ராஜன் குறை
பொதுவாழ்க்கை என்ற சொல் மிகுந்த முக்கியத்துவம் உடையது. அதனை முதலில் நாம் முழுமையாக உள்வாங்க வேண்டும். பொது என்பதை ஆங்கிலத்தில் பப்ளிக் (public) என்ற சொல்லுக்கு இணையாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மண்ட் (PWD-Public Works Department) என்பதை பொதுப் பணித்துறை என்று சொல்கிறோம்.
அதே சமயம் ஆங்கிலத்தில் பப்ளிக் செர்வண்ட் என்று சொல்வதை, பொது ஊழியர் என்று சொல்வதில்லை; அரசு ஊழியர் என்று சொல்கிறோம். மற்றொருபுறம் பப்ளிக் என்ற ஆங்கில வார்த்தையையே நாம் தமிழில் மற்றொரு பொருளில் பயன்படுத்துகிறோம். ஒரு மேலாளர் பணியாளரை அனைவர் முன்னாலும் கண்டித்தால் பப்ளிக்காக திட்டியதாகச் சொல்கிறோம். அதாவது பகிரங்கமாக திட்டினார் என்ற பொருளில் கூறுகிறோம். இது அநாகரீகம் என்று கருதபவர்கள் உண்டு. தனியாக க் கூப்பிட்டு கண்டிக்கலாம் என்று கூறுவார்கள்.
ஒரு சொல்லின் அர்த்த வெளி ஒவ்வொரு மொழியிலும் மாறுபடும் என்பதால் நாம் பொதுவாழ்க்கை என்பதன் முழுமையான உட்பொருளை நாம் சிந்திக்க வேண்டும். இந்தச் சொல் குறிப்பாக அரசியல்வாதிகளைக் குறிப்பது. எந்த பொருளில் அவர்கள் வாழ்க்கை பொதுவாழ்க்கையாகிறது? அரசியல்வாதிகளின் தனிவாழ்க்கைக்கும் அதற்குமான வேறுபாடு என்ன? பொதுவாழ்க்கையின் இலக்கணம் என்ன? இதனை சிந்திக்க நாம் மற்றொரு முக்கியமான சொல்லாக்கத்தையும் பரிசீலிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் ரிபப்ளிக் என்பதை நாம் குடியரசு என்று சொல்கிறோம். முடியரசுக்கு மாற்றானது என்ற பொருளில் இது சரியானததுதான். ஆனால் ஆங்கிலச் சொல் ரெஸ் பப்ளிகா (res publica) என்ற லத்தீன் சொல்லாக்கத்திலிருந்து பிறந்தது. அதன் பொருள் பொது விவகாரங்கள் அல்லது பொது நிர்வாகம் என்பதாகும். எனவே குடியர சு, மக்களாட்சி என்பதன் அடிப்படை அது பொதுவில் இயங்கும் அதிகாரம் என்பதுதான். அதாவது ஒருவரின் இயக்கம் அவரது நலன் சார்ந்தோ, அவர் குடும்பம் சார்ந்தோ அமையாமல் ஒரு மானுடக் குழு, சமூகம் என பலருக்குப் பொதுவானதாக அமையும்போது அது பொதுவாழ்க்கை ஆகிறது.
முடியாட்சியில் கூட மன்னர்கள் பொது அவைகளைக் கூட்டுவதுண்டு. மக்கள் குறைகளைக் கேட்க, வழக்குகளை விசாரிக்க பொதுமன்றங்கள் அமைவதுண்டு.மன்னரின் முடிவுகள் பல்வேறு அவைகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதே சரியான ஆட்சி முறை. இல்லாவிட்டால் அது எதேச்சதிகாரம் என அறியப்படும்.
வரலாறு நெடுகிலும் ஒற்றைப் புள்ளியில் அதிகாரம் குவிவதைத் தடுத்து ஆட்சியின் பொதுத்தன்மை, அதாவது முடிவெடுக்கும் செயல்பாடுகளில் அனைவரும் கருத்துரைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துவது விரும்பப் பட்டே வந்துள்ளது என்பதுதான் அரசியலின் அடிப்படை. எனவே பொதுவாழ்க்கை என்பது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் எண்ணங்களை, கொள்கைகளை பொதுவெளியில் பகிர்வதும், கருத்துப் பகிர்வதும், உரையாடலில் ஈடுபடுவதுமான குடியரசின் அடிப்படை இலக்கணம் எனலாம். அதுதான் அரசியல் வாழ்க்கையை பொதுவாழ்க்கையாக மாற்றுகிறது. மற்றபடி அரசியல்வாதிகளின் குடும்ப உறவுகள், நட்புகள் போன்றவை அவர்களது தனி வாழ்க்கையாக இருக்கலாம்.
