டிஜிட்டல் திண்ணை: புறக்கணிப்பு.. அவமதிப்பு.. விஜய் ‘சர்க்காரில்’ திருமா.. வைகோ.. நிலை என்ன?

By Mathi

|

Published on 21 Nov 2026, 3:38 PM

Vaiko Vijay Thirumavalavan

வைஃபை ஆன் செய்ததும், “ எங்கே செல்லும் இந்த பாதை… யாரோ யாரோ அறிவார்?… யாரோ உண்மை அறிவார்?”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

ப்ரோ.. ரொம்ப சோகமா இருக்கீங்களேன்னு கேட்கலாம்.. ஆனா…

ஆமாங்க ப்ரோ.. நேரா விஷயத்துக்குதான் வர்றேன்.. பாட்டு கச்சேரியை அப்புறமா பார்க்கலாம்..

ADVERTISEMENT

தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் எம்.எல்.ஏ. ஆதரவு இருக்குது.. எம்.எல்.ஏ.க்களே இல்லாத வைகோவின் மதிமுகவும் விஜய் ஆட்சியை ஆதரிக்குது…

6 மாதத்தை கடந்திருக்கும் விஜய்யின் கூட்டணி ஆட்சியில விசிக, மதிமுகவை எப்படியெல்லாம் நடத்துறாங்கன்னு ஒரு ரவுண்ட் விசாரிச்சோம் ப்ரோ..

ADVERTISEMENT

இதை பத்தி தவெக வட்டாரத்துல அமைச்சர்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட விசாரிச்சப்ப, “ ஆரம்பத்துல மதிமுகவோட 2 எம்.எல்.ஏ.க்கள் சப்போர்ட் எங்களுக்கு ரொம்பவே தேவையா இருந்துச்சு.. அப்ப ஆதவ் அர்ஜூனாதான் வைகோவை சந்திச்சு பேசுனார்.. அந்த சந்திப்பில, “எங்க எம்.எல்.ஏக்கள் 2 பேருமே என் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டாங்க.. நிச்சயம் நம்ம ஆட்சிக்குதான் ஆதரவு தருவாங்க”ன்னு வாக்குறுதி கொடுத்திருந்தார்.. அதே மாதிரி ஜான் ஆரோக்கியசாமியும் வைகோகிட்ட பேசியிருந்தார்.. அவருகிட்டேயும் வைகோ இதே மாதிரி பிராமிஸ் செஞ்சிருந்தார்.. இதை நம்பித்தான் சிஎம் விஜய்யும் வைகோவை சந்திக்க வீட்டுக்குப் போனார்.. வைகோவும் வழக்கத்துக்கு மாறாக ரொம்பவே அதீதமான உணர்ச்சியை அன்னைக்கு வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனா மதிமுக எம்.எல்.ஏ.க்கல் 2 பேரும் வைகோ பேச்சை கேட்கலை.. அப்படிங்கிறது பின்னாடி தெரியவந்தது.. அதோட திமுகவுக்கே 2 பேரும் போயிட்டாங்க.. இருந்தாலும் கூட வைகோ சீனியர் லீடர் அப்படிங்கிறதால ரொம்பவே மரியாதை வைச்சிருந்தோம்..

ADVERTISEMENT

வைகோவும் ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, ராஜ்மோகன்னு பெரும்பாலான மினிஸ்டர்ஸ்க்கு திடீர்னு போனடிப்பார்.. மணிக்கணக்கில பேசிட்டு, “எங்க ஊரில அந்த தெருவில அந்த வீட்டுக்கு பிரச்சனை”ன்னு ரொம்பவே லோக்கல் லெவலில் எல்லாம் கோரிக்கை வைப்பார்.. இந்த கோரிக்கைக்கா மணிக்கணக்கில பேசுனாரு?ன்னு மினிஸ்டர்ஸும் நினைச்சாலும் சீனியர் லீடர்.. அப்படிங்கிற மரியாதையில அமைதியாகத்தான் இருந்தாங்க.. ஒரு கட்டத்துல வைகோ தொடர்ந்து இதே பாணியில போனடிச்சு பேசப் போய், பெரும்பாலான மினிஸ்டர்ஸ் அவர் போனையே அட்டெண்ட் பண்றது இல்லை.. இப்போதைக்கு வைகோ போனை அட்டெண்ட் பண்ற ஒரே மினிஸ்டர் ராஜ்மோகன் மட்டும்தான்.. சிஎம்மை பொறுத்தவரைக்கும் வைகோ மேல எப்பவுமே ரொம்ப மரியாதை வைக்கிறவர்தான்.. அதனாலதான் வி.எஸ்.பாபு இறுதி ஊர்வலத்துல கூட வைகோவை பக்கத்துல நிக்க வெச்சிருந்தார் சிஎம் விஜய்.. ஆனா பொது இடம்னு கூட பார்க்காம அமைச்சர் பார்த்திபனை கையை நீட்டி மிரட்டி வைகோ பேசிட்டார்… இதை சிஎம் விஜய்யால ஏத்துக்கவே முடியலை.. என்ன இப்படி பொதுஇடம், இறுதி மரியாதை செய்யுற இடம்னு கூட பார்க்காம, “ஈகோ”வை காட்டிகிட்டு இருக்கிறாரேன்னு சிஎம் விஜய்யும்ம் ரொம்ப அப்செட் ”ன்னுதான் சொல்றாங்க ப்ரோ..

ஆனாலும் வைகோ, இதை எல்லாம் காட்டிக்காம “இடியே ஆனாலும்… தாங்கி கொள்ளும் இதயம்”னு ரொம்பவே தவெக கவர்மெண்ட்டை தாங்கி பிடிக்கிறாரே.. திமுகவை முன்னைவிட ரொம்பவே ஆக்ரோஷமா அட்டாக் பண்றாரே.. ப்ரோ..

ஆமாங்க ப்ரோ.. இதை பத்தி வைகோவுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “நீங்க சொல்ற மாதிரி வைகோவை மினிஸ்டர்ஸ் கண்டுக்கலைங்கிற வருத்தம் இருக்கு.. இப்ப கூட நெல்லையில ஒரு சம்பவம் நடந்தது.. வைகோவின் வலதுகரமான செந்தூர்பாண்டியன் மகள் திருமணம் நெல்லையில நடந்தது.. அந்த கல்யாணத்துக்கு கடையநல்லூர் திமு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வந்திருந்தார்.. அவரை பார்த்ததும் வைகோ செம்ம கோபமாகிட்டார்..

உடனே செந்தூர் பாண்டியனை கூப்பிட்டு, “இவரை எல்லாம் நம்பித்தானே விஜய்க்கு வாக்கு கொடுத்தேன்.. ஆனா நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டு திமுகவுக்கு போயிட்டார்.. இப்ப ஒரு பயலும் என்னை மதிக்கலை.. என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டவரை எல்லாம் நீ ஏன் கல்யாணத்துக்கு கூப்பிட்ட?”ன்னு வறுத்தெடுத்துட்டார் வைகோ. இதுக்கு செந்தூர் பாண்டியனோ, “அண்ணே அவர் எனக்கு சொந்தக்காரர்”னு சொல்லிப் பார்த்தார்.. ஆனாலும் வைகோவின் கோபம் அடங்கவே இல்லை.. இவ்வளவு கோபம் இருந்தாலும் தாங்கிட்டுதான் இருக்கிறார்.

அதனாலதான் அதாவது தவெக மினிஸ்டர்ஸ் ஒதுக்கிறாங்களே… இப்படியே போனா நம்மை யாரும் கண்டுக்காம போயிடுவாங்களோன்னுதான் வைகோ வழக்கத்தைவிடவே திமுகவை ரொம்பவே அட்டாக் பண்றாரு.. அப்பவாச்சும் சிஎம் விஜய், “அண்ணன் நமக்காக ரொம்பவே திமுகவை அட்டாக் பண்றாரு”ன்னு ரொம்ப நெருக்கமா வெச்சுக்குறவார் அப்படிங்கிற எதிர்பார்ப்புதான்.

இப்ப கூட ஒரு கூட்டணி தலைவராக வி.எஸ். பாபு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திட்டு வைகோ திரும்ப வந்திருக்கலாம்.. ஆனா சிஎம் விஜய் வர்றாருன்னு தெரிஞ்சே அந்த டைம்-க்கு வைகோ போனார்.. விஜய்யும் வேற வழியே இல்லாம சீனியர் லீடராச்சேன்னு வைகோவை கூடவே நிற்க வெச்சுகிட்டார்.. வைகோவே வாலண்டியராக விஜய்கூட நிற்கிறார்.. இதை புரிஞ்சுகொள்ளாத அமைச்சர் பார்த்திபன், வைகோவை தடுத்தா எப்படி இருக்கும்? அந்த கோபத்தைதான் கையை நீட்டி அமைச்சர் பார்த்திபன்கிட்ட வைகோ காட்டினாரு..

இப்படி எல்லாம் ரொம்பவே டென்ஷனில் இருக்கிற வைகோகிட்ட கோவை பத்திரிகையாளர் சரமாரியா கேள்வி கேட்க, அங்கே ரொம்பவே சூடாகிட்டாரு.. அப்ப கூட, “உங்களுக்கு மனசாட்சியே இல்லாம கேள்வி கேட்கிறீங்களே? ராத்திரி எல்லாம் நல்லா தூங்குவீங்களா? திமுக ஏஜெண்டுகளா?” என்றெல்லாம் தன்னிலை இழந்து கையை உயர்த்தி நாக்கை துறுத்தி கண்களை உருட்டி சவுண்டு அதிகமாக்கி ரொம்பவே உக்கிரத்தை காட்டுனார்.. “ன்னு சொன்னாங்க ப்ரோ..

எனக்கு என்னமோ அப்படியே ”அன்றைய” விஜயகாந்த் நடந்துகிட்ட மாதிரியே இருக்குதுங்க ப்ரோ.. சரிங்க திருமாவளவனை எப்படி டீல் செய்யுதாம் தவெக?

ம்.. நல்ல கேள்விதான்.. விசிகவோட வன்னி அரசு அமைச்சரான பிறகு தவெக ஆட்சியை ரொம்பவே ஓவரா ஆதரிச்சு பேசுறாரு.. அதுவும் விஜய்யோட சினிமா பாட்டை எல்லாம் ஆட்சி நிர்வாகத்துக்கு ஒப்பிட்டு பேசுனது எல்லாம் ஓவர்னு விமர்சனமும் வந்தது..

ஆனா திருமாவளவன் மனநிலையே வேறமாதிரியாம் ப்ரோ.. இதை பத்தி விசிக சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, “அண்மையில எங்க கட்சி நிர்வாகிகள்கிட்ட கவர்மெண்ட் பத்தி பேச்சு வந்தது… அப்ப, “கலைஞர் ஆட்சியிலும் ஸ்டாலின் ஆட்சியிலும் நாம நிறைய பேருக்கு சிபாரிசு செஞ்சு லெட்டர் கொடுப்போம்.. அதுல நிறைவேற்றக் கூடிய சாத்தியமானதை செஞ்சு கொடுப்பாங்க.. அப்படி முடியாத விஷயங்களை பத்தி நம்மகிட்ட கலந்தும் பேசுவாங்க..

அதேமாதிரிதான் இவங்களும் நடந்துக்குவாங்க.. இன்னும் சொல்லப் போனா இந்த ஆட்சிக்கு நம்ம 2 எம்.எல்.ஏ.க்கள் முக்கியம்.. அமைச்சரவையிலும் இருக்கிறோம்.. அதனால நிச்சயம் நம்ம பரிந்துரைகளுக்கு மரியாதை இருக்கும்னு நினைச்சுதான் நானும் கட்சிகாரங்களுக்கு வேலைவாய்ப்பு, பட்டா, வீட்டு மனை பிரச்சனைக்கு லெட்டர் பேடில கையெழுத்து போட்டு கொடுத்து அனுப்பறேன்.. ஆனா இதுவரைக்கும் ஒரு லெட்டருக்கு கூட மரியாதை இல்லை அப்படிங்கிறதுதான் நிஜம்.. நாம செஞ்சு கொடுக்க சொன்ன ஒரு வேலையை கூட எந்த ஒரு மினிஸ்டருமே செஞ்சு தரலை.. அட்லீஸ் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலாவது நம்ம ரெக்கமெண்டேசனை ஏத்துப்பாங்கன்னு நினைச்சேன்.. ஆனா ஒருத்தருக்கு கூட அரசு வழக்கறிஞர் போஸ்டிங் கொடுக்கலை.. நம்ம ஆதரவுல நடக்கிற ஆட்சின்னுதான் பேரு.. ஆனா நம்மை ஒருபொருட்டா கூட மதிக்கலையே”ன்னு ரொம்ப வேதனைப்பட்டார்..

இப்ப கூட திருப்பரங்குன்றம் விஷயத்துல கவர்மெண்ட்டுக்கு நெருக்கடி வராத ஒரு நிலையைத்தான் எடுக்க நினைச்சார் திருமாவளவன்.. ஆனா அது ரொம்பவே பேக் ஃபயராகிடுச்சு.. அதனால திரும்பவும் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு.. நாங்க விசிகவும் திருமாவளவனும் இப்படி ஒவ்வொரு விஷயமாக தவெக அரசுக்கு சாதகமாக இருக்கனும்னு நினைக்கிறோம்.. ஆனா தவெக அமைச்சர்களும் சரி.. நிர்வாகிகளும் சரி.. நாங்க கூட இருக்கிறோம் அப்படிங்கிறதை பத்தியே கவலைப்பட்டதே இல்லை.. அதுதான் திருமாவளவனுக்கு ரொம்ப வேதனை”ன்னு ஷேர் பண்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel