தமிழக டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அடுத்தடுத்து 2 நிபந்தனைக் கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியின் அலங்கோலத்தை காட்டுகிறது என திமுக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து திமுக தனது எக்ஸ் பதிவில், “மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு த.வெ.க எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி விசாரணை விவரம் கோரிய தேசிய மகளிர் ஆணையம் மீண்டும் ஒரு முறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருப்பது தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாக சீர்கேட்டை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.
நாகர்கோயில் ரயில்வே சந்திப்பில் நின்ற ரயிலில், பாலியல் கொடூரத்தால் கொலைக்குள்ளாகி அழுகிய நிலையில் கிடந்த பெண் பற்றிய பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக, ஆணையத்தின் தலைவர் திருமதி. விஜயா ரஹத்கர் அவர்கள் தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி, 7 நாட்களுக்குள் இது தொடர்பான முழுமையான நடவடிக்கை அறிக்கையை அனுப்பக் கோரியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தேசிய மகளிர் ஆணையத் தலைவரின் கடிதம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு முறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நிபந்தனைக் கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியின் அலங்கோலத்தையும் தமிழ்நாட்டில் பெண்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலையையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.









