‘தீய சக்திகளின் தூண்டுதல்’.. மீனவர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்

By Pandeeswari Gurusamy

|

Published on 22 Nov 2026, 1:05 PM

ஒரு சில தீய சக்திகளின் தூண்டுதலால் காசிமேட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஸ்ரீநாத் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், முரசு புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காசிமேட்டில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக, காசிமேடு மீன்பிடித் துறைமுக நுழைவாயிலில் நேற்று விசைப்படகுகளை நிறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததோடு, அமைச்சர் நேரில் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றும் 4ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதனால் காசிமேடு மீன் சந்தை இன்று வெறிச்சோரி காணப்பட்டது.

இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் நிதி அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் மீனவர் சங்க பிரதிநிதிகள் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், “காசிமேட்டில் மீனவர்கள் சிறு சிறு போராட்டங்களை நடத்தி வருவதாகக் கேள்விப்பட்டேன். இது சில தீய சக்திகளின் தூண்டுதலால் நடைபெறுகிறது. இது மீனவர்களுக்கும் நன்றாகத் தெரியும். முதலமைச்சரும், மீன்வளத் துறையும் ஆந்திர மாநில அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; தீய சக்திகளின் முயற்சி ஒருபோதும் செல்லுபடியாகாது” என்று தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மரிய வில்சன் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் இது தீயசக்திகளின் சதி என கருத்து தெரிவித்துள்ளது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel