“தொண்டன் முடிவெடுத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்” – ஈபிஎஸ்-க்கு எஸ்.பி. வேலுமணி பதிலடி!

By Kavi

|

Published on 22 Nov 2026, 7:42 AM

“தொண்டன் முடிவெடுத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்” என்று எஸ்.பி. வேலுமணி, தனது கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று (நவம்பர் 21) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ”2 கோடி அ.தி.மு.க நிர்வாகிகளில் ஒரு ஆள் தான் வேலுமணி.. அவர் பேச்சை கேட்டுட்டு இப்படியெல்லாம் கேள்வி கேக்காதீங்க” என்று கூறினார். 

ADVERTISEMENT

அதாவது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒன்றிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பான கேள்விக்குதான் ஈபிஎஸ் இவ்வாறு பதிலளித்தார். 

இந்தசூழலில், நேற்றிரவு அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  ”2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி, ”என்னை உதாசீனப்படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ?

ADVERTISEMENT

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.

என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.

ADVERTISEMENT

இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.

கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.

ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு.

கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்!

“இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள்.

வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள்.

அதேபோல், இன்றைக்கு அமைச்சராக இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், பேரவைத் தலைவராக உள்ள ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.

இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும்.

பொதுச் செயலாளரிம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

“தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel