திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் நவம்பர் 24-ந் தேதி மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வு நவம்பர் 20-ந் தேதி இடைக்கால அனுமதி வழங்கியது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பதை உச்சநீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, நவம்பர் 24-ந் தேதி அந்தத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது எப்படி?
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பே, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் கேட்ட அனுமதியை 2026-ஆம் ஆண்டுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது.
ஒருமுறை அந்தத் தூணில் தீபம் ஏற்றப்பட்டுவிட்டால், அதன் பின்னர் நீதிமன்றம் அனுமதியை ரத்து செய்தாலும் நடந்ததை மாற்ற முடியாது. எனவே, தீபம் ஏற்றுவதற்கு முன்பாகவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அங்கு தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டாலும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஆனால், சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதிப்பது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும். மேலும், கோவிலில் தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றுவது குறித்து முடிவெடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் தனி நடைமுறைகள் உள்ளன. இந்தச் சட்டப்பூர்வ நடைமுறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, நவம்பர் 24-ந் தேதி தீபம் ஏற்றுவதற்கு முன்பாகவே சீராய்வு மனுவை விசாரித்து, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய ஒருநாள் அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். பிரதான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு கோரியுள்ளது.









