நடுக்கடலில் பாக். பயங்கரவாதிகளின் போர் பயிற்சி.. ‘வேட்டை’க்கு ரெடியாகும் ராணுவம்? கராச்சிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?

By Mathi

|

Published on 16 Nov 2026, 8:39 AM

India Pakistan Terror

பாகிஸ்தானின் கராச்சி அருகே நடுக்கடலில் உள்ள சர்னா தீவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ரகசியமாகக் கடல்சார் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதே நேரத்தில், அரபிக்கடலை ஒட்டிய இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் உள்ள சர் க்ரீக் பகுதியில் நமது ராணுவம் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

ADVERTISEMENT

பாகிஸ்தானின் குட்டித் தீவில் என்ன நடக்கிறது?

பாகிஸ்தானின் கராச்சி கடற்கரைக்கு அருகே அரபிக்கடலில் அமைந்துள்ளது சர்னா தீவு (Charna Island). பெரும்பாலும் மக்கள் வசிக்காத இந்தச் சிறிய பாறைத் தீவு, ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட நீர்விளையாட்டுகளுக்குப் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

வெளியில் பார்ப்பதற்கு அமைதியான சுற்றுலாத் தீவு. ஆனால் அதன் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்குக் கடல்சார் போர் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள்தான் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

பாதுகாப்பு தொடர்பான புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் Resonant News இணையதளம், நவம்பர் 5-ந் தேதி இது தொடர்பாகப் படங்களுடன் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்தக் கட்டுரையின்படி, சாதாரண சுற்றுலாப் பயணிகளைப் போல சர்னா தீவுக்குச் செல்லும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் அங்கு ரகசியமாகக் கடல்சார் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

குறிப்பாக, நீருக்கடியில் நீந்துதல், திசையறிந்து செயல்படுதல், போர் நீச்சல், கடலில் உயிர்வாழும் முறைகள், அதிவேக மோட்டார் படகுகளைக் கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை வெறும் நீச்சல் பயிற்சிகள் அல்ல. கடல்வழி ஊடுருவல் மற்றும் நீருக்கடியிலான நடவடிக்கைகளுக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகள் என்று அந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

கடல்களை ஆள வேண்டும்.. லஷ்கர் தளபதிகளின் உத்தரவு

லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு ஏற்கெனவே தனியாகக் கடல்சார் பிரிவு இருப்பதாகவும், அது ‘தாவா மரைன் விங்’ (Dawa Marine Wing) அல்லது ‘சதா-இ-ஹுரியத்’ (Sada-e-Hurriyat) என்று அழைக்கப்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல்வழியாக ஊடுருவுதல், நீருக்கடியில் செயல்படுதல், பெரிய அளவிலான கடல்சார் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திறன்களை வளர்ப்பதற்காக இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, ‘கடல்களை ஆள வேண்டும்’ என்று லஷ்கர் அமைப்பின் மூத்த தளபதிகள் பிறப்பித்ததாகக் கூறப்படும் உத்தரவைத் தொடர்ந்து, ‘வாட்டர் ஃபோர்ஸ்’ (Water Force) என்ற கடல்சார் தாக்குதல் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நீச்சல் குளங்களிலும், பாகிஸ்தானின் மங்லா அணைப் பகுதியிலும் லஷ்கர் அமைப்பினர் நீர்சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது சுற்றுலாத் தீவிலேயே இத்தகைய பயிற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுவது இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

லஷ்கர் பயிற்சிக்குப் பின்னணியில் இருக்கும் PMML

இந்தக் கடல்சார் பயிற்சிகளை நடத்துவதிலும் மேற்பார்வையிடுவதிலும் பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (Pakistan Markazi Muslim League – PMML) அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

PMML என்பது லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் முகமாகவும் அதன் மறைமுக அமைப்பாகவும் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகக் கருதப்படும் ஹஃபீஸ் சயீதுடன் தொடர்புடைய அமைப்புகளின் பின்னணியிலும் PMML செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

சுற்றுலா மற்றும் சமூக நடவடிக்கைகள் என்ற போர்வையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுவதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர் க்ரீக்கில் இந்தியா என்ன செய்கிறது?

பாகிஸ்தானின் கராச்சி அருகே லஷ்கர் பயங்கரவாதிகளின் கடல்சார் பயிற்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் உள்ள சர் க்ரீக் பகுதியும் பரபரப்பாகி இருக்கிறது.

சர் க்ரீக் (Sir Creek) என்பது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையே அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ள சுமார் 96 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்வழிப் பகுதி. சதுப்பு நிலங்கள், கடல் ஓடைகள், உப்பளங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.

நிலப்பரப்பின் தன்மை காரணமாக இங்கு பாதுகாப்புப் படையினர் செயல்படுவதும், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களைக் கண்காணிப்பதும் சவாலான பணிகளாக உள்ளன.

இந்த நிலையில்தான் சர் க்ரீக்கில் சாலைகள், பாதுகாப்பு முகாம்கள், படகுத்துறைகள், கண்காணிப்பு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பகுதியில் 5 புதிய எல்லைப் பாதுகாப்பு முகாம்கள், படகுத்துறைகள், சுமார் 11 கிலோ மீட்டர் இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட வசதிகளை உருவாக்க ரூ.432.09 கோடி மதிப்பிலான திட்டத்திற்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் டெண்டர் கோரப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நடவடிக்கைகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதுடன், அவசரமான சூழ்நிலைகளில் பாதுகாப்புப் படைகள் விரைவாகச் செயல்படுவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர் க்ரீக்கில் இந்தியா மேற்கொண்டு வரும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், முன்னாள் இந்தியத் தூதர் சுஜன் சினாய் எழுதிய “Securing Sir Creek: Infrastructure is India’s first line of defence” என்ற கட்டுரையை Firstpost இணையதளம் இன்று நவம்பர் 15-ந் தேதி வெளியிட்டுள்ளது. சர் க்ரீக்கில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதே இந்தியாவின் முதல் பாதுகாப்பு அரண் என்பதை அந்தக் கட்டுரையின் தலைப்பு வலியுறுத்துகிறது.

தென்னிந்திய கடலோர நகரங்களும் இலக்கா?

லஷ்கர் அமைப்பின் கடல்சார் பயிற்சிகள் தொடர்பாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, சில முக்கியமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

“இந்த முறை வழக்கமாக எதிர்பார்க்கப்படும் இடங்களைத் தவிர்த்து, இந்தியாவின் தென்பகுதியில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்துகிறோம்.

குறிப்பாக, எதிர்பாராத இடத்தில் கடல்வழியாக ஊடுருவித் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தென்னிந்தியக் கடற்பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகுகள் மற்றும் நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்கின்றன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel