கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பெரியார் அறிவுலகத்தில் உள்ள அனைத்து புத்தக அலமாரிகளிலும் காஞ்சி சங்கராச்சாரியார் மகா பெரியவா தொடர்பான நூல்களை வைத்தால்தான் ‘பாவங்கள் போகும்’ என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பி. சுவாமிநாதன் எழுதிய ‘மகா பெரியவா’ நூல்கள் வெளியீட்டு விழாவில் கடந்த நவம்பர் 13-ந் தேதி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசியதாவது: இந்தப் புத்தகத்தை தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டிருக்கிறது. அகல்விளக்கு பதிப்பகம் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை எழுதியவர் பி.சுவாமிநாதன். திரிஷா விஜய் போன்ற பெயரில் வேறு யாரோ எழுதிய புத்தகம் மாதிரி கிடையாது. AI மூலம் உருவாக்கப்பட்ட புத்தகமும் கிடையாது. அனுபவத்தை உள்வாங்கி எழுதப்பட்ட புத்தகம் இது.
ஏனென்றால், கடந்த 2 நாட்களாக நான் அடைந்த மனவேதனையை வெளியில் சொல்ல முடியாது. நேற்று, அதற்கு முன்தினம் என 2 நாட்களுமே அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன்.
2024-ஆம் ஆண்டிலேயே வழங்கிய தீர்ப்பு
2024-ஆம் ஆண்டில் நீதிபதி மகாதேவனுடன் அமர்வில் இருந்தபோது ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தேன். நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் நிறைய முறைகேடுகள் நடைபெறுவதாக ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். 2019-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அந்த வழக்கு 2024-ஆம் ஆண்டில் என்னிடம் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் ஒரே ஓர் உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். ‘வீரம் விளைந்த வரலாறு’ என்ற புத்தகம் எல்லா நூலகங்களிலும் இருக்கும். அந்தப் புத்தகத்தை வாங்குவதற்காக ஏதோ 2 அல்லது 3 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பார்கள். ஆனால், அந்தப் புத்தகம் வேறு எதுவும் கிடையாது. கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவலின் அட்டையை மட்டும் மாற்றி வெளியிட்ட புத்தகம்.
இதுபோல நிறைய உதாரணங்களை அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தேன். இப்படிப்பட்ட பெரிய முறைகேடுகள் நடைபெறுகின்றன. இனிமேல் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறக்கூடாது என்பதற்காக, நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யும்போது என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று 2024-ஆம் ஆண்டிலேயே விரிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன்.
ஆனால், 2025-ஆம் ஆண்டிலும் இதுபோன்ற முறைகேடு நடந்திருக்கிறது என்றால் எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும் என்று பாருங்கள். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் அடுத்தடுத்து நான் பிறப்பித்த உத்தரவுகள். திங்கட்கிழமை மீண்டும் அந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வைத்திருக்கிறேன்.
அரசாணை போட்டால் பாவம் போய்விடுமா?
2024-ஆம் ஆண்டில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புத்தகக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த அரசாணை வெளியிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தார்கள். இனிமேல் வெளிப்படையான கொள்கை பின்பற்றப்படும் என்று கூறினார்கள்.
அப்போது என்னுடைய தீர்ப்பில் ஒரு கருத்தை எழுதியிருந்தேன். ”கங்கையில் குளித்தால் பாவங்கள் எல்லாம் போய்விடும்” என்று சொல்வார்கள். ஆனால், அரசாணை வெளியிட்டுவிட்டால் ”உங்களுடைய பாவங்கள் எல்லாம் போய்விடாது.. என்னென்ன தவறுகள் நடந்திருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும்.. தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்று பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன். ஆனால், அவை எதுவும் நடைபெறவில்லை.

பெரியார் அறிவுலகத்தில் மகா பெரியவா நூல்கள்
இப்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், பெரியார் அறிவுலகம் என்று சொல்கிறார்கள் இல்லையா? அங்குள்ள எல்லா புத்தக அலமாரிகளிலும் அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்தான் இருக்கு..
அந்தப் பாவங்கள் எல்லாம் கழிய வேண்டும் என்றால், சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா தொடர்பான நூல்கள் இருக்கின்றன இல்லையா? அத்தனை தொகுதிகளையும் பெரியார் அறிவுலகத்தில் உள்ள எல்லா புத்தக அலமாரிகளிலும் வைத்தால்தான் இந்தப் பாவங்கள் போகும் என்று நான் மனதார நம்புகிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு 2, 3 காரணங்கள் இருக்கின்றன. மகா பெரியவா புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக வந்தேன். இன்று வேலை நாள். நான் பொதுவாக வேலை நாளில் விடுப்பு எடுக்க மாட்டேன். அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
முக்கியமான காரணம் என்னவென்றால், ஸ்ரீகாந்த் சாரும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். நான் அவருடைய ரசிகன். இன்னும் ஞாபகம் இருக்கிறது. 1983-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது சுமார் 11 மணி இருக்கும். அப்போதெல்லாம் குட்டி ரேடியோதான். கிரிக்கெட் வர்ணனையைக் கேட்டுக்கொண்டிருப்போம்.
ஸ்ரீகாந்த் எப்போதுமே அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கக்கூடியவர். உண்மையைச் சொல்லப்போனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு ஸ்ரீகாந்த் விளையாடி ஆட்டமிழந்துவிட்டார் என்றால், அதற்குப் பிறகு தொலைக்காட்சியைப் பார்க்க மாட்டோம். மூடிவிடுவோம்.
எப்போது ஸ்ரீகாந்த் சார் ஓய்வுபெற்றாரோ, அதற்குப் பிறகு கிரிக்கெட் பார்ப்பதையே நான் விட்டுவிட்டேன். அதுதான் உண்மை. இப்போது எந்த வீரருடைய பெயரும் எனக்குத் தெரியாது. இந்திய அணியின் கேப்டன் யார் என்று கேட்டால்கூட எனக்குத் தெரியாது. அந்த மாதிரி ஆகிவிட்டது. அதனால் ஸ்ரீகாந்த் சாருடன் இருப்பது எனக்கு ரொம்ப ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது.
திராவிட மாயை எழுதிய சுப்பண்ணா
ஆனால், கூடுதலாகக் கிடைத்த மகிழ்ச்சி என்னவென்றால், அந்தச் சுப்பண்ணா உட்கார்ந்திருக்கிறார் இல்லையா? அவரைப் பார்த்தது இன்னும் மனதுக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிகச் சிறந்த மனிதர். ‘திராவிட மாயை’ போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதற்காக மட்டுமல்ல. அவருடைய ஆன்மிக அனுபவங்கள் எல்லாம் இருக்கின்றன இல்லையா? அவை ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கும். அது எனக்குக் கிடைத்த கூடுதல் மகிழ்ச்சி. சுவாமிநாதன் சாரின் கருணையால் கிடைத்தது.
வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள்
அடுத்து முக்கியமாக என்ன சொல்ல நினைக்கிறேன் என்றால், சுவாமிநாதனின் புத்தகத்தைப் பற்றிய என்னுடைய பார்வை ஒன்றே ஒன்றுதான். வேதங்கள், உபநிஷதங்கள் எல்லாம் இருக்கின்றன. அவையெல்லாம் கொஞ்சம் உயர்ந்த தத்துவங்களைக் கொண்டவை. சற்று கருத்தியல் சார்ந்தவையாகவும் இருக்கும். எடுத்தவுடனே புரிந்துவிடாது.
அதனால்தான் புராணங்கள் எல்லாம் வந்தன என்று சொல்கிறோம். அப்படித்தான் நாம் புரிந்துகொள்கிறோம். அதே மாதிரி, மகா பெரியவாவைப் பற்றி எடுத்தவுடனே ‘தெய்வத்தின் குரல்’ படிப்பதற்குச் செல்வது இருக்கிறது இல்லையா?
மகா பெரியவாவைப் பற்றி சுவாமிநாதன் எழுதியுள்ள புத்தகங்களை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், வேதங்களையும் உபநிஷதங்களையும் எளிதாகப் புரிந்துகொள்வதற்காகப் புராணங்கள் எப்படி வந்தனவோ, அதே மாதிரிதான் இவருடைய எழுத்துகளைப் பார்க்கிறேன். எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதியிருக்கிறார்.

சனாதன தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும்
சனாதன தர்மம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நான் புரிந்துகொண்டதை ஒன்றைச் சொல்கிறேன். சோ.தர்மன் என்று ஓர் அற்புதமான எழுத்தாளர் இருக்கிறார். கேள்விப்பட்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. சாகித்ய அகாடமி விருது எல்லாம் வாங்கியவர்தான். அவர் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பரும்கூட. எங்கள் வீட்டிற்கு வருவார்.
அவர் வரும்போது ஒரு தடவை தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். சின்ன வயதில், சிறுவனாக இருந்தபோது, அவருடைய ஊரில் ஒரு குறவர் கூட்டம் வந்து தங்கியிருக்கிறது. அவர்கள் தங்கியவுடன், வேட்டைக்கெல்லாம் போகும்போது நாமும் அவர்களுடன் போக வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஒரு குறவருடன் வேட்டைக்குப் போகிறார். இரவு நேரத்தில் போகிறார்கள்.
அப்போது அங்கே ஒரு முயல் ஓடுகிறது. அதை ரொம்ப எளிதாக அடித்திருக்கலாம். ஆனால், அந்தக் குறவர் அதை அடிக்கவில்லை. இவருக்கு ஆச்சரியம். என்ன இது? இவ்வளவு எளிதாக வேட்டையாட முடியும். ஆனால், அம்பை எய்து அடிக்க மாட்டேன் என்கிறாரே என்று சோ.தர்மனுக்கு வருத்தம்.
அடுத்ததாக இன்னொரு முயல் ஓடுகிறது. அதையும் அவர் அடிக்கவில்லை. இவருக்கு இன்னும் வருத்தமாக இருக்கிறது. அன்றைக்கு வேட்டையில் எதுவும் சிக்கவில்லை. அப்போது சோ.தர்மன் அவரிடம், ‘ஏன்யா, அந்த 2 முயல்களையும் எளிதாக அடித்திருக்கலாமே? ஏன் அடிக்கவில்லை?’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தக் குறவர், ‘இல்லை தம்பி. முதல் முயல் கருவுற்றிருந்தது. இரண்டாவது குட்டி முயல். கருவுற்ற முயலையும் குட்டி முயலையும் அடிப்பது அறம் அல்ல’ என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு அழகாக எல்லாம் அவர் சொல்லவில்லை. தன்னுடைய பாணியில் சொல்லியிருக்கிறார் என்று சோ.தர்மன் கூறினார்.
எனக்கு என்னவோ, சனாதன தர்மம் என்றால் இதுதான் தர்மம் என்று தோன்றுகிறது. அந்தக் குறவரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட சனாதன தர்மத்தை நிலைநிறுத்த வேண்டியது நம்முடைய கடமை. எந்தச் சூழ்நிலையிலும் நாம் இருக்கலாம். எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அதை நிலைநிறுத்துவதுதான் நம்முடைய கடமை என்று நினைக்கிறேன். அதைப் பற்றி நாம் யோசிப்பதற்கு ஒன்றுமே கிடையாது.
மகான்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது நம்முடைய மனதில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் போகும். தவறு செய்யக்கூடாது, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், அறவழியில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, ஓர் உந்துதலை ஏற்படுத்தும். இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த பேச்சு குறித்து சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில், ”பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை.
சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் “மகா பெரியவர்கள்” என பதிவிட்டுள்ளார்.










