தொழிலதிபர் ஜெம் வீரமணி, சிறுமிகளை சீரழித்த விவகாரத்தில் தாம் தலையிட்டது உண்மைதான் என்றும், இந்த விவகாரத்தில் தென் மாவட்ட அரசியல் தலைவர் ‘பஞ்சாயத்து’ செய்ததும் உண்மை என்றும் மின்னம்பலத்தில் வெளியான செய்தியை உறுதி செய்துள்ளார் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்.

அதில், “சாந்தி தம்பதி இந்த விவகாரத்தை காங்கிரஸுல இருந்த ரஞ்சன்கிட்ட கொண்டு போறாங்க.. இவர் காங்கிரஸ் நிர்வாகி. சாந்தி தரப்புல ஜெம் வீரமணிகிட்ட ரஞ்சன் பேச்சுவார்த்தை நடத்தினாரு.. அந்த பேச்சுவார்த்தையில ரூ.5 கோடிதான் தர முடியும்னு ஜெம் வீரமணி சொன்னார்.. ஆனா சாந்தி தம்பதி இதை ஏத்துக்கலை..
இந்த நிலைமையில இந்த வீடியோவை ஒரு ஜேர்னலிஸ்ட் பார்க்க, அது அப்படியே வெளியே பரவலா பேசப்பட ஆரம்பிச்சது.. திடீர்னு இந்த பேச்சும் நின்னு போச்சு. இதுக்கு இடையில ஜெம் வீரமணி, தென் மாவட்ட ஜாதி கட்சித் தலைவர்கிட்ட போய், “இந்த மாதிரி பிரச்சனை.. இவ்வளவு பணம் கேட்கிறாங்க.. இதுல நீங்க தலையிட்டு முடிச்சு கொடுங்க”ன்னு கேட்டார். அந்த தலைவரும் ரஞ்சன் கிட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார்.. மிரட்டியும் கூட பார்த்தார்..” என எழுதியிருந்தோம்.

தற்போது தி இந்து நாளிதழுக்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவரான ரஞ்சன் குமார் பேட்டி அளித்துள்ளார். அதில், ஜெம் வீரமணி-சாந்தி விவகாரத்தில் தாம் தலையிட்டதாகவும், நட்சத்திர ஹோட்டலில் அரசியல் தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் நமது மின்னம்பலத்தில் எழுதப்பட்ட தகவல்களை உறுதி செய்துள்ளார்.
ரஞ்சன் குமார் சொன்னது என்ன?
தி இந்து நாளிதழுக்கு ரஞ்சன் குமார் அளித்த பேட்டி: ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக சாந்தி அறிமுகமானார். அந்த வகையில் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சாந்தி என்னிடம் உதவி கேட்டார்.
‘ஜெம்’ வீரமணியுடனான சாந்தியின் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஏற்பட்ட “தவறான புரிதல்” காரணமாக, தென் மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட ஒரு அரசியல் கட்சியின் நிறுவனர் தன்னை மிரட்டுவதாக சாந்தி என்னிடம் கூறினார்.
பஞ்சாயத்து செய்த தென் மாவட்ட தலைவர்
இதையடுத்து சென்னையில் உள்ள ஹோட்டலில் அந்த அரசியல்வாதியுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அந்த சந்திப்பின்போது, வீரமணியிடம் சாந்தி பணம் பறிப்பதாக குற்றம்சாட்டி அந்த அரசியல்வாதி சாந்தியிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்தத் தருணத்திலேயே ஏதோ சரியில்லை என்பதை நான் உணர்ந்தேன்.
பின்னர் போயஸ் கார்டன் அருகே உள்ள சாந்தியின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். அப்போது வீரமணியுடனான தொடர்பு குறித்து சாந்தி விளக்கினார்.
அத்துடன் சாந்தி தனது வீட்டிலிருந்த தொலைக்காட்சியில், வீரமணி ஆபாசச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் வீடியோவை போட்டுக் காட்டினார். தொலைக்காட்சியில் ஓடிய வீடியோவை நான் எனது செல்போனில் பதிவு செய்தேன். இதை சட்டரீதியாக எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து உடனடியாக எனது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டேன். அதன்பிறகு போலீசாரை அணுகினேன்.

போலீசில் புகார்
2024-ம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்தில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன். நவம்பர் 21-ம் தேதியிட்ட எழுத்துப்பூர்வமான புகாரை அவரிடம் கொடுத்தேன். போலீசிடம் அளித்த புகாரில், “ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, சாந்தியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கு 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளை அவர் குறிவைத்ததாகத் தகவல் கிடைத்தது. சிறுமிகளிடம் அவர் பாலியல் செயல்களில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோக்கள் எனக்குக் கிடைத்தன…” எனத் தெரிவித்திருந்தேன். சிறுமிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தப் புகாரைக் கொடுத்தேன். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களையும் புகாருடன் இணைத்திருந்தேன்.
அப்போதைய காவல் ஆணையருடன் ஆலோசித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மூத்த அதிகாரி எனக்கு உறுதியளித்தார். 2024-ம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி Anti-Vice Squad-ஐ சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் இந்த வழக்கு தொடர்பான தகவல்களை என்னிடம் கேட்டார்.
பின்னர் டிசம்பர் 17-ஆம் தேதி அந்த இன்ஸ்பெக்டருக்கு வீடியோ கிளிப்பை அனுப்பினேன். அதன் பிறகு, வீடியோவில் காணப்படும் பாதிக்கப்பட்டவர்களை எனக்குத் தெரியுமா என்று என்னிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது. அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது என்று தெரிவித்தேன். ஆனால் வீரமணியையும் சாந்தியையும் போலீசார் அழைத்து விசாரித்தாலோ அல்லது அவர்களது வீடுகளில் திடீர் சோதனை நடத்தினாலோ, மேலும் ஆதாரங்களைக் கைப்பற்ற முடியும் என்று வலியுறுத்தினேன். அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தகவல் தொடர்பை படிப்படியாக நிறுத்திவிட்டனர்.
இந்த விவகாரத்தில் சிலர் தற்போது என்னைத் தொடர்புபடுத்த முயற்சிப்பதால்தான் இந்தத் தகவல்களை வெளியிடுகிறேன். இந்த விவகாரத்தில் என் மீது அவதூறு பரப்பப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக போலீசாருடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு ரஞ்சன் குமார் கூறியுள்ளார்.
