மோடி அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் 3 நாள் ஸ்டிரைக்… மாத கடைசியில் யாருக்கு பாதிப்பு?

Published On:

| By Mathi

Bank-Strikev

செப்டம்பர் மாதத்தின் கடைசி 3 வேலை நாட்களான 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான United Forum of Bank Unions (UFBU) அழைப்பு விடுத்துள்ளது.

வங்கிகள் வேலை நிறுத்தம் ஏன்?

  • வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை- அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
  • வாரத்தில் 5 நாள் வேலை தொடர்பான முன்மொழிவுக்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டு மத்திய அரசுக்கு அனுப்பியும், மத்திய அரசின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
  • பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை முறையில் செய்யப்பட்ட மாற்றங்களை வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்க்கின்றன.
  • ஓய்வூதியம், அகவிலைப்படி மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள் தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்
  • பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, முதலில் செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தையும், தீர்வு ஏற்படாவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும் அறிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் 85,000 வங்கி கிளைகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

இந்த வேலைநிறுத்தம் சாதாரண 3 நாள் வங்கி ஸ்டிரைக் என்பதைத் தாண்டி முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், செப்டம்பர் மாத இறுதி மட்டுமின்றி வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிவடையும் நேரத்திலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையடுத்து அத்தியாவசிய வங்கி சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டவற்றுடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்துகிறது.

ADVERTISEMENT

5 நாட்கள் தொடர்ச்சியான பாதிப்பு?

செப்டம்பர் 28 திங்கட்கிழமை வேலைநிறுத்தம் தொடங்குகிறது. அதற்கு முந்தைய செப்டம்பர் 26 இரண்டாவது சனிக்கிழமை; செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை. எனவே வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெற்றால், செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிக் கிளைகள் மூலம் நடைபெறும் சேவைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

SBI, Union Bank உள்ளிட்ட வங்கிகளும் முக்கியமான வங்கிப் பணிகளை வேலைநிறுத்தத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

ADVERTISEMENT

சம்பளம் வருவதில் பிரச்சினையா?

மாதக் கடைசி என்பதால் ஊழியர்களுக்கு முதலில் எழும் கேள்வி இதுதான்.
வேலைநிறுத்தம் என்பதால் சம்பளம் வராது என்று சொல்ல முடியாது. நிறுவனங்கள் ஏற்கெனவே வங்கிக்கு வழங்கியுள்ள salary instructions மற்றும் automated/digital processing வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் தொடரக்கூடும்.

ஆனால் சம்பளப் பட்டியலை வங்கிக் கிளை மூலம் கடைசி நேரத்தில் சமர்ப்பிக்கும் நிறுவனங்கள், வங்கிப் பணியாளர்களின் செயல்பாடு தேவைப்படும் பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. எனவே நிறுவனங்கள் மாத இறுதிவரை காத்திருக்காமல் சம்பளம் தொடர்பான வங்கிப் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்வது சிக்கலைத் தவிர்க்க உதவும்.

ADVERTISEMENT

EMI என்ன ஆகும்?

வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான EMI தானாக வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால், வேலைநிறுத்தம் என்பதற்காக அதை நிறுத்திவிடும் என்று கருதக்கூடாது.
எனவே EMI தேதி செப்டம்பர் 28–30 அல்லது அதனைத் தொடர்ந்து இருந்தால், வழக்கம்போல அக்கவுண்ட்டில் தேவையான தொகையை வைத்திருப்பது முக்கியம்.

வேலைநிறுத்தம் நடக்கிறது என்பதற்காக EMI செலுத்த வேண்டிய தேதியை வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தள்ளிப்போடக் கூடாது.

காசோலை கொடுப்பவர்கள் கவனம்

வங்கி ஸ்டிரைக்கால் காசோலை மற்றும் கிளை சார்ந்த சேவைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகும். செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற முந்தைய நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தின்போது பல பொதுத்துறை வங்கிகளில் cash transactions, cheque clearances மற்றும் administrative work பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதேபோன்ற நிலை செப்டம்பர் 28–30 வேலைநிறுத்தத்திலும் ஏற்படுமா என்பது ஊழியர்களின் பங்கேற்பைப் பொறுத்திருக்கும்.

எனவே குறிப்பிட்ட தேதிக்குள் பணமாக்கப்பட வேண்டிய முக்கியமான காசோலைகளை கடைசி நேரம் வரை வைத்திருக்காமல் முன்கூட்டியே வங்கியில் செலுத்துவது நல்லது.

UPI, ATM முடங்குமா?

இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை. SBI அறிவுறுத்தலின்படி ATM, ADWM, Customer Service Points, Internet Banking, YONO, Mobile Banking, UPI உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தலாம். வங்கி வேலைநிறுத்தத்தின்போதும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக SBI தெரிவித்துள்ளது.

எனவே UPI மூலம் பணம் அனுப்புவது, ஆன்லைன் பரிவர்த்தனை செய்வது, மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டிரைக் செப்டம்பருடன் முடியுமா?

அதுதான் இல்லை. செப்டம்பர் 28–30 வேலைநிறுத்தத்துக்குப் பிறகும் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், அக்டோபர் 26 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் நடத்தவும் UFBU நோட்டீஸ் வழங்கியுள்ளது. SBI தனது பங்குச்சந்தை அறிக்கையிலும் இதைக் குறிப்பிட்டு, வேலைநிறுத்த நாட்களில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாரத்தில் 5 நாள் வங்கிப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டங்களை வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனால் மாதக் கடைசியில் சம்பளம், EMI போன்ற தானியங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளைவிட, காசோலை மற்றும் வங்கிக் கிளையை நேரடியாகச் சார்ந்த பணிகளில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகம். முக்கியமான கிளை சார்ந்த வங்கிப் பணிகள் இருப்பவர்கள் செப்டம்பர் 26-க்கு முன்பே திட்டமிடுவது சிக்கலைத் தவிர்க்க உதவும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share