன. கியா நிறுவனமும் புதிய ஆலைக்காக 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் நடைமுறைக்கு வந்தால், ஆந்திரப் பிரதேசம் நாட்டின் முக்கியத் தொழில் முதலீட்டு மையங்களில் ஒன்றாக வளரும் வாய்ப்பு உண்டு.










