”துணை முதல்வர்” பதவி.. ’பேரம்’ பேசிய ஆதவ் அர்ஜூனா.. போட்டுடைத்த சீமான்

Published On:

| By Mathi

Seeman Aadhav Arjuna

அதிமுக-தவெக-நாம் தமிழர் கட்சி கூட்டணிக்காக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தம்மிடம் பேசியதாவும் தமக்கு துணை முதல்வர் பதவி தருவதாக கூறியதாவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (செப்டம்பர் 24) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசியதாவது: என்ன நடக்குது இப்போ? இந்தத் தேர்தலையே எடுத்துக்கொள்வோம். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற சத்தியபாமா அவர்கள் எதற்காக பதவி விலகினார்கள் என்று யாராவது ஒருவர் கேட்க வேண்டுமல்லவா?

ADVERTISEMENT

“இதே எம்.எல்.ஏ.தானே நீங்கள்? நாங்கள்தானே ஓட்டுப்போட்டு உங்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்தோம்? நீங்கள் எதற்காக விலகினீர்கள்?” என்று கேட்க வேண்டுமா, இல்லையா?

இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? தேவை என்ன? அதே பதவிக்கு மீண்டும் இதே நிலத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?

ADVERTISEMENT

மக்களை எப்படி நினைக்கிறார்கள் என்றால், “எப்படிப் பார்த்தாலும் ஓட்டுப் போட்டு விடுவார்கள். அதனால் நாம் நிற்போம்” என்று நினைக்கிறார்கள்.

விஜய் வாஷிங் மெஷின் வைத்திருக்கிறாரா?

தலைவர் யார்? ஊழல் சக்தி என்றார். அதைத் தீய சக்தி என்றார். தீய சக்தி என்று சொல்லப்பட்ட கட்சியில் ஓட்டு வாங்கி வென்றவர்களைத்தான் கட்சியில் வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்திருக்கிறார். ஊழல் சக்தி என்று சொல்லப்பட்ட கட்சியில் வென்று வந்தவர்களைத்தான் கூடச் சேர்த்துக்கொண்டு இப்போது தேர்தலைச் சந்திக்கிறார். அவரிடம் போனால் என்ன, வாஷிங் மெஷின் வைத்திருக்கிறாரா? துவைத்துத் தூய்மைப்படுத்திவிடுவாரா? ஏதோ ஒரு கொடுமை.

ADVERTISEMENT

காங்கிரஸ் கூட்டணி பற்றி விஜய்

ஒரு இடத்தில் அவரைப் பாராட்ட வேண்டும். நானும் என் தம்பியும் வாகனத்தில் பயணிக்கிறோம். அவர்தான் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ஓட்டிக்கொண்டே போகும்போது திடீரென்று என்னிடம், “அண்ணா, காங்கிரஸைக் கூட சேர்த்துக்கொள்ளலாமா?” என்று கேட்கிறார்.

நான் திரும்பிப் பார்த்து, “என்னடா கேள்வி கேட்கிறாய்? காங்கிரஸைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று யார் உனக்கு இந்த யோசனையைக் கொடுக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“இவர்கள் சொல்கிறார்கள்” என்றார்.

காங்கிரஸோடு சேர்ந்துகொண்டு என்ன அரசியலை மக்களிடம் முன்னெடுப்பாய்? கச்சத்தீவைப் பேசுவாயா? காவிரி நதி உரிமையைப் பேசுவாயா? மொழிக் கொள்கையைப் பேசுவாயா? ஈழ விடுதலையைப் பேசுவாயா? எதையுமே பேச முடியாது.

ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கம்

அதற்குப் பிறகு அவர் பேசியதில் எனக்கு மிகவும் பிடித்தது ஒன்று. எப்போதும் என் தம்பியை நான் பாராட்டுவேன். ஊழல், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்டார். உண்மையிலேயே அவருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒரு நோக்கம் இருக்கிறது.

ஆனால் அவரே ரூ.100 கோடி வரி பாக்கி தொடர்பாக சிபிஐ வழக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.

பிளாக் டிக்கெட் விற்றவர்கள்

பிளாக் டிக்கெட் விற்றவர்கள் எல்லாம் எங்களிடம் திரள்நிதி பற்றி கேள்வி கேட்கிறார்கள். சரி, நீங்கள் முதலமைச்சராக இல்லாதபோது பிளாக்கில் டிக்கெட் விற்றார்கள். இப்போது முதலமைச்சராகிவிட்டீர்கள். அதற்காவது பிளாக்கில் டிக்கெட் விற்காமல் தடுக்க வேண்டுமல்லவா? எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?

எங்கள் அப்பா நல்லசாமி வந்திருக்கிறார். கள் இறக்குவோர் சங்கத்தின் தலைவர். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளாகப் போராடுகிறார். “கள் உணவின் ஒரு பகுதி அல்ல; அது மது என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்” என்று சொல்கிறார். இதுவரை யாரும் நிரூபித்து அந்த ஒரு கோடியை வாங்கவில்லை.

எங்களுக்கு எல்லாம் வருத்தம் என்னவென்றால், எல்லா விவசாயப் போராட்டங்களிலும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாங்கள் விவசாயிகளோடு நின்றோம். ஆனால் எந்த விவசாயியும் எங்களுக்கு ஓட்டுப் போடவில்லை. விவசாயி சின்னத்துக்கே போடவில்லை. அதுதான் பிரச்சினை.

