உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் முருக பக்தர்களுக்கு எதிராக சதி செய்யும் எண்ணத்தை ஜோசப் விஜய் அரசு கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் , உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு நவம்பர் 20, 2026 அன்று இடைக்கால உத்தரவில் வரும் நவம்பர் 24, 2026 கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் சம்பந்தப்பட்ட தூணில் விளக்கேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதே சமயம் 2025 டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை வித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்; உரிய முடிவு எடுக்கப்படும்” என தெரவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றமே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், அதனை உடனடியாகச் செயல்படுத்துவதை விடுத்து, “சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கும் அப்பட்டமான அத்துமீறலாகும். கோயில்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் இரவோடு இரவாகப் படை திரட்டிச் சென்று இடித்துத் தள்ளும் விஜய் அரசு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இழுத்தடிப்பது ஏன்? இந்த இரட்டை வேடம் எதற்காக? முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, கோடிக்கணக்கான முருக பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியை மதித்துச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, அதை முடக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் நிர்மல்குமார் போன்றவர்களை முன்னிறுத்திச் சாக்குப்போக்குகள் சொல்லித் தப்பிக்கப் பார்ப்பதை விடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி எவ்விதத் தடையுமின்றித் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தவெக அரசு உடனடியாகச் செய்து தர வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீபம் ஏற்றுவதைத் தவிர வேறு எந்த மாற்று யோசனைக்கும் எள்ளளவும் இடமில்லை! சிறுபான்மையினரைத் தாஜா செய்யும் நோக்கில், கோடிக்கணக்கான முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளைச் சீண்டிப் பார்த்துத் தீபம் ஏற்றப்படாமல் தடுக்கப்பட்டால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் மிகக் கடுமையான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்குத் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.