முக்கியமாக அரசு நிர்வாகம் என்பது முழுமையான பொதுத்தன்மை கொண்டிருக்க வேண்டும். அதில் மூடு மந்திரங்கள், மர்ம ங்கள் எதுவும் இருக்க க் கூடாது. ஏனெனில் மக்களாட்சியில் அரசு பிரதிநிதித்துவ அரசு. மக்கள் சார்பாகத்தான் ஆட்சி செய்ய வேண்டும். அப்போது பிரதமரோ, முதல்வரோ ஆட்சித்தலைவர்கள் மக்களிடம் தொடர்ந்து தங்கள் எண்ணங்களை, கருத்துக்களை, திட்டங்களைப் பகிர வேண்டும். கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும். பொதுமன்ற விவாதங்களில் பங்கெடுக்க வேண்டும்.

நடிகர் விஜயின் பொதுவெளி விலக்கம்
முதல்வர் விஜய் பொதுவாழ்க்கைக்கே வர மறுக்கிறார். எதைச் செய்தாலும் அதை தனிவெளியில்தான் செய்கிறார். பொதுவெளியில் பகிர்வதில்லை. பொதுவெளி என்றால் அனைத்து மக்கள் முன்னாலும் மேடை போட்டுச் செய்யவேண்டியதில்லை. அதற்குத்தான் ஊடகங்கள் உள்ளன. அவர்களைக் கூப்பிட்டால் உடனே காமிராக்களுடன் வந்துவிடுவார்கள். எல்லோருக்கும் காட்சிகளையும், கருத்துக்களையும் கொண்டு சென்று விடுவார்கள். ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
கரூரில் விஜய் பேசிய பிரசார கூட்டத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்ததை நொடிக்கு நொடி நேரலையாக மக்கள் தொலைகாட்சிகளில் பார்த்தனர். அது பகிரங்கமாக நிகழ்ந்த பொதுநிகழ்ச்சி. அது நிகழ்ந்தவுடன் விஜய் அங்கிருந்து கிளம்பி திருச்சி விமான நிலையம் சென்று சென்னைக்குத் திரும்பினார். திருச்சி விமான நிலையத்தில் ஊடகங்கள் காத்திருந்தன. அவர் வேகமாகக் காரிலிருந்து இறங்கிச் சென்றபோது அவரை அழைத்தார்கள்.
அவர் ஒரு நிமிடம் நின்று அவர் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஓரிரு வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டிருக்கலாம். “என்ன நிகழ்ந்தது என்று எனக்கு முழுதாகத் தெரியவில்லை, விசாரணைக்கு நானும் கட்சியினரும் முழுமையாக ஒத்துழைப்போம்” என்று கூறியிருக்கலாம். அதுதான் ஒருவர் பொதுவாழ்க்கையில் நுழைந்ததற்கான அடையாளம். தான் பொதுவெளியில் பொறுப்பேற்க, பேச கடமைப்பட்டவன் என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடு. ஆனால் அவர் ஒரு தனிமனிதராகத்தான் நடந்து கொண்டார்.

சில நாட்களுக்குப்பின் அவர் ஒரு சில நிமிடங்கள் பேசிக் காணொலி பதிவு செய்து வெளியிட்டார். அதிலும் ஏன் அவர் ஊடகங்களை சந்தித்து பேசவில்லை என்பதற்கான விளக்கம் எதுவும் இல்லை. ஊடகங்களை சந்திப்பதும், அவர்கள் அந்த துயர நிகழ்ச்சி குறித்து கேட்கும் கேள்விகளுக்கு விடையளிப்பதும் குறைந்தபட்ச சமூகப் பொறுப்பு என்று புரிந்துகொள்வதுதான் பொது வாழ்க்கை. ஆனால் அவர் ஒரு சில உணர்வுகளை பதிவு செய்தாரே தவிர, பொது மன்ற கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.
அதன் பின் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சென்னைக்கு ஒரு தனியார் விடுதிக்கு வரவழைத்து அவர்களுடன் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார், மன்னிப்பு/வருத்தம் தெரிவித்தார் என்று கூறப்பட்ட து. ஆனால் அந்த சர்ந்தப்பத்திலும் அவர் ஊடகங்களை அனுமதிக்கவில்லை. அது அவருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமான தனிப்பட்ட உரையாடலாக இருந்ததே தவிர பொது நிகழ்ச்சியாக அமையவில்லை. அதன் பின் அவர் சிபிஐ விசாரணைக்கு டில்லி சென்று வந்தபோதும் அந்த விசாரணை குறித்து எதையுமே பொதுவெளியில் பகிரவில்லை.
பொதுமக்கள் நேரலையில் கண்ட, காணக்கூடிய ஒரு துயர நிகழ்வைக் குறித்து அதே ஊடக வெளியில் அவர் எந்த விவாதத்தையும், உரையாடலையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அந்த நிகழ்வைக் குறித்தும், அதில் விஜய்க்கு பொறுப்பிருக்கிறதா, இல்லையா என்பதைக் குறித்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விவாதித்தார்கள். மக்கள் விவாதித்தார்கள். பொதுமன்றம் முழுவதும் இந்த கேள்விகளால் நிறைந்திருந்தது. விஜய் தனித்து ஒரு கூட்டிற்குள் சென்றுவிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென்று ஏதோ சொன்னாரே தவிர உரையாடலாக, விவாதமாக அவர் எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை. சுருங்கச் சொன்னால் அவர் பொது வாழ்க்கையை வரித்துக் கொள்ளவில்லை.

கூடாத அணி ஆட்சி
விஜய் தனித்த முத்திரை பதித்திருப்பது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்றிருப்பதில்தான். இது அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் ஏற்பட்ட நிலை என்றாலும், தவெக-வின் கொள்கையாகவே அவர் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்திருந்தார். அதனால் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளைச் சார்ந்த மொத்தம் நாலு பேருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அமைச்சர் பொறுப்புகள் மட்டும்தான் கூட்டணி ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சிகள் அமையும்போது அனைத்து கட்சிகளும் கலந்து பேச, பொது வேலைத் திட்டத்தை நிர்ணயிக்க முயற்சிகள் நடக்கும். குறைந்தபட்சம், கூட்டணி கட்சிகளை ஆட்சித் தலைவர்கள் அங்கீகரித்து பொதுவெளியில் பேசுவார்கள். ஆனால் விஜய் கூட்டணி கட்சிகள் குறித்து எதுவும் பொதுவெளியில் கூறுவதில்லை. அவர்களுடன் இணைந்து ஊடகங்களைச் சந்திப்பதில்லை. கூட்டணி குறித்து, அதற்குப் பெயர் வைப்பது குறித்தெல்லாம் அந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பேசுகிறார்களே தவிர, ஆட்சியில் தலைமைப் பொறுப்பேற்றுள்ள விஜய் எதையும் கூறுவதில்லை.
ராகுல் காந்தி சென்னைக்கு வந்து விஜய் வீட்டில் விருந்துக்குச் செல்வார். இருவரும் பிறகு காஃபி ஷாப்பிற்குச் செல்வார்கள். ஏதோ நண்பர்கள் தனிப்பட்ட முறையில் சந்திப்பது போல நிகழுமே தவிர அதைக்குறித்து விஜய் எதுவுமே பொதுவெளியில் பகிர மாட்டார். ராகுல் காந்தி மிகக் கடுமையான போராட்டத்தை டில்லியில் பாஜக அரசுக்கு எதிராக நட த்துவார். விஜய் அதைக்குறித்து எந்த கருத்தும் சொல்ல மாட்டார். அப்போது அவர் உண்மையிலேயே காங்கிரஸுடன் அரசியல் கூட்டணியில் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியதாகிறது. பாஜகவால் இயக்கப்படுகிறார், பாஜகவிற்கு அஞ்சுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் மலிகின்றன.
விசிக பிரம்மாண்டமான மாநாடு நட த்தியது. அது முடிந்த தும் விசிக தலைவர் சென்று விஜயை சந்தித்தார். விஜய் தன்னிடம் மாநாட்டைக் குறித்து பாராட்டி பேசியதாக விசிக தலைவர் பொதுவெளியில் சொன்னார். ஆனால் விஜய் பொதுவெளியில் எதையும் சொல்லவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் சந்தித்தால் போதும் என்று நினைக்கிறார். இது கூட்டணி குறித்து பல ஐயப்பாடுகளை உருவாக்க வல்லதாக இருக்கிறது. உதாரணமாக விஜய் பாமக-வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசப்படும்போது அவர் விசிக குறித்து பொதுவெளியில் எதுவுமே கூறவில்லை என்பது கவனத்திற்கு வருகிறது.

விஜயின் மூடுமந்திர ஆட்சியும், அரசியல் சூன்யவெளியும்
விஜய் ஆட்சியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சில தவறுகளும் இழைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கான முழுமையான விளக்கங்களை யாராலும் பெற முடிவதில்லை. ஏனெனில் ஆட்சித் தலைவரான விஜய் ஆட்சியின் பொதுமைத்தன்மையை அங்கீகரிப்பதில்லை. எதைக்குறித்தும் அவருடைய கருத்தையோ, விளக்கத்தையோ அளிப்பதில்லை. அவர் பேசமாட்டார்; செயல்படுவார் என்று அபத்தமான ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். பிரச்சினையே அவருடைய செயல்கள்தான். அவர் மன்னரல்ல; மக்கள் பிரதிநிதி. அவருடைய செயல்களை அவர்தான் விளக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத திட்டம் இது என தொழில்முனைவோர் பலர் கூறுகின்றனர். தி.மு.க ஆட்சியில் விரிவாக ஆராய்ந்துதான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்ட து என்பதை விளக்குகிறார்கள். அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர் தங்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்தார்கள். விஜய் அந்த போராட்ட த்திற்கு ஆதரவு அளித்தார். சூழலியல் கோணத்தில் அந்த இடம் பொருத்தமானதல்ல என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறினர்.
விஜய் எதனால் இந்த திட்ட த்தைக் கைவிட்டார் என்பதற்கான கொள்கை விளக்கம் எதையும் கூறவில்லை. விவசாய நிலம் பிரச்சினையென்றால் தவெக இனி வளர்ச்சித் திட்டங்களுக்காக எந்த விவசாய நிலத்தையும் கையகப்படுத்தாதா? சுற்றுச்சூழல் காரணமென்றால் அதனை பாதிக்காத மாற்று இட த்தை கண்டறிந்துவிட்டார்களா? இது குறித்த எந்த விவாத த்திற்கும் விஜய் முகம் கொடுப்பதில்லை. அப்படியானால் தி.மு.க மீதான காழ்ப்புணர்ச்சியில்தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாழாக்கிவிட்டார் என்று பலர் கூறுவதை எப்படி மறுக்க முடியும்?
அடுத்து தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையப்போகிறது என்று அறிவித்தார். சுற்றுச்சூழல் குறித்த அறிவுள்ள யாரும் அந்த கடற்கரை, கழிமுகப் பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். தலைமைச் செயலகத்திற்கான இடம் குறித்து முடிவு செய்ய குழு எதுவும் அமைக்க வேண்டாமா? சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டாமா? கூட்டணி கட்சிகளுடன் விவாதிக்க வேண்டாமா? அவருடைய ஜோதிடர் கூறியதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்ட தாக க் கூறப்படுகிறது. விஜய் இந்த பிரச்சினை குறித்து எதுவும் பேசுவதில்லை என்பதால் மக்கள் ஜோதிடர்தான் காரணம் என்று நம்பத் துவங்கி விட்டனர்.
பல ஆண்டுகள் பலர் முயற்சியில் உருவான விமான நிலையத் திட்ட த்தை கைவிடுகிறார்; ஆட்சியின் எதிர்காலத்தை பெருமளவு பாதிக்கக் கூடிய தலைமைச் செயலகத்தை எந்த முறையான ஆலோசனையுமின்றி தான் தோன்றித்தனமாக அறிவிக்கிறார். அவருடைய இந்த செயல்களுக்கான விளக்கத்தை அவர்தானே பொதுவெளியில் கூற வேண்டும்? அவருக்கு வாயில்லையா பேசுவதற்கு? மக்கள் பிரதிநிதிதானே அவர்? கடவுள் அவதாரம் இல்லையே?
ஒன்றிய மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் கமிட்டியினை அவர்கள் இறுதி அறிக்கை தர ஆறு மாத காலமே உள்ள நிலையில் கலைத்துவிட்டார். பாரதீய ஜனதா கட்சி தவிர அனைத்து கட்சிகளும் இந்த செயலைக் கண்டித்துள்ளன. அந்த கமிட்டியின் உழைப்பு மொத்தமும் வீணாகி விட்டது. அவர்கள் அறிக்கை கொடுத்திருந்தால் அது அகில இந்திய அளவில் பலரும் விவாதிக்கத்தக்க முக்கிய ஆவணமாக விளங்கியிருக்கும். அதனால் விஜய்க்கு எந்த இழப்பும் இல்லை.
பாஜக அரசினை மகிழ்விக்க, தி.மு.க மீதான காழ்ப்பை வெளிப்படுத்திக்கொள்ள இதனைச் செய்துள்ளார். தமிழ்நாட்டின் மாநில சுயாட்சி என்ற இலட்சியத்தின் மீது மண்ணையள்ளிப் போட்டுள்ளார். இவ்வளவு முக்கியமான முடிவை எடுத்தவர் அது குறித்து பொதுமன்றத்தில் விளக்க வேண்டாமா? எதற்காக அவர் முதல்வராக இருக்கிறார்? அமைச்சர்கள் ஏதேதோ அபத்தமான விளக்கங்களைத் தருகிறார்கள். மக்கள் அவர்களுக்காகவா வாக்களித்தார்கள்? விஜய் என்ற பிம்பத்திற்குத்தானே வாக்களித்தார்கள்? அவர்தானே பேச வேண்டும்?
மற்றொருபுறம் அதிகாரிகளும், காவல்துறையும். சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு தவறுகளைச் செய்கிறார்கள். எல்லாவற்றையும் ரகசியமாகப் பேசி சரிகட்ட முயற்சி செய்கிறாரே தவிர, பொதுவெளியில் அதற்கு வருத்தம் தெரிவிப்பதோ கண்டிப்பதோ இல்லை. முதல்வர் கண்டித்தார் என்று தகவல்களை பரப்புகிறார்கள். அவர் ஏன் பகிரங்கமாக தன் கண்டனங்களைப் பதிவு செய்யக்கூடாது? அப்போதுதானே மக்கள் அவர் மீதும், ஆட்சி மீதும் நம்பிக்கை வைப்பார்கள்? அப்போதுதானே தவறு செய்பவர்கள் அஞ்சுவார்கள்?

பேராசிரியர் கலையரசனைக் காவல்துறை விடியற்காலை வீட்டிற்குச் சென்று கூட்டிச் சென்றது. அதற்கு சொல்லப்படும் காரணம் வினோதமானது. அவர் புகைப்பட த்தை அடையாளமாக வைத்துக்கொண்டு யாரோ ஒருவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சமூக ஊடக பக்கத்தில் மோசமான பதிவைச் செய்தாராம். அதற்காக காவல்துறை யார் என்னவென்று விசாரிக்காமல் அதிகாலையில் கைது செய்யுமா என்று வியப்பாக இருக்கிறது. மிகவும் புதிரான ஒரு செயல் இது.
அதைத்தொடர்ந்து பொதுவெளியில் மிக க் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. கலையரசன் விலைவாசி ஏற்றம் தொடர்பாக அரசின் மெத்தனப் போக்கைக் குறித்து பேசியிருந்தார் என்பதை பலரும் கூறினர். அப்போது முதல்வர் விஜய் ஒரு செயலைச் செய்தார். பேராசிரியர் கலையரசனை தலைமைச் செயலகத்திற்கு வரச்செய்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் என்பது செய்தி.
கலையரசனிடம் பிரச்சினை செய்தது விஜயின் வீட்டுப் பணியாளர்கள் என்றால் அவர் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கலாம். மாநில காவல்துறையின் செயல்பாட்டிற்கு அவர் பொதுவெளியில்தானே மன்னிப்புக் கேட்க வேண்டும்? குறைந்தபட்சம் முதல்வரின் ஒரு அறிக்கை, அரசின் செய்திக் குறிப்பு கலையரசனுடன் இருக்கும் புகைப்பட த்துடன் வெளியிடப்பட வேண்டுமல்லவா? இதுதான் விஜயால் பொதுவாழ்க்கை குறித்தும், அரசின் பொதுத்தன்மை குறித்தும் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.
எதனால் பொதுவாழ்க்கையை தவிர்க்கிறார் விஜய்?
விஜயின் இந்த பொதுவாழ்க்கை தவிர்ப்பிற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதலில் மக்களுக்கு நன் கு அறிமுகமானது அவரது திரைக்கதாநாயக பிம்பம்தான். தனிப்பட்ட மனிதராக விஜயை அவர்களுக்குத் தெரியாது. விஜய் பொதுவாழ்க்கைக்கு வந்தால் அந்த திரைப்பிம்பத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாம்.
எம்.ஜி.ஆர்-தான் அரசியலுக்கு வரும் எல்லா நடிகர்களுக்கும் முன்மாதிரி. அவர் முதலிலிருந்தே கட்சி கூட்டங்களில் பங்கேற்று பொதுவாழ்க்கையில் தடம் பதித்தவர். பத்திரிகையாளர்களிடம் நன்றாகவே திறம்படப் பேசுவார். நேர்காணல் அளிப்பார். விரிவான சமூக அனுபவப் பின்புலம் கொண்டவர். அரசியல் தலைவர்களின் அடிப்படைத் தேவையான நினைவாற்றல் நிரம்பக் கொண்டவர்.

அதனால் அவர் திரை பிம்பத்திலிருந்து மிகவும் மாறுபட்ட, குல்லாவும், கறுப்புக் கண்ணாடியும் கூடிய பொதுவாழ்க்கை தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவும் தன் திரை பிம்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட “அம்மா” என்ற பொதுவாழ்க்கை உருவத்தை ஏற்படுத்திக்கொண்டார். அவரும் நினைவாற்றலும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். சுயமாக சிந்திக்கும் முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்.
விஜய் எதனால் தன் திரைப்பிம்பத்திற்கு பின்னிருந்தே இயங்க விரும்புகிறார் என்பதற்குக் காரணம் அவருக்கு மனதை ஒருமுகப்படுத்தி கவனம் குவிக்கும் ஆற்றல் இல்லாதுதானோ என்று தோன்றுகிறது. இவ்வகையானவர்களால் பிரச்சினைகளின் நுட்பங்களை அலசிப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான நினைவாற்றலும் இருக்காது. அதனால்தான் ஊடகங்களை சந்திக்க அச்சம்.
அது போன்றவர்கள் நிர்வாகப் பொறுப்பிற்கு வரும்போது பெரும்பாலும் பிறரால் இயக்கப் படுபவர்களாக இருப்பார்கள். அதை மறைக்க தான்தோன்றித்தனமாக எதையாவது செய்து தனது அதிகாரத்தைக் காண்பிப்பார்கள். கோபமாகப் பேசுவார்கள். இது போன்றவர்களை பல்வேறு நிறுவனங்களில் பார்க்கலாம். ஏதோ சந்தர்ப்பவசமாக நிர்வாகப் பொறுப்பிற்கு வந்துவிடுவார்கள். ஆனால் அவர்களால் அதில் செயல்பட முடியாது. பெரும்பாலும் ஆலோசகர்கள், உதவியாளர்கள் துணையுடன் நாட்களை நகர்த்துவார்கள்.
விஜயின் ஆறு மாத கால ஆட்சியில் தலைமை வெற்றிடம் உருவாகியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் வேகமாக சீர்குலைந்து வருகிறது. இது தமிழ்நாடு இதுவரை சந்திக்காத பெரும் அரசியல் நெருக்கடியாகவே தோன்றுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வாய் திறவாத முதல்வரை நாடு தாங்கும் என்று தெரியவில்லை.