இப்போது மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை என்றால் விசிலை எடுத்து ஊதிக்கொண்டு படுத்திருங்கள். அது வந்துவிடும். வேறு என்ன செய்வது?

யாருமே போராட்டத்துக்கு அழைப்பது இல்லை

முன்பெல்லாம் பிரச்சனை என்றால் என்னிடம் வந்து மனு கொடுப்பார்கள். என் வீட்டுக்கு வந்து, “அண்ணா, இதற்கு ஒரு அறிவிப்பு கொடுங்கள்; போராட்டம் பண்ணுங்கள்” என்பார்கள். இப்போது யாரும் வருவதில்லை.

செவிலியர் போராட்டமா, மருத்துவர் போராட்டமா, ஆசிரியர் போராட்டமா, மீனவர் போராட்டமா, மாணவர் போராட்டமா, எல்லாவற்றுக்கும் நின்றேன். ஆனால் நீங்கள் யாரும் என் கூட நிற்கவில்லை. அதுதான் பிரச்சனை. பிரச்சனையைத் தந்தவர்களுக்கே திரும்பத் திரும்ப நீங்கள் வலிமையைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

ஆனாலும் தொடர்ந்து நாங்கள் போராடி வருவதற்குக் காரணம், இந்த நிலத்தில் எப்படியாவது ஒரு மாற்றத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று நினைப்பதுதான்.

சட்டம் ஒழுங்குக்கும் சர்க்காரியா கமிஷனுக்கும் என்ன தொடர்பு?

சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று கேள்வி கேட்டால், மூன்று நாள் கழித்து வந்து எழுதிப் படித்து பதில் சொல்லக்கூடாது. சட்டம் ஒழுங்குக்கும் சர்க்காரியா கமிஷனுக்கும் மிசாவுக்கும் என்ன சம்பந்தம்?

அங்கங்கே கொலைகள், வன்புணர்வுக் கொலைகள், காவல்துறை மரணங்கள், காவல் நிலைய மரணங்கள் நிகழ்கின்றன என்றால் அரசு அதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

“இது தொடக்க நிலைதான். போகப்போக இந்தக் குற்றங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும், தடுக்கப்படும். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு இதைப் பதிலாகக் கொடுக்கிறேன். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது போகப்போக குற்றங்கள் அதிகரித்தன. எங்கள் ஆட்சியில் போகப்போக குற்றங்களைக் குறைப்போம் என்ற உறுதியைத் தருகிறேன்” என்று சொல்ல வேண்டும். இவ்வளவுதான் பேச வேண்டும்.

சட்டசபைக்குப் போய்விட்டு “காட்டு, காட்டு” என்று சினிமா பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்க முடியாது.

5 ஆண்டுகால ஆட்சியில் அமைச்சர்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கான கோப்புகள் இருக்கின்றன என்றால் அதை எடுத்து நடவடிக்கை எடுப்பார் என்று பார்த்தால், நாம் பிறப்பதற்கு முன்னால் இருந்த சர்க்காரியா கமிஷனுக்குப் போய்விட்டார்.

நாங்கள் 15 ஆண்டுகளாக இந்த திராவிடக் கட்சிகளுக்கு எதிரான அரசியலைக் கட்டமைத்து வைத்தோம். அவர் வந்து அறுவடை செய்துவிட்டார். சரி தம்பி, ஆட்சியில் நீங்களும் வாழுங்கள்; நானும் வாழ்கிறேன். ஏதாவது ஒன்று நடக்கட்டும்.

ஆனால் என்றைக்காவது சாலையில் இறங்கி “தண்ணீர் இல்லை, கரண்ட் இல்லை” என்று போராட வேண்டிய நிலை வந்தால், நாங்கள் விசில் ஊதிக்கொண்டே போய்க்கொண்டிருப்போம்.

துணை முதல்வர் பதவி பேரம்

இப்போது இரட்டை இலையில் நின்று வென்றவர்கள் விசில் சின்னத்தில் நிற்கிறார்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தல் ஒரு தனி மனிதருடைய சொந்த விருப்பத்துக்காக நடக்கிறதா?

அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருக்கும் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிற்பவருக்கும் என்ன வித்தியாசம்? அங்கே போய் எங்களுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?

இந்த மண்ணில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இவர்கள் நிகழ்த்தப் போவதும் இல்லை என்று நான் சொல்கிறேன். ஒரே ஒரு மாற்றம்தான்-வேட்டி, சட்டைக்குப் பதிலாக கோட், சூட்.

திடீர்னு ஆதவ் அர்ஜூனா என்னைக் கூப்பிட்டுப் பேசியது என்ன தெரியுமா? “எடப்பாடி ஐயாவோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும். நான் துணை முதலமைச்சர்”- அப்படித்தான் பேசினார். அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றவுடன், உங்கள் அண்ணியைக் கூப்பிட்டு வேளாண் துறை அமைச்சர் ஆக்கிவிடலாம் என்று பேசுகிறார்கள்.

டேய், யார்றா நீங்க? ஆட்டுக்குக்கூட கொஞ்சம் அதிகமாக மூளை இருக்கிறது. இந்த தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறவனுக்கு ஒரு இழவும் கிடையாது. ஒன்றும் கிடையாது. இவ்வாறு சீமான் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share